கே. விசாலினி
உலக அளவில் பல சாதனைகள் செய்து, அமரர் அப்துல் கலாம், ISRO மேனாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை முதல் பாரதப் பிரதமர் மோடிவரை பலரது பாராட்டைப் பெற்றவர் விசாலினி. சிறுவயதிலேயே உலகிலேயே மிக அதிக அறிவுத்திறன் கொண்டவர் (I.Q. 225) என்பதில் தொடங்கி, ஐந்து உலக சாதனைகளை நிகழ்த்தியவர். சர்வதேசச் சான்றிதழ்கள் 13, இவரது கைவசம். தந்தை குமாரசாமி எலக்ட்ரிகல் காண்ட்ராக்டர். தூத்துக்குடி அகில இந்திய வானொலியில் அறிவிப்பாளராகப் பணியாற்றிய தாய் சேது ராகமாலிகா, தன் வேலையை விட்டுவிட்டு மகளுக்குத் துணையாக இருக்கிறார். 21 வயதே ஆன விசாலினி, தற்போது செயற்கை நுண்ணறிவுத் துறையில் (Artificial Intelligence) முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அவருடனான உரையாடலில் இருந்து...

★★★★★


மனிதரனைய ரோபாட் சோஃபியாவுடன்பள்ளி மாணவி to பட்டதாரி மாணவி
தனது தொடக்கக் கல்வி குறித்து விசாலினி, "திருநெல்வேலியில் உள்ள பெல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தொடக்கக் கல்வி கற்றேன். அங்கு இரண்டு முறை டபுள் ப்ரமோஷன் பெற்றேன். அதாவது, ஒன்று, இரண்டாம் வகுப்புகளை ஒரே கல்வியாண்டில் முடித்தேன். தொடர்ந்து மூன்று, நான்காம் வகுப்புகளை அடுத்த கல்வியாண்டில் முடித்தேன். மேலும், IIPE Laxmi Raman மெட்ரிகுலேஷன் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தேன்.

விசாலியின் உலக சாதனைகள்
* The Highest IQ in the World - IQ level 225
* The Youngest CCNA in the World
* The Youngest IELTS in the World
* The Youngest CCSA in the World
* The Youngest EXIN Cloud Computing in the World


பின்னர், தமிழ்நாட்டின் ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் (KARE) நேரடியாக பொறியியலில் B.Tech. படிக்க அனுமதி கிடைத்தது. கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையைத் தேர்ந்தெடுத்தேன். அங்கு என்னைவிட நான்கைந்து வயது மூத்த மாணவர்களுடன் படித்தாலும், படிப்பில் எப்போதும் முதல் மாணவியாக இருந்தேன். நான்காண்டு பி.டெக். படிப்பை மூன்றே ஆண்டுகளில் முடித்தேன். 96% மதிப்பெண்களுடன் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவியாகத் தங்கப் பதக்கம் பெற்றேன். தொடர்ந்து, இரண்டு ஆண்டுகள் எம்.டெக். (M.Tech.) பொறியியல் படிப்பை ஒன்றரை ஆண்டுகளில் முடித்து, 98.2% மதிப்பெண்களுடன் பல்கலைக்கழகத்தின் முதல் மாணவியாக மீண்டும் தங்கப் பதக்கம் பெற்றேன்" என்கிறார். நாம் கொஞ்சம் மூச்சு விட்டுக் கொள்கிறோம்.

பெற்றோருடன் விசாலினிமுனைவர் பட்ட ஆய்வு
பி.டெக். முடித்த பிறகு, உலக அளவில் பெரிய நிறுவனங்களிடமிருந்து மிக அதிக ஊதியத்தோடு விசாலினிக்குப் பணிவாய்ப்புகள் வந்து குவிந்தன. பன்னாட்டு நிறுவனம் ஒன்றிடமிருந்து மட்டுமே, மூன்று நகரங்களில் பணியாற்ற அழைப்பு வந்தது. ஆனால், விசாலினியோ மேற்கொண்டு படிக்க விரும்பினார். அமெரிக்கா, நார்வே, சிங்கப்பூர் உள்ளிட்ட உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்கள், மிக அதிகக் கல்வி உதவித்தொகையுடன், நேரடியாக Ph.D. ஆராய்ச்சி செய்ய அழைத்தன. ஆனால், விசாலினியோ, தனது கல்வியை இந்தியாவிலேயே தொடர விரும்பி, அவ்வாய்ப்புகளை ஏற்கவில்லை.

