அம்பாளுடன் பேசிய அம்மா
என் தாயாரைப் பொறுத்தமட்டில், அவர் பள்ளி சென்று கல்வி கற்காதவர். ஆனால், மிக இளவயதிலேயே பூசை செய்வதில் ஈடுபட்டு, நானும் என் தங்கையும் சிறு பிள்ளைகளாக இருக்கின்ற காலத்தில் ஆன்மிகத் துறையில் மிக மிக உயர்வாக வளர்ந்துவிட்டார். தந்தையார் நிர்வாண தீட்சை என்று சொல்லப்படக் கூடிய தீட்சை எடுத்துக்கொண்டு சிவபூசை செய்தார். தாயார் அப்படியெல்லாம் செய்யவில்லை. அவரும் பூசை செய்தார். ஆனால், இம்மாதிரி வரன்முறைக்குட்பட்டுக் கற்றுக்கொண்டு செய்யவில்லை. அவராகவே ஏதேதோ செய்து மிகப்பெரிய நிலையை அடைந்தார். அவர் அம்பிகையைத்தான் பூசை செய்வார். அதாவது, அவினாசியிலுள்ள கருணாம்பிகை அவருடைய கண்கண்ட தெய்வம். அந்தப் பூசை முடிவில் யார் எந்தப் பிரச்சினையை எழுப்பினாலும் அதற்கு விடை கண்டு சொல்லக்கூடிய அளவு ஆன்மிக வளர்ச்சி பெற்றிருந்தார்.

தாயாரினுடைய ஆன்மிக வளர்ச்சியும், தந்தையாருடைய அறிவு வளர்ச்சியும் என்னுடைய வாழ்க்கையில் உரமாக அமைந்தன. இரண்டையும் ஒருசேரக் கொள்ளக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருந்தேன்.

என் தாயாரைப்பற்றி இப்பொழுது நினைக்கும் பொழுது, மிக இளமையாக நான் இருந்தபொழுது நடந்த ஒரு நிகழ்ச்சி இன்றும் என் மனத்தில் பசுமையாக இருக்கிறது. மிக ஆழ்ந்த தீவிரமான பக்தியோடு வழிபாடு செய்பவர் என்பதை முன்னரே குறிப்பிட்டுள்ளேன். பெரும்பாலும் பூசை முடிந்தபிறகு அவர் ஏதோ பேசிக்கொண்டிருப்பார். அது யாருடன் என்பது முதலில் எங்களுக்குத் தெரியாது. பல சமயங்களில் அவர் வழிபடும் கருணாம்பிகையிடம்தான் பேசுகிறார் என்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு, தந்தையார் உள்பட எங்களுக்குப் பிற்காலத்தில் ஏற்பட்டது.

ஒருமுறை எனக்குப் பத்து வயது இருக்கும் என்று நினைக்கிறேன். அப்பொழுது லால்குடி வடக்குத் தெருவில் தங்கியிருந்தோம். பூசை முடிந்தபின் என் தாயார் தந்தையாரிடம் வந்து "புதுத்தெருவில் கோபாலகிருஷ்ணையர் என்ற பெரிய பொறியியல் வல்லுநர் வீட்டில் ஒரு பதக்கம் இருக்கிறது. சிவப்புக் கல்லாலான அந்தப் பதக்கம் விற்பனைக்குத் தயாராக உள்ளது. அதைப் போய் வாங்கி வந்து, கருணாம்பிகைக்கு அவினாசியில் கொண்டுபோய் அணிவிக்க வேண்டும்" என்றார். தாயாருடைய ஆன்மிகப் பழக்க வழக்கங்களில் நம்பிக்கை கொண்டவராயினும் தந்தையார் இதனை ஏற்க மறுத்து விட்டார். கோபாலகிருஷ்ணையர் மிக மிக வசதி படைத்த ஒருவர், பெரிய ஒரு வீட்டில் குடியிருக்கிறார். பொதுவாக வசதி படைத்தவர்கள் தங்களிடம் உள்ள நகைகளை விற்பது என்பது அக்காலத்தில் நடைபெறாத காரியம். விற்பது என்றாலே "ஏதோ குடும்பத்தில் ஒரு சூழ்நிலை உருவாகித்தான் நகைகளை விற்கத் தொடங்கியிருக்கிறார்கள்" என்ற அவப்பெயர் வருமாதலால் யாரும் விற்கின்ற பழக்கமில்லை. எனவே, தந்தையார் மறுத்துவிட்டாலும் தாயார் விடாமல் "அதை நூற்றைம்பது ரூபாய் கொடுத்து வாங்கிவிடுங்கள்" என்று சொன்னார்கள். அதோடு ரூபாயையும் எடுத்துக் கொடுத்தபொழுது தந்தையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மடியில் விபூதிப் பையில்தான் பணத்தை வைப்பார். வைத்துக் கட்டிக்கொண்டு புதுத்தெரு சென்று ஏதோ நிஜமாகத் தெருவோடு போகிறவர்போலச் சென்று கோபாலகிருஷ்ணையரைச் சந்தித்தார்.

