இயல் விருது
கனடாவில் இயங்கி வரும் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பு, ஆண்டுதோறும் தமிழ் மொழி இலக்கியம் மற்றும் பண்பாட்டுத் தளங்களில் அரிய சாதனைகளை நிகழ்த்துவோருக்கு, இயல் விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2021ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழகத்தின் குறிப்பிடத்தகுந்த ஆய்வாளரான ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு வழங்கப்படுகிறது. தமிழகத்தின் இலக்கிய மற்றும் பண்பாட்டு ஆய்வாளர்களுள் முதன்மையானவர் சலபதி. பாரதி ஆய்வாளர்களின் வரிசையில் மிக முக்கியப் பங்காற்றியவர். வ.உ.சி. - காந்தி தொடர்பாக நிகழ்ந்த கடிதப் பரிமாற்றங்களை, ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு இவர் தொகுத்திருக்கும் அண்மைய நூலான 'வ.உ.சி.யும் காந்தியும்: 347 ரூபாய் 12 அணா' நூல் அரியதோர் ஆவணமாகும்.

இதற்கு முன்னர், சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ். பொன்னுத்துரை, எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், நாஞ்சில்நாடன், தியோடர் பாஸ்கரன், இமையம், சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் இயல் விருது பெற்றுள்ளனர். அவ்வரிசையில் இணைகிறார் சலபதி. வாழ்நாள் சாதனையாளர் விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுரைக்கான விருதை நீதிபதி சந்துரு பெறுகிறார். புனைவிலக்கியத்திற்கான விருது பா.அ. ஜெயகரனுக்கும், கவிதைக்கான விருது ஆழியாளுக்கும் மொழியாக்கத்திற்கான விருது மார்த்தா ஆன் செல்பிக்கும் வழங்கப்படுகிறது.

விருது வென்றோருக்குத் தென்றலின் நல்வாழ்த்துகள்.

© TamilOnline.com