தற்போது, தான் இளங்கலை, முதுகலைப் பட்டம் பயின்ற அதே ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (Artificial Intelligence) குறித்து முனைவர் பட்ட ஆய்வு செய்து வருகிறார். குறை மாதத்தில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு, (Premature Neonatal Babies) பிறவியிலேயே ஏற்படும் மூளை சம்பந்தப்பட்ட நோய்களை, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிவிரைவாகக் கண்டறியும் முறை குறித்த அவரது ஆய்வு, 2023ல் நிறைவுபெறும். இந்த ஆய்வை மேற்கொண்டு வரும் விசாலினி, குறைமாதக் குழந்தையாகப் பிறந்தவர். "30 நாட்கள் கூட உயிருடன் இருக்கமாட்டார் என்று கணிக்கப்பட்டவர்" என்பது குறிப்பிடத்தகுந்தது.

மயில்சாமி அண்ணாதுரை அவர்களுடன்ISRO-வில் விசாலினி
விசாலினிக்கு 15 வயதாக இருந்தபோதே அவரது திறமையை அறிந்த, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான ISRO அவரை உரையாற்ற அழைத்தது. அதன் இயக்குநர் உட்பட எழுநூறுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மத்தியில், புதிய தகவல் தொழில்நுட்ப நுணுக்கங்கள் குறித்து விரிவாக உரையாற்றினார். விசாலினியின் உரை முடிந்ததும் ISRO விஞ்ஞானிகள் எழுந்து நின்று மரியாதை (standing ovation) செய்தனர். இஸ்ரோவின் இயக்குநர், "எதிர்காலத்தில், விசாலினி இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையில் மிக முக்கியப் பங்காற்றுவார்" என்று பாராட்டியதுடன், செவ்வாய்க் கிரகத்திற்கு இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் செயற்கைக்கோளின் மாதிரியையும் பரிசாக அளித்தார். (பார்க்க: படம்)

கலாமின் வாழ்த்தும் கருத்தரங்கச் சாதனைகளும்
மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பாராட்டைப் பெற்றவர் விசாலினி. கணினித் துறையில் விசாலினியின் சாதனைகளை அறிந்த கலாம், விசாலினியை நேரில் அழைத்துப் பாராட்டியதுடன், இந்தியத் தகவல் தொழில் நுட்பத் துறையில் விசாலினி மிக முக்கியப் பங்காற்றுவார் என்று சொல்லி வாழ்த்தினார். அந்த வாழ்த்து இன்றைக்குப் பலித்திருக்கிறது.

11 வயதுச் சிறுமியாக இருந்தபோதே சர்வதேசக் கணினி மாநாடுகளுக்குத் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டு, கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் குறித்துச் சிறப்புரை ஆற்றியிருக்கிறார். சர்வதேசக் கணினி மாநாடுகளில் பன்னாட்டு அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் கூட பார்வையாளராகச் செல்வதற்கே கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், விசாலினியோ, 15 சர்வதேசக் கணினி மாநாடுகளில் 70 முதல் 80 நாட்டு அறிஞர்கள் மத்தியில் தலைமை உரையாற்றி (Keynote Address) இந்தியாவிற்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.

