பாய்ச்சிகையால் பட்ட அடி
பூமிஞ்சயன் அனுப்பிய தூதர்கள் விராடனின் அரண்மணைக்கு வந்து சேர்ந்தார்கள். பூமிஞ்சயன் என்றுதான் வியாச பாரதம் உத்தரகுமாரனைப் பெரும்பாலும் அழைக்கிறது. உத்தரகுமாரன் என்ற பெயரும் ஆங்காங்கே தென்படுகிறது. விராடனுடைய மகள் பெயர் உத்தரகுமாரி, மகன் பெயர் உத்தரகுமாரன் என்ற சௌகரியத்தின் காரணமாக நாம் இந்தப் பெயர்களைப் பயன்படுத்திக் கொண்டாலும் இவன் வியாச பாரதத்தில் பெரும்பான்மையும் பூமிஞ்சயன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறான் என்பதையும் சொல்லவேண்டும் அல்லவா? அந்தத் தூதர்கள், 'அரசே! நம் இளவரசர் உத்தரகுமாரர் கௌரவர்களை வென்று, பசுக்கூட்டங்களுடனும் தனது சாரதியுடனும் திரும்பிக்கொண்டிருக்கிறார்' என்றார்கள். இதைக் கேட்ட (கங்கர் வேடத்திலிருந்த) யுதிஷ்டிரர், 'அரசே! நமக்கு நல்லகாலம் வந்திருக்கிறது. கௌரவர்களைத் தனி ஒருவனாக நம் இளவரசர் வென்றதைக் கேட்டு நான் ஆச்சரியப்படவில்லை ஏனெனில் அவருக்குத் துணையாக நம் பிருகன்னளை சென்றிருக்கிறாள். தேர்ச் சாரத்தியத்தில் அவளுக்கு இணையாக, தேவேந்திரனுடைய சாரதியான மாதலியையும், கிருஷ்ணனுடைய சாரதியான தாருகனையும்கூடச் சொல்ல முடியாது.' என்றார்.

விராடனுக்கு இவர் மீண்டும் மீண்டும் பிருகன்னளையைப் பற்றி உயர்வாகச் சொல்லிக்கொண்டிருப்பது பிடிக்கவில்லை என்றாலும், தன் மகன் உத்தரன், மிகப்பெரிய கௌரவ சேனையைத் தனியொருவனாகச் சென்று வென்ற பெருமிதம் அதற்குமேல் இருந்த காரணத்தால், அதை கவனிக்காதவன் போல, 'கங்கரே! நீர் என்னுடன் அந்தப்புரத்துக்கு வந்து சூதாட வேண்டும்' என்றான். கங்கராக இருந்த யுதிஷ்டிரர் இதற்குச் சம்மதிக்கவில்லை. மறுத்தார். 'அரசே! மகிழ்ச்சியாக இருக்கும்போது சூதாடுவது நல்லதில்லை. இதற்குமுன் யுதிஷ்டிரர் சூதாடித் தோற்றது உமக்குத் தெரியுமல்லவா?' என்று மறுத்தார். விராடனோ, அவர் சொன்னதைக் காதில் வாங்கிக்கொள்ளும் மனநிலையில் இல்லை. 'அந்தணரே! நான் உங்களோடு சூதாடுவதையே இப்போது பெரிதும் விரும்புகிறேன். நான் அளவற்ற சந்தோஷத்தில் இருக்கிறேன். நான் அஞ்சத்தக்க திரிகர்த்தர்களை வென்றேன் என்றால், என்மகன், மிகப்பெரிய ஆற்றல் வாய்ந்த கௌரவ சேனையை வென்றிருக்கிறான். வாருங்கள். நாம் அந்தப்புரம் சென்று சூதாடுவோம். சைரந்திரி! நீ அந்தப்புரத்துக்குச் சென்று ஆசனத்தை எடுத்துப் போடு. பாய்ச்சிகைகளைக் கொண்டுவா. விசிறியை எடுத்து வீசு' என்றான். யுதிஷ்டிரர், சூதாட மனமின்றி இருந்தபோதும், விராடனுடைய வற்புறுத்தலுக்கு இணங்கினார். விராடன், கங்கரை நோக்கி, 'சிறந்த வில்லாளிகளான கௌரவர்களை என் மகன் தனியொருவனாக வென்றிருக்கிறான்.' என்று பெருமிதப்பட்டான் உடனே கங்கர் வடிவிலிருந்த யுதிஷ்டிரர், 'அரசே! அதிர்ஷ்டத்தால் உம் பசுக்கள் மீட்கப்பட்டன. இருப்பினும் உத்தரன் கௌரவர்களை வென்றிருப்பான் என்று தோன்றவில்லை. அப்படி வென்றிருந்தால் அது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். இருந்தாலும், பிருகன்னளையைச் சாரதியாய்க் கொண்டுபோயிருக்கும்போது இது நடக்கும் சாத்தியம் இருக்கிறது. பிருகன்னளையைச் சாரதியாய்க் கொண்டவன் யாரையும் வெல்வான்' என்றார்.

