சத்குருவின் 'மண் காப்போம்' இயக்கம்
'ஈஷா' அமைப்பின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களை ஆன்மீகத் தலைவராக, யோகியாக, சித்த புருஷராக உலகம் நன்கு அறியும். அதே நேரத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வூட்டும் நாயகர், நசிந்து வரும் ஆதிகுடிகளின் கலாச்சார மீட்பாளர், நதிகளை உயிர்ப்பிக்கும் முன்னோடி என்பதாகவும் அவர் புகழ் பெற்றிருக்கிறார். அந்த வகையில், புவிக்கோளத்தை மானுடர் வாழத் தகுதியுள்ளதாகத் தக்க வைக்கும் பொருட்டு சத்குரு தற்போது 'மண் காப்போம்' (Savi Soil) என்ற விழிப்புணர்வு இயக்கத்தை உலக அளவில் முன்னெடுத்திருக்கிறார்.மண் மனித வாழ்வின் ஆதாரம். மிகையான ரசாயனம் சார்ந்த வேளாண்மையால் மண் சோகை பிடித்து, பயிர்வளம் தரும் வலிவை இழந்து வருகிறது. மண்ணின் வீரியத்தை மீட்டெடுப்பது மக்கள் கடமை. இதனால்தான் சத்குரு 'மண் காப்போம்' இயக்கத்தை உலக அளவிலான மக்கள் இயக்கமாக விரிவுபடுத்தத் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.இந்தச் செயல்பாடுகளின் ஓர் அங்கமாக சத்குரு 24 நாடுகளின் ஊடே ஒரு 30,000 கி.மீ. தூர மோட்டார் சைக்கிள் பேரணி ஒன்றைத் தானே முன்னின்று நடத்தினார். கரீபியன் நாடுகளான ஆன்டிகுவா, பார்புடா, பார்படோஸ், டொமினிகா, கயானா, செயின்ட் லூசியா, செயின்ட் கிட்ஸ் ஆகியவற்றின் பிரதமர்களும், அமைச்சர்களும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் பங்கேற்று, மார்ச் 11, 2022 அன்று, 'மண் காப்போம்' குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

மண் வளத்தைப் பாதுகாப்பதற்கு உகந்த சட்டங்களையும், திட்டங்களையும் வகுப்பதில் உலக நாடுகளின் அரசுகளுக்கு உதவுவதும், அவற்றைச் செய்ய உந்துவதும் 'மண் காப்போம்' இயக்கத்தின் முக்கிய நோக்கங்களாகும். இன்ன பிற நடவடிக்கைகள் மூலம் உலக நாடுகளில் வசிக்கும் வாக்குரிமை கொண்ட குடிகளின் 60 சதவிகிதத்தினரைத் தட்டி எழுப்பி, சுற்றுச்சூழல் பிரச்சனைகளைத் தேர்தல் அறிக்கையில் கொண்டுவரச் செய்வது மற்றொரு முக்கிய அம்சமாகும்.பூமி சோர்ந்தால் பூமி புத்திரர் சோர்வர். மண் வளமிழந்தால் மண்ணின் மைந்தர் நலமிழப்பர். ஆன்ம பலத்தோடு சத்குரு விடுக்கும் அழைப்பை ஏற்று உலக நாடுகள் செயல்பட வேண்டும். இது காலத்தின் கட்டாயம். அதுவே, நமக்கிருக்கும் இந்த ஒரே கோளத்தில் வரும் நாட்களில் நமது சந்ததிகளுக்கு மகிழ்ச்சியான வாழ்வை உறுதி செய்யும்.

மதுரபாரதி

© TamilOnline.com