கூகுள் சர்வதேச உச்சி மாநாட்டில் ஒருமணிநேரம் சிறப்புரை ஆற்றியவர். TEDx சர்வதேச மாநாட்டில் மூன்றுமுறை தலைமையுரையாற்றிய பெருமையும் இவருக்கு உண்டு. விசாலினி தன் 11 வயதிலிருந்தே, நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளிலும் பன்னாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள், பேராசிரியர்களுக்கு செமினார் வகுப்புகளை நடத்தியிருக்கிறார். இஸ்ரோ இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, ஒரு சர்வதேச ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் "விசாலினி - இந்தியாவின் மிகப்பெரிய பொக்கிஷம், Visalini is the Biggest Asset to our Country - India" என்று பாராட்டியிருக்கிறார். அது உண்மைதான், மிகையல்ல.


இந்திய அரசு புதிதாக வெளியிட்ட 2000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் செயற்கைக்கோள் படம் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தகுந்தது. உலக வரலாற்றில் முதன்முறையாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில், 15 வயது மாணவி ஒருவர் விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றியதும், செயற்கைக்கோள் மாதிரியைப் பரிசாகப் பெற்றதும் அதுவே முதன்முறை.

மேதகு அப்துல் கலாம் அவர்களுடன்இஸ்ரோவில் ஆராய்ச்சிப்பணி
பாராட்டியதோடு நிற்கவில்லை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், விசாலினிக்கு ஓர் ஆராய்ச்சிப் பணியையும் வழங்கியது. இஸ்ரோ வரலாற்றில் 15 வயது மாணவிக்கு ஆராய்ச்சிப் பணி வழங்கப்பட்டது அதுவே முதன்முறை. இரண்டு ஆண்டுகளில் முடிக்கவேண்டிய பணியை 35 நாட்களில் முடித்து இந்திய நாட்டிற்குச் சமர்ப்பித்தார் விசாலினி. அந்தத் தொழில் நுட்பத்திற்கு விசாலினியின் பெயரே சூட்டப்பட்டது தனிச்சிறப்பு. விசாலியின் திறமைகளைக் கண்டு இஸ்ரோவின் அப்போதைய இயக்குநர் பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள், "விசாலினி தனது வயதுக்கு மிஞ்சிய சவாலான செயல்களைச் செய்யவல்ல அபார அறிவாற்றல் பெற்றவர்" என்று பாராட்டினார்.பிரதமருடன் சந்திப்பு
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடனான சந்திப்பு மறக்க முடியாதது என்று சொல்லும் விசாலினி, அந்தச் சந்திப்பு பற்றி, "ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் எனது தந்தைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. 'Our Prime Minister Shri. Narendra Modi wants to meet your daughter Visalini' என்றார் அதில் பேசிய அதிகாரி. அதன்படி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேரலை மூலம் பிரதமருடன் உரையாடினேன். பிரதமரைக் கண்ட நான் எழுந்து நின்று தமிழில் 'வணக்கம்' என்று சொன்னேன். பதிலுக்குப் பிரதமரும் தமிழிலேயே 'வணக்கம்' என்றார்"— அந்தச் சந்திப்பின் வியப்பிலிருந்து மீளாமல்.

பிரதமர் மோடி, விசாலினியுடன் உரையாடியபோது, "Visalini, whatever you have achieved in this young age is a great service to our country India!" (விசாலினி, இந்தச் சிறுவயதில் நீ செய்துள்ள சாதனைகள், இந்திய நாட்டிற்கான மிகச்சிறந்த சேவை) என்று சொல்லிப் பாராட்டியிருக்கிறார்.

