தி.சா. ராஜு
பொறியாளர், ராணுவ மேஜர் ஜெனரல், ஹோமியோபதி மருத்துவர் இவற்றோடு சிறந்த எழுத்தாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கியவர் தில்லைஸ்தானம் சாம்பசிவ ஐயர் ராஜு என்னும் தி.சா. ராஜு. இவர் ஆகஸ்ட் 15, 1926ல், திருவையாற்றை அடுத்த தில்லைஸ்தானத்தில் பிறந்தார். தந்தை சாம்பசிவ ஐயர் தமிழ், சம்ஸ்கிருதம் அறிந்தவர். சமயம், தத்துவம் போன்றவற்றில் ஆழங்காற்பட்டவர். சுதந்திப் போராட்ட வீரரும்கூட.. அவர் வழி ராஜுவும் பன்மொழி ஆர்வம் கொண்டிருந்தார்.

அது சுதந்திரப் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்த காலம். பள்ளியில் படிக்கும்போதே பாரதியின் பாடல்களைப் பாடிக்கொண்டு சுதந்திர வீரர்களுடன் ஊர்வலமாகச் செல்வது ராஜுவின் வழக்கம். பாரதியின் பாடல்கள் அவரை மிகவும் கவர்ந்தன. பிற்காலத்தில் பாரதியை ஆராய்ந்து எழுதுவதற்கு இந்த ஆர்வமே அடிப்படைக் காரணமாக அமைந்தது. இயந்திரவியலில் பொறியியல் பட்டப் படிப்பை முடித்த ராஜு ராணுவத்தில் மேஜராகச் சேர்ந்தார். பணிக்காலம் முழுவதும் வட இந்தியாவின் பல பகுதிகளில் கழிந்தன. குறிப்பாக பஞ்சாபில் இவர் பல வருடங்கள் பணி புரிந்தார். ஏற்கனவே தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் அறிந்திருந்த அவருக்கு பஞ்சாபியும் வசமானது. அப்பகுதியில் தனக்குக் கிடைத்த அனுபவங்களையும் வடநாட்டின் முக்கியமான சுற்றுலாத் தலங்கள் பற்றியும் கல்கிக்கு எழுதி அனுப்பினார். அவை தொடர்ந்து வெளியாகின. பின்னர் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். கல்கி, தினமணி கதிர், கலைமகள் ஆகியவற்றில் அவை வெளியாகி வரவேற்பைப் பெற்றன. தன்னை மிகவும் கவர்ந்த பாரதியைப் பற்றி 'பாரதி ஒரு வாழ்நெறி' என்ற கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டார். 'காட்டாறு' என்பது இவர் எழுதிய முதல் நாவல். இவர் இதழ்களில் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு 'காட்டு நிலா' என்ற தலைப்பில் வெளியானது. அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ராணுவ வாழ்க்கை மற்றும் பஞ்சாப் மண்ணில் கிடைத்த அனுபவங்களையும் மையமாக வைத்து 'பட்டாளக்காரன்' என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியானது. அதுவும் பரவலான வரவேற்பைப் பெற்றது.ராஜு லட்சிய வேட்கை கொண்ட எழுத்தாளர். காந்தியத் தக்கம் கொண்டவர். அவை இவரது படைப்புகளில் பிரதிபலித்தன. வழக்கமான தமிழ்ச் சிறுகதை மற்றும் புதினங்களிலிருந்து சற்றே மாறுபட்ட பின்னணி கொண்டவையாய் இருந்ததால் பத்திரிகை ஆசிரியர்களாலும், சக எழுத்தாளர்களாலும் அவை வரவேற்கப்பட்டன. இவரது எழுத்தால் கவரப்பட்டவர்களுள் 'வாசகர் வட்டம்' லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியும் ஒருவர். பஞ்சாபைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ஆஹ்லுவாலியாவின் தன்வரலாற்றை, 'மன்னும் இமயமலை' என்ற தலைப்பில் தி.சா. ராஜு மொழிபெயர்த்திருந்தார். அதனை லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி தனது வாசகர் வட்டம் மூலம் வெளியிட்டார். ஆஹ்லுவாலியாவிற்கு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறவேண்டும் என்று சிறுவயது முதலே ஆசை. இளைஞரான பின் அது நிறைவேறும் சூழல் அமைகிறது. அதே சமயம் அவருக்குத் திருமணமும் நிச்சயமாகிறது. ஆஹ்லுவாலியா என்ன முடிவெடுத்தார், எவரெஸ்ட்டில் அவருக்கு நிகழ்ந்தது என்ன, அதன்பின் ஏற்பட்ட மிகப்பெரிய விபத்து அவரது வாழ்க்கையை எப்படி மாற்றிப் போட்டது, அவர் எப்படி மீண்டார் என்பவற்றை மிகச் சுவையாக மொழிபெயர்த்திருந்தார் ராஜு. பலராலும் பாராட்டப்பட்ட அந்தப் படைப்பைத் தொடர்ந்து பல மொழிபெயர்ப்புகளைச் செய்தார் ராஜு. 'அட, மண்ணில் தெரியுதோர் வானம்' தினமணி கதிர் தொடர் இவருக்கு மிகநல்ல புகழை ஏற்படுத்தித் தந்தது.