கோபாலகிருஷ்ணையர் தந்தையாரிடம் மிகவும் மரியாதையும் அன்பும் உடையவராதலால் "வருக வருக" என்று இவரை வரவேற்று, இரண்டு பேரும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்படியிருக்கும் பொழுது திடீரென்று ஐயரின் தாயார் வாசற்படிக் கதவருகில் நின்றுகொண்டு "இந்தச் சிவப்புக்கல் பதக்கம் ஒன்று எவ்வளவு வருடமாக வீட்டில் கிடக்கிறது! அதை என்னடா பண்ணுவது? நாம யாரும் போடவும் முடியாது. அதை வித்துவிடேன். என்னத்துக்கு அது?" என்றார். தந்தையார் திடுக்கிட்டார். ஆனால் ஒன்றும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அதற்கு ஐயர் "சரிம்மா, கொடுத்தால் போச்சு என்ன விலை என்றால் கொடுக்கலாம்" என்றார். அதற்கு "நூறு, நூற்றைம்பது வந்தால் கொடுத்துவிடலாம்" என்றார். உடனே தந்தையார் "நான் நூற்றைம்பது ரூபாய் கொடுத்து, அதை வாங்கிக் கொள்கிறேன்" என்றார். ஐயருக்கு ஒன்றும் புரியவில்லை. "தாயார் விற்கலாம் என்று சொன்னார். நீங்கள் வாங்கவேண்டும் என்று ஒன்றும் அவசியம் இல்லை, நீங்கள் இதற்காகச் சிரமப்படவேண்டாம்" என்றார்.



தந்தையார் நடந்தவற்றைக் கூறியவுடன் ஐயர் மறுவார்த்தை பேசாமல் பதக்கத்தைக் கொண்டுவந்து கொடுத்தார். தந்தையார் வாங்கிக் கொண்டு வந்துவிட்டார். பிறகு ஓரிரு மாதம் கழித்து அவினாசிக்குச் சென்று அபிஷேகமெல்லாம் செய்து அம்பிகைக்கு அப்பதக்கத்தை அணிவித்தார்கள், என் தாய் தந்தையர். அந்தப் பதக்கம் இன்னும் அவினாசி அம்பிகைக்கு மார்புப் பதக்கமாக இருப்பதை அறிவேன். இது தாயாருடைய ஆன்மிகத் துறையில் கிடைத்த அனுபவம்.

இதுபோல எத்தனையோ சொல்லிக்கொண்டு போகலாம். தாயார் அம்பிகையுடன் பேசும் பழக்கமுடையவர் என்பது அந்த ஊரில் எல்லோருக்கும் தெரிந்ததால், கோயிலில் பூசை செய்கின்ற அர்ச்சகர்கூடத் தாயாரிடம் வந்து விபூதி வாங்கிச் செல்வார்.

இன்னும் ஒரே ஒரு நிகழ்ச்சி. அதுவும் மனத்தில் நீங்காத நினைவு. 1935 என்று நினைக்கிறேன். தந்தையார் மலேசியா செல்வதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்துகொண்டிருந்தார். திடீரென்று நிமோனியா காய்ச்சல். ஒன்றும் மருந்துகள் இல்லை. டாக்டர் சோமசுந்தரம் என்பவர்தான் குடும்ப மருத்துவர். அவர் வந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு நிலை தாண்டி, "இனி ஒன்றும் முடியாது" என்ற நிலைக்கு வந்துவிட்டது. அப்பொழுது டாக்டர் சோமசுந்தரம், அமிர்தம் செட்டியார், ஜம்புலிங்கம் செட்டியார் ஆகிய நண்பர்கள் எல்லாம் தந்தையாருடைய இறுதிநிலை அறிந்து, வீட்டில் வந்து கூடிவிட்டனர். தாயார் அவர்கள் பூசைக்குச் சென்றவர் திடீரென்று பத்ரகாளிபோல் வந்து சேர்ந்தார். "அடே சம்பந்தா, மோரைக் கரைத்துக் கொண்டு வா, பெருங்காயத்தைப் போட்டு உங்க அப்பாவிற்குக் கொடுக்க வேண்டும்" என்றார்.