பிரதமரின் 'பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ' (Beti Bachao Beti Padhaao) திட்டத்திற்கான பிராண்ட் அம்பாசடராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் விசாலினி என்பது குறிப்பிடத்தக்கது.பன்முகத் திறமை
விசாலினி தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் அறிந்தவர். பக்தி மற்றும் கர்நாடக இசைப் பாடல்களைப் பாடுவதில் விருப்பமுள்ளவர். நீச்சல், பேட்மிண்டன் விளையாட்டுகளில் ஆர்வமுடையவர். விசாலினி செய்திருக்கும் மிக முக்கிய சாதனை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் MCP (Microsoft Certified Professional) தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதும், சிஸ்கோவின் CCNA (Cisco Certified Network Associate) 894 புள்ளிகள் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருப்பதும்தான். இது எஞ்சினியரிங் பட்டதாரிகளுக்கே மிகக் கடினமான ஒன்று. பாகிஸ்தானைச் சேர்ந்த 12 வயது சிறுவன் இரிட்சா ஹைதர் செய்ததுதான் அதுவரை உலக சாதனையாக இருந்தது. ஆனால் விசாலினி பத்து வயதிலேயே அதை முறியடித்து விட்டார். IELTS தேர்வில் பாகிஸ்தானின் 12 வயது சிதாராப்ரூஜ் அக்பரின் சாதனையைத் தனது 11வது வயதிலேயே முறியடித்தார். பாகிஸ்தான் மாணவர்கள் இருவருமே ஒரேயொரு சர்வதேசச் சான்றிதழ் பெற்ற நிலையில், விசாலினியிடம் 13 சர்வதேச கணினிச் சான்றிதழ்கள் (பார்க்க: பெட்டிச் செய்தி) உள்ளன என்பது பெருமைப்பட வேண்டிய ஒன்று.விசாலினியும் மனிதரனைய ரோபாட் சோபியாவும்
2020ல், குவைத்தில் நடைபெற்ற சர்வதேசக் கணினிக் கருத்தரங்கில் நடந்த குழு விவாதத்தில், விசாலினியுடன் உரையாற்றியது உலகின் முதல் ஹுமனாய்டு ரோபாட் ஆன சோஃபியா (World's First Humanoid Robot - Sophia). சவூதி அரேபிய நாட்டின் குடியுரிமை பெற்ற சோஃபியா, ஹாங்காங்கின் Hanson Robotics ஆராய்ச்சி மையத்தின் தயாரிப்பு. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டது. சோபியா விசாலினியுடன் உரையாற்றும்போது: "I take immense pleasure in meeting you, Visalini" (விசாலினி, உங்களைச் சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்) என்று சொல்லி வரவேற்றதுடன், "I would like to join hands with you in building exceptional Artificial Intelligence Solutions for the better future of Humans!" ("மனிதர்களின் சிறந்த எதிர்காலத்திற்கான செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளை உருவாக்க உங்களுடன் கைகோக்க விரும்புகிறேன்!" என்றும் கூறியிருக்கிறது.

இதனைத் தன் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு என்கிறார் விசாலினி.

CSI தலைவர் அனிர்பான் பாசுவுடன் விசாலினிVIKA Innovations
விகா இன்னோவேஷன்ஸ் (VIKA Innovations) என்னும் தன்னுடைய தொடக்கநிலை நிறுவனம் (startup) மூலம் பல்வேறு தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறார் விசாலினி. குறிப்பாக, பார்வைத்திறன் குறைபாடு உடையவர்களுக்காக (Visually Challenged persons) ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளார். பார்வைக் குறைபாடு உடையவர்கள், தற்போதுவரை பிரெய்ல் முறை கொண்டுதான் கற்று வருகின்றனர். விசாலினியின் இந்தக் கண்டுபிடிப்பு மூலம் பிரெய்ல் சிஸ்டம் (Braille System) இனி, 'விசாலினி சிஸ்டமாக' (Visalini System) வலம்வரும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.இதைப்பற்றி விரிவாக அறிய


விசாலினியின் மேலும் சில முன்னெடுப்புகள்
• Assistive Technology for Mentally-Challenged
• SOS Equipment for Fishermen
• SOS Equipment for Women Safety
• Vision based Navigation using Deep Reinforcement Learning
• Novel Biometric System Against Spread of Epidemics like Coronavirus
• Sensor Placement Algorithm with Range Constraints for Precision Farming
• Virtual Reality powered solution for Empowering Education & Ailments