ராணுவம் சார்ந்த கதைகளை எழுத முனைந்தது குறித்து ராஜு, "தீவிரமான நாட்டுப்பற்றும் இலக்கியப் புலமையும் உடைய பதிப்பாசிரியர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். சிறுகதை இலக்கியம் பற்றி அவருடன் உரையாடும்போது, 'தமிழில் நல்ல சிறுகதைகள் வெளிவந்து கொண்டிருப்பது உண்மைதான். ஆனால் எந்த எழுத்தாளரும் ஒரு குறிப்பிட்ட துறையின் சிறப்பான முன்னேற்றம் காட்டக் காணோம். உதாரணமாக வேட்டைக் கதைகள் சிலவற்றைத் தொகுத்து வெளியிடலாம் என்று எண்ணினேன். வெளியிடுவதற்குத் தகுதியுள்ள பத்துச் சிறுகதைகள் கூட எனக்குக் கிடைக்கவில்லை' என்று அங்கலாய்த்தார். அவருடைய குறையீடு நியாயமானது என்று கூறத் தேவையில்லை. அறிஞர் வ.ரா. அவர்கள் கூறியதுபோல் 'திரும்ப சகதி நிறைந்த சுவடு விழுந்த பாதையில்தான் நமது கற்பனை வண்டி சென்று கொண்டிருக்கிறது' என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த உரையாடல் என்னை இந்தத் துறையில் செயல்புரிய ஊக்கியது. சென்ற இருபது ஆண்டுகளுக்கு மேல் இராணுவத்தில் செம்மையுறப் பணிபுரிந்த செயல் கர்வம், படையினரின் சஞ்சிகையில் அவர்களுக்காகவே உரக்கச் சிந்திக்கும் வகையில் வரைந்த கடிதக் கட்டுரைகள், வெளியிட்ட ஓரிரு நூல்கள் ஆகியவை, தமிழில் படைத்துறையினரைப் பற்றியும் சில கதைகள் எழுதும் துணிவைத் தந்தன." என்கிறார்.பாரதிதாசன், தனது குருநாதரான கவிஞர் பாரதியாரைப் புகழ்ந்து சென்னை வானொலியில் பாடிய கவிதை வரிகளைக் கொண்டு ஒவ்வொரு வரிக்கும் ஒரு கட்டுரையாக 'பாவேந்தரின் பாரதி' என்ற தலைப்பில் எழுதியுள்ளார். வடநாடெங்கும் பயணம் செய்து வரலாறு சார்ந்த பல நகரங்களைப் பற்றிக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அவற்றில் 'பட்னாவைப் பார்த்த்தேன்', 'பனி மலர்கள்' போன்ற தலைப்புகளில் 'கல்கி'யில் எழுதிய தொடர்கள் குறிப்பிடத் தகுந்தன. ஹோமியோபதி சார்ந்தும் நிறையக் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவருக்கு ஹோமியோபதியின் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டதற்குக் காரணம் அவரது ஆசானான சேஷாச்சாரி அவர்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த சேஷாச்சாரி, ஆரம்பத்தில் அலோபதி பயின்றவர். ஹைதராபாத் நிஜாமிடம் உயர் அலுவலராகப் பணியில் சேர்ந்தார். அங்கிருந்த போதுதான் ஹோமியோபதியை அவர் அறிந்து கொண்டார். முறையாக அதனைப் பயின்ற பின் அதன் மூலம் மருத்துவம் பார்த்து மன்னர் உள்பட ஆயிரக்கணக்கான நோயாளிகளின் நாட்பட்ட பிணிகளைப் போக்கினார். அவரது அறிமுகமே ராஜுவுக்கு இத்துறை மீது நாட்டத்தை ஏற்படுத்தியது. சேஷாச்சாரியிடம் முறையாகப் பயின்று தேர்ந்த மருத்துவரானார் ராஜு. அவரது மறைவுக்குப் பின் அவரது நோயாளிகள் பலருக்குச் சிகிச்சை அளித்தார். வட இந்தியாவில் பணியாற்றியபோதும் ஆயிரக்கணக்கான நபர்களுக்குச் சிகிச்சை அளித்திருக்கிறார் ராஜு. தனது ஹோமியோபதி அனுபவங்களைத் தொகுத்து 'ஹோமியோபதி மருத்துவம்' என்ற தலைப்பில் நூலாக்கியுள்ளார். அல்லயன்ஸ் பதிப்பகம் அதனை வெளியிட்டுள்ளது. அதில் தான் கண்ட நோயாளிகள், அவர்களது பிரச்சனைகள், ஹோமியோபதி மூலம் அவர்களுக்கு அளித்த சிகிச்சைகள், மருந்துகள், அவர்கள் நோய் குணமான விதம் என அனைத்தையும், மிகச் சுவாரஸ்யமான நடையில் ஆவணப்படுத்தியிருக்கிறார்.

