தென்றல் பேசுகிறது
டெக்சஸ் மாநிலம் யுவால்டே, ராப் தொடக்கப் பள்ளியில் 17 குழந்தைகள் உட்பட 21 பேரைக் கண்மூடித் தனமாகச் சுட்டுக்கொன்ற அதிர்ச்சிச் செய்தியில் இருந்து நாம் மீளவில்லை. அதற்குள், ஓக்லஹாமாவின் டுல்சா மருத்துவமனை ஒன்றில் மற்றொரு வெகுஜனப் படுகொலையில் (mass murder) குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டில் மட்டுமே இதுவரை 213 துப்பாக்கியால் சுட்டு வெகுஜனப் படுகொலைகள் நடந்துள்ளதாகப் புள்ளிவிவரம் சொல்கிறது. அமெரிக்காவில் துப்பாக்கி வாங்குவது, வலி மாத்திரை வாங்குவதைவிட எளிது எனச் சமூக ஊடகங்கள் கேலி பேசுவதில் ஒரு வருத்தமான உண்மை உள்ளது. உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால், டெக்சஸ் மாநிலத்தில் 37 சதவிகிதத்தினரிடம் துப்பாக்கிகள் உள்ளன, அரசினால் கண்காணிக்கப்படும் துப்பாக்கி விற்பனைக் கடைகளின் எண்ணிக்கை 8600.

தொடக்கப் பள்ளியிலும் மருத்துவ மனையிலும் உயிருக்கு உத்தரவாதமில்லை என்கிற நிலை உண்டாகுமானால், துப்பாக்கிப் பரவல் குறித்து அமெரிக்கர்கள் தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய நிலை வந்துவிட்டது என்பது பொருள். இந்தத் திசையில் மக்களும் தலைவர்களும் சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள். ஆனாலும், இப்படிச் சிந்திப்பவர்களின் எண்ணிக்கை, துப்பாக்கி ஆர்வலர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக வேண்டும். தற்காப்பு என்ற பெயரில் இந்தக் கொலைக்கருவி தரும் பொருள்ரீதியான லாபத்தின் பின் ஓடுபவர்களைச் சட்டம் நெறிப்படுத்த வேண்டும். உயிருக்குப் பாதுகாப்பு இல்லாவிட்டால் பிற சுதந்திரங்கள் யாவுமே பொருளற்றவைதாம்.

★★★★★


ஆங்கில மருத்துவம் தவிரப் பிறவகை சிகிச்சைமுறை அனைத்துமே ஒடுக்கத் தக்கவை என்கிற போக்கு உலக அளவில் நிலவுகிறது. மாற்றுவகை சிகிச்சைகள் குறித்துத் தென்றலில் நேர்காணல் வெளியான போது நம்மையும் சிலர் மிரட்ட முயன்றதுண்டு. ஆனால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் பாரம்பரிய சிகிச்சை முறைகள் உள்ளன. மக்கள் அவற்றை நம்பி, பயன்படுத்தி குணமடைகின்றனர் என்பதில் ஐயமில்லை. இந்தியாவின் பாரம்பரியச் செல்வங்களை உயர்த்திப் பிடிக்கின்ற மோதி அரசு, பாரம்பரிய மருந்துக்கான உலக மையம் ஒன்றை (Global Centre for Traditional Medicine) இந்தியாவில் தொடங்க உலக சுகாதார நிறுவனத்துடன் (WHO) ஒப்பந்தம் செய்துள்ளது. $250 மில்லியன் முதலீட்டில் இந்த மையம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. வரவேற்று மகிழ்வோம்.

★★★★★


இந்திய பாட்மின்டன் அணி அண்மையில், 14 முறை சாம்பியன்களான இந்தோனேசியாவை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்துத் தாமஸ் கோப்பையைக் கைப்பற்றி சரித்திரம் படைத்தது. அதேபோல, ஆசியா கோப்பையின் நாக்-அவுட் கட்டத்தை அடைய 15-0 என்ற கோல் கணக்கில் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய ஹாக்கி அணி, 16-0 என்று விளாசித் தள்ளியதும் குறிப்பிடத் தக்கது. விளையாட்டுக் களத்திலும் சரித்திரங்கள் படைக்கும் காலம் இது என இந்தியராகப் பெருமிதம் கொள்வோம்.

★★★★★


இந்த இதழின் நேர்காணலைப் படித்துப் பாருங்கள், விசாலினியை 'Wonder Girl' என்று தயங்காமல் சொல்வீர்கள். வழக்கமான சிறுகதையாகத் தொடங்குகிற 'அனலாத்தி' முடிவில் வாசகரை "அட, ஆமாம்!" என்று எண்ண வைக்கும். ஈசான்ய ஞானதேசிகர் நமது ஞானப் பரம்பரையின் அற்புதமான எடுத்துக்காட்டு; அதே நேரத்தில் 'அலமாரி'யில் ஒரு மிரட்டும் சாமியாரும் இருக்கிறார். இனிப்பும் காரமும் வியப்பும் கசப்புமாக உங்கள் அறிவுக்குத் தீனிபோட வருகிறது 'தென்றல்'. வாசியுங்கள், நேசியுங்கள், உங்கள் கருத்துக்களை எழுதி அனுப்புங்கள்.

வாசகர்களுக்கு வைகாசி விசாகம் மற்றும் உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்துகள்!

தென்றல்
ஜூன் 2022

© TamilOnline.com