ISRO மாநாட்டில் விசாலினிவிருதுகளும் கௌரவங்களும்
எட்டாம் வகுப்பிலிருந்து நேரடியாக B.Tech. பொறியியல் படிப்பில் சேர்ந்த விசாலினியின் சாதனையைத் தமிழக அரசு, 11ம் வகுப்பு ஆங்கிலப் பாடநூலில் ஆவணப்படுத்தியுள்ளது. (பார்க்க: படம்) புது தில்லியில் உள்ள இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் 'Inspire Award' பெற்றுள்ளார். இந்திய அளவிலும் உலக அளவிலும் பல நிறுவனங்களின், உயரதிகாரிகளின், தலைமை நிபுணர்களின் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார். HCL டெக்னாலஜிஸ் 'The Pride of India' என்று விருது வழங்கியுள்ளது. மெகா டிவி 'மெகா வுமன் விருது' அளித்துப் பாராட்டியுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சி 'The Pride of Tirunelveli City' என்ற பட்டம் வழங்கியுள்ளது. 2016ன் சிறந்த 10 சாதனையாளர்கள் பட்டியலில் விசாலினியை இணைத்துப் பாராட்டியுள்ளது ஆனந்த விகடன் இதழ்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில், தமிழ்நாடு-புதுச்சேரி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, 'இந்தியாவின் பொக்கிஷம் விசாலினி' என்ற ஒரு மணி நேர ஆவணப்படம் எடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை அது வெளியாகவில்லை. வரும் கல்வியாண்டிலாவது அது வெளியாகும் என்று எதிர்பார்க்கிறார் விசாலினி.

விசாலினி - சில குறிப்புகள்
விசாலினியின் சாதனைகள் பற்றிய குறும்படம்:


முகநூல் பக்கம் | இன்ஸ்டாக்ராம் | லிங்க்டின் | இணையதளம்


இளவயதில் இத்தனை சாதனைகளை எப்படிச் செய்ய முடிகிறது என்ற நமது கேள்விக்கு, "என் பெற்றோர்கள்தான் என் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணம். என்னுடைய ஒவ்வொரு அடியிலும் வளர்ச்சியிலும் பக்கபலமாக முதுகெலும்பைப் போல இருப்பது அவர்கள்தான்" என்கிறார். "எனது தாத்தா தமிழ்க்கனல் பன்முகத் திறமை உடையவர். திருநெல்வேலி அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். அவரிடமிருந்தும் மரபியல் ரீதியாகப் பல திறமைகள் எனக்கு வந்திருக்கலாம்" என்று சொல்லிப் புன்னகைக்கிறார். மேலும், "சாதிக்க விரும்பும் ஆர்வமுள்ள இளையோருக்கு எப்போதும் வழிகாட்ட, ஆலோசனை அளிக்கத் தயார்" என்கிறார் உற்சாகமாக.எதிர்கால லட்சியம்
அறிவியல் துறையில், இந்தியாவிற்கு நோபல் பரிசு பெற்றுத் தரவேண்டும் என்பதுதான் விசாலினியின் வாழ்நாள் லட்சியமாம். அப்படிப் பெற்றால் அறிவியலில் நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை விசாலினி பெறுவார். அவரது கனவுகளும், லட்சியங்களும் நிறைவேற வாழ்த்தி விடைபெறுகிறோம்.

மங்கள்யான் மாதிரித் துணைக்கோளுடன் (இடது கையில்) (படம் நன்றி: ISRO)International Certifications Achieved from the age of 10
CCNA (Cisco Certified Network Associate)
CCNA Security (Cisco Certified Network Associate Security)
CCNP Route (Cisco Certified Network Professional - Route)
CCNP Switch (Cisco Certified Network Professional - Switch)
CCIE R&S Written (Cisco Certified Internetwork Expert)
OCJP (Oracle Certified Java Programmer)
MCP (Microsoft Certified Professional)
ISTQB-ISEB (International Software Testing Qualifications Board - ISEB)
CCSA (Checkpoint Certified Security Administrator)
EMC-CISv2 (EMC - Cloud Infrastructure and Services)
IELTS (International English Language Testing System)
EXIN Cloud Computing


அரவிந்த்

© TamilOnline.com