அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில், கம்பம்
தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் கம்பம் என்னும் ஊரில் கௌமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

தலப்பெருமை
இத்தல அம்பிகை சுயம்பு லிங்க வடிவில் அருள்பாலிக்கிறாள்.

மருத்துவம் பார்த்த மாரி:
மாரியம்மன் கைகளில் உடுக்கை, கத்தி, கட்கம், கபாலத்தோடு காட்சியளிக்கிறாள். பிரகாரத்தில் நாகர், அனுக்கிரக விநாயகர், பாலமுருகன், நவக்கிரக சன்னிதிகள் உள்ளன. மாரியம்மனுக்கு முன்புறம் சுயம்பு லிங்கமாக அம்பிகை காட்சி தருகிறாள். சுயம்புவிற்கு அம்பாளின் முகத்தைப் போல் அலங்கரிக்கிறார்கள். இவளைப் பூஜை செய்த பின்பே சிலை வடிவில் உள்ள அம்பாளுக்குப் பூஜை செய்கின்றனர். சுயம்பு அம்பிகையை அபிஷேகத்தின் போது மட்டுமே தரிசிக்க முடியும். பக்தர்களின் நோய் தீர்த்து அருளியவள் என்பதால் இவளை மருத்துவச்சி என்று அழைக்கிறார்கள். தீராத நோய் ஏற்பட்டவர்கள் இங்கு பிரார்த்தனை செய்தால் நிவர்த்தி ஆகும் என்று ஐதீகம்.



உற்சவ அம்பாள் நான்கு தலை நாகத்தின் கீழ் காட்சி தருகிறாள். வெள்ளிக்கிழமைகளில் இவள் பல்லக்கில் எழுந்தருளிப் பிரகார உலா செல்கிறாள். பெண்கள் மட்டுமே இங்கு பல்லக்கைத் தூக்கிச் செல்வார்கள். சித்திரை மாதத்தில் 21 நாள் திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. அவ்விழாவின் போது பக்தர்கள் அக்னிச் சட்டி எடுத்து பூக்குழி இறங்கி அம்பிகையிடம் வேண்டிக் கொள்வர்.

சித்திரைத் திருவிழாவின் போது வேப்பமரத்தின் 3 கிளைகளை மேளதாளத்துடன் அம்பிகையின் அருகில் வைத்துப் பூஜிக்கின்றனர். அதன்பின் கம்பத்திற்கு அருகில் வைத்து விடுகின்றனர். பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க கம்பத்திற்கு மல்லிகை புஷ்பம், எலுமிச்சை மாலை அணிவித்து மஞ்சள் நீராட்டி வேண்டிக் கொள்கின்றனர்.

ஒருசமயம் இப்பகுதியில் மக்கள் கொடிய நோய்களால் சிரமப்பட்டனர். அச்சமயம் பெண்ணொருத்தி இங்கு வந்தாள். தற்போது கோயில் இருக்குமிடத்தில் அமர்ந்துகொண்டு அவள் நோயாளிகளை அழைத்து வேப்பிலை, மஞ்சள் இரண்டையும் கொடுத்தாள். அதனால் பலருக்கு நோய் குணமானது. வியந்த மக்கள் "எங்களுக்கு வைத்தியம் பார்க்கும் நீ யார்?" என்று கேட்டனர். உடன் அம்பிகை தன் சுயரூபத்தைக் காட்டினாள். பின் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இங்கு சுயம்பு வடிவில் எழுந்தருளினாள். பின்பு சுயம்புவைச் சுற்றிக் கோவில் எழுப்பப்பட்டது. பிற்காலத்தில் சுயம்பு வடிவைச் சுற்றி சுயம்பு அம்பிகைக்குப் பின்புறம் மாரியம்மன் சிலை வடித்துப் பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர்.



சிவ அம்பிகை
மாரியம்மன் பராசக்தியின் ஓர் அம்சம் என்பர். சிவனும் சக்தியும் ஒன்று என்ற அடிப்படையில், சிவராத்திரியன்று சிவனைப் போலவே இவளுக்குச் சிறப்பு அலங்காரம் செய்து பூஜிக்கின்றனர். அப்போது அம்பிகைக்கு நெற்றிக்கண் சூட்டி, தலையில் பிறைச்சந்திரன், கங்காதேவி, கையில் உடுக்கை, சூலம் ஆகியவற்றுடன் சிவனுக்குரிய புலித்தோல் ஆடை அணிவித்து அலங்கரிப்பர். சிவனுக்குரிய முறைப்படி நள்ளிரவில் ஆறுகால பூஜை நடக்கும். இந்த வேளையில் அம்பிகையைத் தரிசிப்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.

அதிசயத்தின் அடிப்படையில் இத்தலத்தில் அம்பிகை சுயம்பு லிங்கத்தின் வடிவில் அருள்பாலிக்கிறாள்.

சீதாதுரைராஜ்,
சான்ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com