மேலாடைகளைக் கவர்ந்து வா
கர்ணன் களத்தை விட்டோடிய பிறகு துரியோதனன் அர்ஜுனனைத் தேடிக்கொண்டு வந்தான். இவன் தன்னை எதிர்க்கத்தான் வருகிறான் என்பதை உணர்ந்த அர்ஜுனன், அவன்மீது இரண்டு பாணங்களைப் போட்டான். துரியோதனன் பதிலுக்கு அவனைத் தாக்கினான். அப்போது, களத்தை விட்டோடிய கர்ணன், துரியோதனனைத் தேடிக்கொண்டு வந்து, அவனிடம் சென்று, 'துரியோதனா! அர்ஜுனன் இதோ இருக்கிறான். அக்ஞாதவாச காலம் முடிவதற்கு முன்பாகவே நம்மால் காணப்பட்டுவிட்டான். நாம் விரைவில் திரும்பிச் செல்வோம். அவர்களுக்கு விதிக்கப்பட்ட காலம் இன்னும் முடியாததால் பாண்டவர்கள் மீண்டும் காட்டுக்குச் செல்ல வேண்டியதுதான்' என்றான். இந்தச் சமயத்தில் கௌரவப்படை சிதறியோடியது. அர்ஜுனன் துரியோதனனை நெருங்கிவந்தான். அவன் அம்பின் கொடுமையைத் தாங்க முடியாத துரியோதனன் ஓடிப்போய் பீஷ்மர், துரோணர், கிருபர் ஆகியோரிடம் தஞ்சம் புகுந்தான். அதைக் கண்ட அர்ஜுனன், 'துரியோதனா! ஏன் இப்படிக் கோழைபோல் ஓடுகிறாய். போரில் புறமுதுகு காட்டுவது க்ஷத்திரியனுக்கு அழகல்லவே. இப்படி ஓடுவதால் பொன்னையும் வைர வைடூரியங்களையும் எவ்வாறு அனுபவிப்பாய்? இம்மை, மறுமை இன்பங்களை இதனால் இழக்கிறாய் போரில் புறமுதுகிடுவதைக் காட்டிலும் இறப்பது மேல்' என்று கேலி பேசினான். அர்ஜுனனின் இந்தச் சொற்களால் வருந்திய துரியோதனன் தேரைத் திருப்பிக்கொண்டு வந்தான். 'அர்ஜுனா! அந்த இந்திரனே போருக்கு வந்தாலும் நான் அஞ்சி ஓட மாட்டேன்' என்று வீரவசனம் பேசினான். இருவருக்கும் மீண்டும் போர் மூண்டது. அர்ஜுனன் 'சம்மோகனம்' என்ற அஸ்திரத்தை கௌரவப்படைமீது வீசினான். இது அர்ஜுனனுக்கு இந்திரனால் கொடுக்கப்பட்டது. இது, எதிரிப்படையை மயக்கம் அடையச் செய்வது. கௌரவசேனை மயங்கி விழுந்தது. கௌரவப் பெரியோர் அனைவரும் அந்த அஸ்திரத்தால் மயக்கம் அடைந்தனர்.