இந்தப் பேச்சு, திரும்பத் திரும்ப வளர்ந்துகொண்டே இருந்தது. விராடனுக்குத்தான் தன்னிடம் பேசிக்கொண்டிருப்பவர் யுதிஷ்டிரர் என்பது தெரியாதே! தெரிந்திருந்தால் கோபப்பட்டிருக்க மாட்டான். தெரியாத காரணத்தால் கோபம் தலைக்கேறியது. தன் கையிலிருந்த பாய்ச்சிகைக் காயால், எதிரிலிருந்த தர்மபுத்திரரின் முகத்தில் ஓங்கி அடித்தான். தர்மபுத்திரரின் மூக்கில் காயம் பட்டது. ரத்தம் பெருகியது. உடனே, அருகிலிருந்த சைரந்திரியான பாஞ்சாலி ஒரு பொன்மயமான பாத்திரத்தில் நீர் முகந்து, அந்த ரத்தம் தரையில் சிந்தாமல் ஏந்திக்கொண்டாள். இதைப் பார்த்த விராடனுக்குத் திகைப்பேற்பட்டது. 'என்ன காரணத்தால் இவ்வாறு செய்கிறாய்?' என்று அவன் சைரந்திரியிடம் கேட்டான். 'இவருடைய ரத்தம் பூமியில் சிந்தக்கூடாது. அப்படிச் சிந்தினால் உமக்குக் கேடு உண்டாகும். இந்த கங்கருக்குத் துன்பம் செய்பவர்களுடைய நாட்டில் பஞ்சம் ஏற்படும்' என்றாள்.

இந்த நேரத்தில் உத்தரகுமாரனும் பிருகன்னளையும் அங்கே வந்தார்கள். அதற்கு முன்னால் உத்தரனுடைய தூதர்கள் வந்து, 'அரசே! தங்கள் குமாரர் தன்னுடைய சாரதியுடன் வாசலில் உங்களிடம் ஆசி பெறுவதற்காகக் காத்திருக்கிறார்' என்று தெரிவித்தார்கள். 'இருவரையும் வரச்சொல்' என்றான் விராடன். அந்த நேரத்தில் யுதிஷ்டிரர் குறுக்கிட்டு, 'உத்தரன் மட்டும் இங்கே வரட்டும். பிருகன்னளை வரவேண்டாம். போர்க் காரணமில்லாமல் வேறு சந்தர்ப்பங்களில் எனக்குத் துன்பம் செய்பவர்களை அவள் கோபம்கொண்டு கொன்றாலும் கொன்றுவிடுவாள். எனவே பிருகன்னளை அங்கேயே நிற்கட்டும். உத்தரன் மட்டும் இங்கே வரட்டும்' என்றார். பின்னர் அவர் விராட மன்னனுக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் அருகில் அமர்ந்துகொண்டார். அதன்பின்னர் உத்தரகுமாரன் உள்ளே நுழைந்தான். தன் தந்தையின் பாதங்களில் விழுந்து வணங்கினான். திரும்பிப் பார்க்கும்போது, அங்கே அமர்ந்திருந்த கங்கரின் மூக்கிலிருந்த காயத்திலிருந்து ரத்தம் பெருகுவதைக் கண்டு பதறினான். அங்கே கங்கரின் வடிவில் இருப்பவர் யுதிஷ்டிரர் என்று அர்ஜுனன்தான் அவனுக்குச் சொல்லியிருந்தானே! அவன் விராடனை நோக்கி, 'அப்பா! இவரை அடித்தது யார்? இவர் வணங்கத் தக்கவர். இவரைத் துனபுறுத்தியவர் யாராக இருந்தாலும், கண்டிக்கத் தக்கவரே' என்றான். விராடன் சிரித்துக்கொண்டு, 'நான்தான் கையிலிருந்த பாய்ச்சிகையால் அடித்தேன். நாங்கள் இருவரும் என்னுடைய மகிழ்ச்சியைக் கொண்டாட சூதாடிக் கொண்டிருந்தோம். உன்னுடைய வெற்றியைப்பற்றி எண்ணாமல், இவர் அந்த பிருகன்னளையையே உயர்வாகப் பேசிக்கொண்டிருந்தார். எனவேதான் அடித்தேன்' என்றான்.