டாக்டர், "அம்மா இந்த நிமோனியாக் காய்ச்சலில் மோர் கொடுத்து விரைவில் அனுப்பணுமா" என்று நொந்துபோய்க் கேட்டார். அவரிடத்தில் மரியாதையும், அன்பும் கொண்ட தாயார் "டாக்டர், உங்கள் வைத்தியம்தான் இதுவரை பார்த்தீர்களே. ஒன்றும் கையால் ஆகாது என்று விட்டுவிட்டீர்களே. இனி விட்டுவிடுங்கள்" என்றார். "இது எனக்கும் என் கணவருக்கும் உள்ள விஷயம்" என்றார். என் தங்கையின் கணவர் காலஞ்சென்ற இராமலிங்கம் கூட இருந்தார். அவரும் இதைத் தடைசெய்து பார்த்தார். ஆனால், தாயார் நின்ற நிலையில் ஒரு கண்ணைச் செருகி வைத்துக்கொண்டு, "இதனைச் செய்" என்றவுடனே நான் மோரைக் கரைத்து உப்பும், பெருங்காயமும் போட்டுக் கொண்டு வந்தேன். ஒரு இரண்டு டம்ளர் மோர் இருக்கும், பக்கத்திலிருந்த தாயார் தந்தையாரைத் தூக்கி - ஏறத்தாழ மேற்சுவாசம் காணுகின்ற நிலை அப்பெழுது. அவரை என் மைத்துனர் தோளில் சாய்த்துவிட்டு அந்த டம்ளர் மோரை எடுத்து, "இந்தாங்க குடிங்க. கருணாம்பிகை குடிக்கச் சொல்கிறாள்" என்றார்.

அவரால் குடிக்க இயலாதபொழுது நாங்கள் சிறிது சிறிதாக அந்த மோரைச் செலுத்தினோம். டாக்டர் சோமசுந்தரமும் மற்றவர்களும் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக இரண்டு டம்ளர் மோரையும் குடிக்கவைத்துப் படுக்க வைத்துவிட்டோம். ஒரு பத்து நிமிடங்கள் கழித்து ஒரு பெரிய கனைப்பு இருமல். எழுந்து உட்கார்ந்தார் தந்தையார், "என்ன எல்லோரும் கூடியிருக்கிறீர்கள்?" என்றார். அப்பொழுது டாக்டர், செட்டியார், முதலானவர்களுக்கு ஏற்பட்ட வியப்பிற்கு ஒரு அளவேயில்லை . பிறகு "ஒன்றும் இல்லை" என்று சமாதானம் சொல்லி, "உங்களுக்கு உடல்நிலை நன்றாக இல்லை" என்றார்கள். "அதுதான் பார்க்க வந்தோம்" என்று கூறி, பிறகு அங்கேயே இருந்து தந்தையார் நன்றாக நினைவு திரும்பி உடல் நன்றான பிறகு அவர்கள் எல்லோரும் புறப்பட்டார்கள். பிறகு அம்மா அவர்கள் நடந்தவற்றைச் சொன்னார்கள். "சரி, கருணாம்பிகை வைத்தியம் என்றால் அப்புறம் என்ன?" என்றார்கள். பிறகு உடல் தேறி மலேசியா எல்லாம் போய் வந்தார்கள். அது வேறு விஷயம்.

இந்த இரண்டு நிகழ்ச்சிகள் தாயாருடைய தெய்விக ஆற்றலுக்குச் சான்றாக உள்ளவை.

நன்றி: 'நான் கண்ட பெரியவர்கள்', பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன், கங்கை புத்தக நிலையம்)

அ.ச. ஞானசம்பந்தன்

© TamilOnline.com