நிதானம் பிரதானம்
ஒன்பது மாத கர்ப்பிணியான ரேவதி தன் ஃப்ளாட் கதவைப் பூட்டிவிட்டு மெதுவாக வாசலை நோக்கி நடந்தாள். எதிர்த்திசையில் இருந்து திடீரென புயலைப்போல தடதடவென்று ஓடிவந்தான் அந்த இளைஞன்.

நல்ல வேளையாக ரேவதி சுதாரித்துக் கொண்டு பக்கவாட்டில் திரும்பிக் கொண்டதால் அவன் அவள்மேல் இடிக்கவில்லை. லேசாக அவளது தோள்பட்டையை உரசியபடி ஓடியவனைச் சரேலென்று திரும்பி, சட்டையைப் பிடித்து இழுத்து நிறுத்தினாள்.

"டேய் யார்ரா நீ? அறிவிருக்கா உனக்கு? அப்படி என்ன உயிர் போற அவசரம்? மாசமா இருக்கவள இடிச்சுட்டு ஒரு சாரிகூட சொல்லாம ஓடுறியே, எனக்கு ஏதாவது ஆயிருந்தா யாருடா பொறுப்பு?" அவன்மீது கனலைக் கக்கினாள்.

அவன் பதில் பேச முற்படுமுன் ராஸ்கல் என்று சொல்லிவிட்டு கன்னத்தில் ஒரு அறை விட்டாள்.

சரியாக அந்த நேரத்தில் "ஆம்புலன்சை நிக்க வச்சிட்டு என்னடா பண்ணிட்டு இருக்க? இதுதான் உங்க அக்காவா? இவங்களுக்குதான் பிரசவ வலியா?" என்று கேட்டபடியே வந்தாள் ஒரு நர்ஸ்.

"இல்ல சிஸ்டர், அக்கா அஞ்சாவது ஃப்ளோர்ல இருக்காங்க. அவங்களுக்கு வலி அதிகமாயிடுச்சு. நீங்க ஸ்ட்ரெச்சர் எடுத்துட்டு லிஃப்ட்ல வாங்க ப்ளீஸ்" என்று சொல்லிவிட்டு, சட்டென்று அவள்பக்கம் திரும்பி "சாரிக்கா" என்றபடி படபடத்து ஓடியவனைப் பார்த்தபடி சிலைபோல நின்றிருந்தாள் ரேவதி.

விஷ்வசாந்தி சரவணகுமார்,
டாலஸ், டெக்சஸ்

© TamilOnline.com