இதைக் கேட்ட உத்தரன், 'அப்பா! பசுக்கூட்டங்களை மீட்டது நானல்ல. போர்க்களத்தில் ஒரு தேவகுமாரர் தோன்றினார். அவர்தான் கௌரவர்களுடன் போரிட்டு வென்றார். இந்த மேலாடைகளை நான் கவர்ந்ததும் அவரால் நடந்ததுதான்' என்றான். உடனே விராடன் 'மகனே! அந்த தேவகுமாரன் எங்கே? அவரை நான் வணங்கவேண்டுமே' என்றான். உத்தரன், 'அப்பா! அவர் களத்திலிருந்து மறைந்துவிட்டார். இன்றோ நாளையோ அவர் தோன்றுவார்' என்று பதில் சொன்னான். பிருகன்னளை வடிவத்தில் இருப்பது அர்ஜுனன்தான் என்பதை விராடன் இப்போதும் உணரவில்லை.

அர்ஜுனன் அங்கிருந்து பீமனிடம் சென்றான். 'அண்ணா! நம்முடைய தமையனார் ஏன் முகத்தைத் துணியால் மூடிக் கொண்டிருக்கிறார்? என்னிடமும் ஒன்றும் பேசவில்லையே. என்ன காரணம்?' என்று கேட்டான். பீமனும் அப்போதுதான் யுதிஷ்டிரரை கவனித்தான். இருவரும் சந்தேகப் பார்வை பார்ப்பதை கவனித்த யுதிஷ்டிரர், 'அர்ஜுனா! உன்னை நான் புகழ்ந்து பேசினேன். அதனால் கோபம்கொண்ட விராட மன்னர் என்னை அடித்துக் காயப்படுத்திவிட்டார். என்னுடைய ரத்தம் பூமியில் விழக்கூடாது என்பதனால் என் முகத்தைத் துணியால் மூடியிருக்கிறேன். நீங்கள் இருவரும இதன்பொருட்டுக் கோபப்படாதீர்கள்' என்றார். இதைக் கேட்டு பீமனும் அர்ஜுனனும் சமாதனமடைந்தனர். அந்த இரவு முழுவதும் பலவற்றை ஆலோசித்தவாறே அங்கே தங்கியிருந்தனர். விராட மன்னனும் உத்தரனும் மிக்க மகிழ்ச்சியுடன் அந்த இரவைக் கழித்தார்கள்.

இவையெல்லாம் நடந்த மூன்றாம் நாள், பாண்டவர்கள் அனைவரும் நீராடி, அலங்கரித்துக்கொண்டு, விராடனுடைய சபையில் புகுந்து, மன்னர்களுக்குரிய ஆசனங்களில் அமர்ந்துகொண்டார்கள். இதைக்கண்ட விராடன் வியப்புற்றான். 'கங்கரே! இது என்ன? சூதாடத் தெரிந்தவர் என்பதால் உங்களை இந்தச் சபையில் நியமித்தேன். ஆனால், இன்று நீர் அரசனைப்போல அலங்கரித்துக்கொண்டு, ராஜபீடத்தில் அமர்வது முறையா?' என்று கேட்டான். அதற்கு அர்ஜுனன் சிரித்துக்கொண்டே பதில் சொன்னான். 'அரசரே! இவர் இந்திரனுடைய பீடத்தில் அமரத் தகுந்தவர். வீரர்களுள் சிறந்தவர் தர்மத்தின்படி நடப்பவர். பாண்டவர்களுள் மூத்தவர். குடிமக்களை அன்புடன் நடத்தியவர். இத்தகையவர், அரசபீடத்தில் அமர்வது எப்படித் தவறாகும்?' என்று கேட்டான். ஆச்சரியமடைந்த விராடன், 'இவர் தர்மர் என்றால், அர்ஜுனன் எங்கே? பீமன் எங்கே, நகுல சகதேவர்கள் எங்கே? திரௌபதி எங்கே? இவற்றுக்கெல்லாம் விடை கூறுங்கள்' என்று படபடப்புடன் கேட்டான். அர்ஜுனன் மீண்டும் புன்னகையுடன், 'அரசே! மடைப்பள்ளியில் சமையல் செய்த வல்லபன்தான் பீமன். நூற்றெட்டு கீசகர்களின் வதத்துக்குக் காரணமான சைரந்திரிதான் திரௌபதி' என்று விளக்கினான். பீமன், 'அரசே! வில்லாளிகளில் சிறந்த அர்ஜுனன் இவன்தான். இவன்தான் காண்டவவனத்தை தகனம் செய்தவன். உம்முடைய அரண்மனையில் பிருகன்ளை என்ற பெயருடன வசித்தது இந்த அர்ஜுனனே. எங்களுக்கு விதிக்கப்பட்ட அக்ஞாதவாச காலத்தை உம் அரண்மனையில் மறைவாகக் கழித்தோம். கர்ப்பத்தில் இருக்கும் சிசுவைப்போல இங்கே பத்திரமாக வாழ்ந்தோம்' என்றான்.

