பாடம் புகட்டினாள்
ஒரு பணக்காரர் அரிசி மில் வைத்திருந்தார். பசியோடு இருப்பவருக்கு உணவு கொடுப்பதே கடவுளுக்கு மிகவும் பிடித்த சேவை என்று ஒரு பண்டிதர் விளக்குவதை அவர் கேட்டார். தனது கிராமத்திலுள்ள ஏழைகளுக்கு உணவளிக்கத் தீர்மானித்தார். ஆனால், இதற்குத் தன்னிடமிருந்த உயர் ரக அரிசிகளைப் பயன்படுத்த அவருக்கு மனமில்லை. ஏதாவதொரு அரிசியைப் போட்டால் போதும் என்று அவர் நினைத்தார். எனவே அவர் தனது கிடங்கில் புழுத்துக் கிடந்த அரிசியைத் தருவித்தார். அதிலிருந்த புழுக்களைக்கூட நீக்கவில்லை.

பசியோடு வந்த ஏழைகளுக்கு அதைச் சமைத்துப் பரிமாறினார். அதன் காரணமாக அதை உண்டவர்கள் பலவகை நோய்களுக்கு ஆளாகினர். அவருடைய மனைவி அவருக்கு எது சரி என விளக்க முயன்றார். நூறு பேருக்கு மோசமான உணவு கொடுப்பதைவிடப் பத்தே பேருக்கு நல்ல உணவு கொடுப்பது புண்ணியம் என்றார் அவர். ஆனால் பணக்காரர் நல்ல அறிவுரையைக் கேட்கும் மனநிலையில் இல்லை.

அவருக்குப் பாடம் போதிக்க மனைவி ஒரு திட்டம் தீட்டினார். தினந்தோறும் அவர் பணக்காரரின் தட்டில் அழுகிப் புழுத்த அரிசி உணவை வைத்தார். கோபம் கொண்டு கணவர் திட்டியபோது அவர், "பிறருக்குத் தரும் துன்பத்துக்குப் பதிலாக ஒவ்வொருவரும் துன்பம் அனுபவித்தாக வேண்டும் என்று பண்டிதர் கூறினார். மரணத்துக்குப் பின் நீங்கள் புழுத்து வீணான அரிசியை உண்டுதான் ஆகவேண்டும். நான் இப்போதே அப்படிப்பட்ட உணவைக் கொடுத்து, உங்களை அதற்குத் தயார்படுத்துகிறேன். உங்கள் பாவச் செயலுக்குக் கிடைக்கும் உணவை உண்ண அது உங்களுக்கு உதவும்" என்றார்.

இதைக் கேட்டதும் பணக்காரர் தனது தவறை உணர்ந்தார். தான் செய்த தவறுக்கு வருந்தி, வேறு நல்ல வழிகளில் ஏழைகளுக்குச் சேவை செய்யக் கற்றார்.

நன்றி: சனாதன சாரதி, டிசம்பர் 2021

பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா

© TamilOnline.com