உத்தரனைப் பார்த்த அர்ஜுனன், 'உத்தரா! கௌரவர் அனைவரும் மயக்கம் அடைந்துவிட்டனர். நீ விரைந்து சென்று, துரோணர், கிருபர், அஸ்வத்தாமா, கர்ணன், துரியோதனன் ஆகிய ஐவருடைய ஆடைகளை உரித்தெடுத்துக்கொண்டு வந்துவிடு. நாம் போருக்குக் கிளம்பும்போது, எதிரிப் படையின் மேலாடைகள் வேண்டும் என்று உத்தரை கேட்டாள். அவளுக்குத் தரவேண்டும். விரைவில் இதைக் கொண்டுவா. பீஷ்மரிடத்தில் போகாதே. ஏனெனில் சம்மோகனாஸ்திரத்தைத் தடுக்கும் வித்தை அவருக்குத் தெரியும். அவர் மயக்கம் அடைந்திருக்க மாட்டார்' என்றான். இதைக் கேட்ட உத்தரன், கடிவாளத்தைப் போட்டுவிட்டு, தேரிலிருந்து இறங்கி, இந்த ஐவரின் மேலாடைகளையும் களைந்து கொண்டுவந்தான். மீண்டும் தேரேறி அதனைச் செலுத்தினான். தேர், படையைக் கடந்து சென்றது. இதனை அறிந்த பீஷ்மர் அர்ஜுனனைத் தன் பாணங்களால் தாக்கினார். ஆனால் அர்ஜுனன் அவரை விட்டுவிட்டு, அவருடைய தேர்ப்பாகனை மட்டும் தாக்கினான் அந்த நேரத்தில் மயக்கம் தெளிந்த துரியோதனன் பீஷ்மரைப் பார்த்து, 'தாத்தா! அர்ஜுனன் உங்களிடமிருந்து தப்பியோடுகிறான். அவனைப் பிடித்துக் கட்டுங்கள்' என்றான். பீஷ்மர் அவனைப் பார்த்து உரக்கச் சிரித்தார். 'துரியோதனா! நீ அர்ஜுனனுடைய அம்பால் அடிபட்டதனால், புத்தி தடுமாற்றம் அடைந்திருக்கிறாய். அர்ஜுனன் ஒருபோதும் கொடிய செயல்களைச் செய்யமாட்டான். எனவேதான் அவனுக்கு பீபத்ஸு என்று பெயர். ஆகவேதான் நம்மை விட்டு வைத்திருக்கிறான். இல்லாவிட்டால் எல்லோரையும் கூண்டோடு அனுப்பி வைத்திருப்பான். இனி வீண்பேச்சு எதற்கு? நீங்கள் மயக்கமாக இருந்தபோது, அர்ஜுனன் உங்களுடைய மேலாடைகளைக் கவர்ந்து சென்றிருக்கிறான். நினைத்திருந்தால், உங்களைக் கொன்றிருப்பான். நாம் நாடு திரும்புவோம். அர்ஜுனன் பசுக் கூட்டங்களை ஓட்டிக்கொண்டு செல்லட்டும்' என்றார்.

இதைக் கேட்ட துரியோதனன், பீஷ்மர் சொல்வதே சரியானது என்று புரிந்து கொண்டான். தன் படைகளோடு அஸ்தினாபுரத்துக்குத் திரும்பலானான். அர்ஜுனன், காண்டீபத்தில் டங்கார நாதம் எழுப்பியவாறே ஒரு முகூர்த்தகாலம் கௌரவ சேனையை விரட்டிச் சென்றான். அட்டஹாசம் செய்தபடி சங்கத்தை எடுத்து முழக்கினான். பின்னர் ஆச்சாரியர்களுக்குத் தன் பாணங்களின் மூலம் வணக்கத்தைத் தெரிவித்தான். 'துரியோதனா! நீ அரசனாக இருக்கத் தகுதியற்றவன். உனக்கு எதற்கு மணிமகுடம்?' என்றவாறு துரியோதனனுடைய மகுடத்தை ஒரு அம்பால் பிளந்தான். அதைப் பார்த்த உத்தரன் மகிழ்ச்சி அடைந்தான். அர்ஜுனனைக் கண்டு அஞ்சிய கௌரவப்படை அஸ்தினாபுரத்துக்குத் திரும்பிச் சென்றது.

