தென்றல் பேசுகிறது...
மக்கள் தொகையில் 1,000 பேருக்கு ஒரு டாக்டர் என்ற விகிதம் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர் இருப்பதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சர் அண்மையில் கூறியிருக்கிறார். புள்ளிவிவரம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் கொரோனாகாலச் சிக்கல்களும் புதுயுக வாழ்முறை ஏற்படுத்தும் பாதிப்புகளும் சமுதாயத்தில் மருத்துவர்களுக்கான தேவையை அதிகரித்துள்ளது. அதிலும் பெரும்பாலான மருத்துவர்கள் நகர்ப்புறங்களிலேயே குவிந்துள்ளனர். பிரதமர் மோடி அவர்கள், இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கப் போவதாக அறிவித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, மருத்துவர் சேர்க்கையைப் பெருவணிகமாக மாற்றிவிட்ட அவலத்தை மாற்றவும் இது உதவும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் 'பிரதான் மந்திரி ஜன ஆரோக்ய யோஜனா' ஏழைகளுக்கு மருத்துவக் காப்பீட்டு வசதியை எளிதாக்கி இருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஜனவரி 2022ல் மட்டுமே தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் பிரதம மந்திரியும் தமிழக முதல்வரும் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைத்தது இங்கே நினைவுகூரத் தக்கது.

★★★★★


அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி விகிதம் -1.4 சதவிகிதம் குறைந்துள்ளது. முன்னரே நாம் இதற்கான காரணங்களை அலசியுள்ளோம். இதுவும், கிடுகிடு விலைவாசி ஏற்றமும் சேர்ந்து பொருளாதாரச் சரிவை ஏற்படுத்தும் என்ற அச்சமும் உள்ளது. விலைகுறைந்த கச்சாப் பொருட்களை இறக்குமதி செய்வது உற்பத்தியை அதிகரிக்க, விலைவாசியைக் குறைக்க, வேலை வாய்ப்புகளைப் பெருக்க எனப் பலமுனையிலும் நாட்டுக்கு உதவும். இதற்கிடையில் ரஷ்யா-உக்ரேன் போருக்கும் ஒரு முடிவு கண்டாக வேண்டும். குடிவரவு மற்றும் இறக்குமதிக் கொள்கைகளில் ஆரோக்கியமான மாறுதல்கள் தேவை. அலை அலையாக வந்து அச்சுறுத்தும் கொரோனாவை அடக்கியாக வேண்டும். மிகுந்த எதிர்பார்ப்புடன் சிம்மாசனம் ஏறிய பைடன்-ஹாரிஸ் அணி இவற்றை முனைந்து செய்யும் என நம்புகிறோம்.

★★★★★


அமெரிக்காவின் பிரதான உளவு நிறுவனமான CIAவின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரியாக இந்திய அமெரிக்கர் திரு. நந்த் மூல்சந்தானி நியமிக்கப்பட்டிருப்பதில் நமக்கெல்லாம் மகிழ்ச்சி. தனியார் துறையிலும் அரசுத் துறையிலும் அவர் கொண்டுள்ள அனுபவம் இந்தப் பணியை மிகத்திறம்படச் செய்வதில் அவருக்கு உதவும். வாசகர்கள் சார்பாகத் தென்றல் அவரை வாழ்த்தி வரவேற்கிறது.

★★★★★


இருபத்தி இரண்டு வயதில் தனது ஓவியத்துக்காகப் பல பரிசுகளை வென்றிருக்கும் ஓவியர் கிஷோர் நேர்காணல் எல்லா வயதினருக்கும் உற்சாகம் தருவது. ஐம்புலன் தாண்டிய அபூர்வ அனுபவங்கள் உண்டு என்பதை அடிக்கோடிட்டுச் சொல்வது தமிழறிஞர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்கள் தமது தாயார் குறித்து எழுதியுள்ளவை. 'வெட்டென மற' நிகழ்காலச் சவாலைப் படம்பிடிக்கும் நேர்த்தியான கதை. அரிய இஸ்லாமிய எழுத்தாளர் மஹதி, முன்னோடி K.R. வாசுதேவன் ஆகியோர் குறித்த கட்டுரைகள் மன எழுச்சி தருபவை.

வாசகர்களுக்கு ரம்ஜான், புத்த பூர்ணிமை வாழ்த்துகள்.

தென்றல்
மே 2022

© TamilOnline.com