தி.சா. ராஜு எழுதிய நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்: காட்டுநிலா, பட்டாளக்காரன், ஒளிவிளக்கு, அட மண்ணில் தெரியுது வானம், நாத அலைகள்

நாவல்கள்: லெஃப்டினண்ட் கோவிந்தன், காட்டாறு, காளியின் கருணை, விண்மட்டும் தெய்வமன்று, பாப்ஜி, ஒரு நாற்காலியின் கதை, இசைக்க மறந்த பாடல், எங்கிருந்தோ வந்தான்,

மொழிபெயர்ப்பு நூல்கள்: இதுதான் நம் வாழ்க்கை (மூலம்: தலிப் கெளர் டிவானு); மங்கியதோர் நிலவினிலே (மூலம்: குர்தயாள் சிங்); மன்னும் இமயமலை (மூலம்: மேஜர் ஜெனரல் ஆஹ்லுவாலியா), பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால், நமது தரைப்படை, நமது விமானப்படை.

கட்டுரை நூல்கள்: மகாகவி பாரதியார் கவிதையும் வாழ்க்கையும், பாரதி ஒரு வாழ்நெறி, பாரதி போற்றிய மன்னரும் உபநிடதங்களும், பாவேந்தரின் பாரதி, உலகம் உவப்ப, துப்பாக்கி உமது தோழன், மருத்துவம் சில சிந்தனைகள், நம்பிக்கைக்குரிய நம் வீரர், நாமிருக்கும் நாடு, நிகழ்ச்சிகள் நினைவுகள், ஹோமியோபதி மருத்துவம், ஹோமியோபதி கனிமங்கள், ஹோமியோபதி அற்புதங்கள், ஹோமியோபதி என்றால் என்ன?, பலமுனை நிவாரணிகள் பன்னிரெண்டு மற்றும் பல.


மனித மனங்களின் நுட்பமான உணர்வுகளைக் காட்சிப்படுத்துவதில் சிறந்தவர் ராஜு. சிறந்த பல நாவல்களை, சிறுகதைகளைத் தந்தவர். தனது சிறுகதைகளுக்காக தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தங்கப் பதக்கம் பெற்றவர். 'சிவகுமாரன்' என்ற புனைபெயரிலும் பல படைப்புகளைத் தந்துள்ளார். கலைமகள், கல்கி, ஆனந்த விகடன், மஞ்சரி, எழுத்தாளன் உள்ளிட்ட பல இதழ்களில் கதை, கட்டுரை, தொடர்களை எழுதியுள்ளார்.

தமிழர்கள் மறக்கக்கூடாத பல்துறைச் சாதனை எழுத்தாளர் தி.சா. ராஜு.

அரவிந்த்

© TamilOnline.com