புக்கர் பரிசு வென்ற முதல் இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ
எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளுள் ஒன்று 'புக்கர் பரிசு'. உலகின் பல்வேறு நாடுகளிலும், தாய்மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்ட ஒரு நாவலுக்கு ஆண்டுதோறும் புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டிற்கான புக்கர் பரிசை வென்றிருக்கிறார், புதுதில்லியைச் சேர்ந்த கீதாஞ்சலி ஸ்ரீ என்னும் கீதாஞ்சலி பாண்டே.

ஹிந்தியில் குறிப்பிடத்தகுந்த சிறுகதைகளையும் ஐந்து நாவல்களையும் தந்திருப்பவர் கீதாஞ்சலி. 2000த்தில் இவர் எழுதிய 'மாய்' (Mai) நாவல், 'க்ராஸ்வேர்ட் புத்தக விருது' பெற்றது. அதே நாவல் நீதா குமாரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு கவனம் ஈர்த்தது. கீதாஞ்சலி 'ரெட் சமாதி' என்ற பெயரில் எழுதிய இந்தி நாவல், டெய்சி ராக்வெல் (Daisy Rockwell) என்பவரால், 'டூம்ப் ஆப் சேண்ட்' (Tomb of Sand) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டது. அதற்கு இவ்வாண்டிற்கான புக்கர் பரிசு கிடைத்துள்ளது. இதன்மூலம், புக்கர் பரிசு பெற்ற முதல் இந்திய மொழி நாவல் என்ற பெருமையை இந்த நாவல் பெற்றுள்ளது. இதே நாவல் ஆனி மோன்டா (Annie Montaut) என்பவரால் 'ஆ-டெலா தே லா ஃப்ரான்டியே' (Au-delà de la frontière) என ஃபிரெஞ்சு மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நாவல்கள், சிறுகதைகள் தவிர்த்து, பிரேம்சந்த் பற்றிய விமர்சனப் படைப்புகளையும் கீதாஞ்சலி எழுதியுள்ளார்.

கீதாஞ்சலி உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மைன்புரி நகரில் பிறந்தவர். தந்தை அனிருத் பாண்டே அரசு ஊழியர். அதனால் அவர்களது குடும்பம் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் வசித்தது. கீதாஞ்சலியின் முதல் கதை, 'பேல் பத்ரா' (1987), 'ஹன்ஸ்' என்ற இலக்கிய இதழில் வெளியானது, அதைத் தொடர்ந்து 1991ல், அனுகூஞ்ச் என்ற சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. தொடர்ந்து நாவல்கள் வெளியாகின. பிரேம்சந்த் குறித்து விரிவாக ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றிருக்கும் கீதாஞ்சலி, 'கதா சம்மான்' விருது பெற்றவரும் கூட. தற்போது எழுத்தாளர்கள், கலைஞர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் ஓவியர்களைக் கொண்ட குழுவான விவாதியுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

விருதாளருக்குத் தென்றலின் வாழ்த்துகள்!

© TamilOnline.com