அவனைத் தொடர்ந்த உத்தரகுமாரன், ஒவ்வொருவரைப் பற்றியும் விரிவாக எடுத்துச் சொன்னான். அவன் சொன்னதைக் கேட்ட விராடன், மிக்க மகிழ்ச்சியுடன் பாண்டவர்கள் ஐவரையும் தழுவிக்கொண்டு, தருமரை வணங்கி, அவரைத் தன் ஆசனத்தில் அமர்த்தினான். 'அரசே! கடவுள் அருளால் நீங்கள் அனைவரும் எங்கள் நாட்டுக்கு வந்தீர்கள். தீய குணம் கொண்ட துரியோதனன் அறியாத விதத்தில் உங்கள் நாட்களை இங்கே கழித்தீர்கள். இந்த நாடும் பொருளும் இனி உங்களுடையவை' என்று தன்னுடைய செங்கோலை தருமரிடத்தில் ஒப்படைத்தான். 'தருமபுத்திரரே! உங்களால் நாங்கள் பல நன்மைகளைப் பெற்றோம். நாங்கள் அறியாமையால் செய்த பிழைகளை மன்னிக்க வேண்டும்' என்று பணிவுடன் வேண்டிக் கொண்டான். பாண்டவர்களை மீண்டும் மீண்டும் உச்சிமோந்து மகிழ்ந்தான். 'தருமரே! உங்களிடத்தில் ஒன்று சொல்லவேண்டும். என் மகள் உத்தரையை அர்ஜுனனுக்கு மணமுடிக்க விரும்புகிறேன். இதற்கு நீங்கள் அனுமதி அளிக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டான். தருமர் அர்ஜுனனைப் பார்த்தார். அவருடைய கருத்தை உணர்ந்த அர்ஜுனன், 'விராட மன்னரே! நாங்கள் எங்களுடைய நாட்டைப் பெற இங்கே வரவில்லை. மறைந்துவாழவே வந்தோம். உங்களுடைய மகள் என்னுடைய சிஷ்யை. என்னிடத்தில் பாட்டும் நடனமும் கற்றாள். அவளை நான் என் மகளாகவே கருதியிருக்கறேன். வேண்டுமானால் என் மகன் அபிமன்யுவுக்கு உங்கள் மகளைத் தாருங்கள்' என்று கேட்டுக்கொண்டான். யுதிஷ்டிரர் மகிழ்வடைந்தார். தன்னுடைய சம்மதத்தைத் தெரிவித்தார். உடனே எல்லா மன்னர்களுக்கும் திருமணச் செய்தியுடன் தூதர்கள் அனுப்பப்பட்டனர். குறிப்பாக, அபிமன்யு வளர்ந்துவரும் நாட்டுக்கு உரிய கிருஷ்ணனுக்குச் செய்தி சொல்லப்பட்டது. திருமண ஏற்பாடுகள் வெகுவிரைவில் நடந்தன.

அங்கே அஸ்தினாபுரத்தில் துரியோதனன் மந்திராலோசனையில் இருந்தான். அக்ஞாதவாச காலம் முடிவடைவதற்கு முன்பாகவே அர்ஜுனன் வெளிப்பட்டுவிட்டான் என்று தொடக்கமுதலே இவனும் கர்ணனும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது சம்பந்தமாக துரியோதனன் யுதிஷ்டிரருக்குத் தூதனுப்பினான். 'அர்ஜுனன் வெளிப்பட்டபோது காலக்கெடு முடிந்து ஒரு மாதத்துக்கும் மேல் ஆகியிருந்தது என்று தொடக்கத்திலிருந்து யுதிஷ்டிரரும் பீஷ்மரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் காலக்கணக்கு மிக முக்கியமான கும்பகோணம் பதிப்பில் இல்லை. ஆனால், அதிர்ஷ்டவசமாக கிஸாரி மோகன் கங்கூலியும் இந்தப் பதிப்பைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் திரு அருட்செல்வப் பேரரசனும் இவற்றைவிட முக்கியமான BORI ஆராய்ச்சிப் பதிப்பும் இதை மிகவும் விவரமாகத் தருகின்றன. அடுத்து, இந்த விவரங்களை முழுமையாக, ஒப்பீட்டு மேற்கோள்களுடன் காண்போம். அதைச் செய்தால்தான் நம் ஆய்வு முழுமை பெறும்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com