முதல் தவறு
அன்னை ஒருத்தி கடைத்தெருவுக்குப் போகும்போது தன் மகனைத் தோள்மீது சுமந்து செல்வாள். கூடையில் பழங்களை வைத்திருந்த ஒரு பெண்மணி அவளருகே நடந்து சென்றாள். அந்தக் கூடையில் இருந்த வாழைப்பழம் ஒன்றை அந்தக் குழந்தை எடுத்துத் தின்னத் தொடங்கியது. இதை அந்தத் தாயார் கவனித்தாள். பழத்தைக் குழந்தை பழக்காரியின் கூடையிலிருந்து திருடித் தின்பதை அறிந்ததும் அவள் 'என் பிள்ளை எத்தனை சாமர்த்தியம்' என்று பாராட்டினாள்.

அதனால் அந்தக் குழந்தை சின்னச் சின்ன திருட்டுக்களைச் செய்தது. வளர்ந்து சிறுவன் ஆனதும் ஜேப்படி (பிக் பாக்கெட்), வீடு புகுந்து திருட்டு, வழிப்பறிக் கொள்ளை எல்லாம் செய்தான். ஒருமுறை கொள்ளையடித்த போது அவன் ஒரு கொலையும் செய்துவிட்டான். அவனைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். தன்னைத் தூக்கில் இடுவதற்கு முன் தாயைப் பார்க்கவேண்டும் என்று அவன் விருப்பம் தெரிவித்தான்.

அடக்கமுடியாத துயரத்துடன் அழுது புலம்பியபடி அன்னை வந்தாள். மகனின் விதியை எண்ணி அவள் விசும்பினாள். தாயைத் தன்னருகே வரும்படி மகன் அழைத்தான். சற்றும் எதிர்பாராமல் அவன் அவளது கழுத்தை நெறிக்க முயன்றான். அங்கிருந்த காவலர்கள் அவர்களை விலக்கி விட்டார்கள். "தண்டனையை அவளுக்குத்தான் தரவேண்டும். என்னை இந்தக் கதிக்குத் தள்ளியது இவள்தான். இரண்டு வயதுக் குழந்தையாக இருந்த நான் வாழைப்பழத்தைத் திருடியபோது என்னைப் பாராட்டுவதற்குப் பதிலாகக் கண்டித்திருந்தால், நான் இந்தக் கெட்ட வழிக்கு வந்திருக்கவே மாட்டேன்" என்றான் அவன்.

நன்றி: சனாதன சாரதி, ஜனவரி 2022.

பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா

© TamilOnline.com