சாதனைச் சிறுமி ஜியா ராய்
சாதிக்க வயது மட்டுமல்ல; உடல் மற்றும் மூளைக் குறைபாடும் தடையல்ல என்பதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார் 13 வயதான ஜியாராய். இவர் மும்பையைச் சேர்ந்தவர். ஆட்டிசப் பாதிப்பால் வாய் பேச இயலாதவர். மும்பையில் இந்தியக் கடற்படையில் பணியாற்றும் தந்தை மதன்ராய், மகளுக்குச் சிறு வயதிலேயே நீச்சலில் ஆர்வம் இருப்பதைக் கண்டறிந்தார். இதனால் முறையாக நீச்சல் பயிற்சி அளிக்க முடிவு செய்தார். தாய் ரெஜினா ராயும் கணவரது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்தார்.தொடர் பயிற்சிகள், முயற்சிகளின் விளைவாக நீச்சலில் சாதனைகளை நிகழ்த்த ஆரம்பித்தார் ஜியா ராய். பல பரிசுகளை வென்றார். இவரது சாதனைகளை அறிந்த பாரதப் பிரதமர் நரேந்திரமோடி, தனது ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்வில் ஜியா ராயைப் பாராட்டி பேசினார். அது இவரது முயற்சிகளுக்கு மேலும் ஊக்கமளிப்பதாய் இருந்தது.தொடர் முயற்சியாக, சமீபத்தில், இந்தியாவையும்-இலங்கையையும் இணைக்கும் பாக் ஜலசந்தியை, 13 மணி நேரம் 10 நிமிடத்தில் கடந்து புதியதொரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் ஜியா ராய். அவர் கடந்த மொத்த தூரம் 29 கி.மீ. இதற்கு முன் 2004ல், பூலா சவுத்ரி என்ற பெண் இதே தூரத்தை 13 மணி நேரம் 52 நிமிடத்தில் கடந்ததுதான் இதுவரையிலான சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை முறியடித்திருக்கிறார் ஜியா.உலகின் அனைத்துக் கடல்களிலும் நீந்தவேண்டும் என்பது இவரது விருப்பம்.

விருப்பம் நிறைவேற வாழ்த்துவோம்.

© TamilOnline.com