உத்தரனைப் பார்த்த அர்ஜுனன், 'வீரனே! இந்த வெற்றியைக் கொண்டாட வேண்டும். பசுக்கூட்டங்களை மீட்டவன் நீ என்றே அனைவரும் நினைக்கட்டும். யுதிஷ்டிரர் உத்தரவிடும்வரை எங்களுடைய அக்ஞாத வாசம் முற்றுப் பெறவில்லை. நான் யார் என்று உன் நாட்டவருக்குத் தெரிவிக்க வேண்டாம். நான் யார் என்று தெரிந்துகொண்டால், உன் தந்தை அஞ்சுவார். எனவே, இப்போதைக்கு இந்த வெற்றி உன்னுடையதாகவே இருக்கட்டும்' என்றான். உடனே உத்தரன், 'வீரரே! உம்முடைய வீரச் செயலை என்னால் செய்ய முடியாது. இதனை யாராலும் மறைக்கவும் முடியாது. இருந்தாலும் உங்களுடைய கட்டளைப்படி நடக்க நான் சித்தமாக இருக்கிறேன். சமயம் வாய்க்கும்போது இதை என் தந்தைக்குத் தெரிவிக்கிறேன்' என்றான். அர்ஜுனன் மீண்டும் பிருகன்னளையாகித் தேரோட்டியானான். உத்தரன், தேராளி இடத்துக்கு மாறிக்கொண்டான். அர்ஜுனனாகிய பிருகன்னளை, மீண்டும் கடிவாளத்தைப் பிடித்துத் தேரைச் செலுத்தினாள். ஆமாம். செலுத்தினாள்தான். செலுத்தினான் இல்லை. 'உத்தரா! இந்தப் பசுக்கூட்டங்களைப் பெற்றுக்கொள். குதிரைகளைக் குளிப்பாட்டுவோம். தண்ணீர் பருகச் செய்வோம். பிறகு, மாலையில் நகரத்துக்குள் புகுவோம்' என்றாள் அர்ஜுன பிருகன்னளை.

போரிலிருந்து திரும்பிய விராடன், அந்தப்புரத்துக்கு வந்து தன் மகன் உத்தரனைத் தேடினான். அந்தப் பெண்களிடம் விசாரித்தான். 'நீங்கள் போருக்குச் சென்றதும், துரோணர், கர்ணன், பீஷ்மர், துரியோதனன் போன்றோர் படை திரட்டிக்கொண்டு வந்தனர். அவர்களை எதிர்க்கத் தனியொருவனாய் இளவரசர் சென்றுள்ளார்' என்று அவர்கள் பதில் சொன்னார்கள். இதைக் கேட்ட விராடன் திடுக்கிட்டுப் போனான். பேடியான பிருகன்னளை உத்தரனுக்குத் தேரோட்டிச் சென்றுள்ளாள் என்பதைக் கேட்டுப் பெரிதும் கவலையடைந்தான். அமைச்சர்களைக் கூப்பிட்டு, 'அமைச்சர்களே! கௌரவ சேனையை எதிர்க்க என் மகன் தனியொருவனாய்ச் சென்றிருக்கிறான். அவனுக்குத் தேரோட்டியாய் பிருகன்னளை சென்றிருக்கிறாள். பேடி ஒருத்தியைத் துணையாகக் கொண்டு என்னுடைய அனுபவமற்ற மகன் சென்றிருக்கிறான். அவன் இந்நேரம் உயிரோடு இருப்பானா என்பது தெரியவில்லை. என் மகன் உயிரோடு இருக்கிறானா என்பதை தெரிந்துகொண்டு வாருங்கள்' என்றான். நால்வகைப் படையும் உத்தரனுக்குத் துணையாகச் செல்ல ஆயத்தமாகின.

இதைக் கவனித்த (கங்கராக இருந்த) யுதிஷ்டிரர், 'அரசே பயம் வேண்டாம். பிருகன்னளை சாரதியாகப் போய் இருப்பதால் அச்சமில்லை. பிருகன்னளை சாரத்தியம் செய்தால், எல்லா மன்னர்களையும் வெல்லும் ஆற்றலை உங்கள் மகன் பெற்றுவிடுவான்' என்றார், லேசான குறும்புடன். 'திரிகர்த்தர்கள் தோல்வியடைந்தனர் என்பதை அறிந்தால், எவரும் எதிர்த்து நிற்க மாட்டார்கள். எனவே, கவலைப்படவேண்டாம்' என்று தொடர்ந்தார். அவர் பிருகன்னளையை உயர்வாகப் பேசியதை விராடன் ரசிக்கவில்லை.

அந்த நேரத்தில், உத்தரன் அனுப்பிய தூதர்கள் அங்கே வந்தார்கள்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com