திருநாங்கூர் வரதராஜப் பெருமாள் ஆலயம்
தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமணிக்கூடம் என்னும் திருநாங்கூர் கிராமத்தில் வரதராஜப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது.

தலப்பெருமை
மூலவர் வரதராஜப் பெருமாள். பிற நாமங்கள்: கஜேந்திர வரதன், மணிக்கூட நாயகன். தீர்த்தம்: சந்திர புஷ்கரணி. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம். தாயார்: திருமகள் நாச்சியார், ஸ்ரீதேவி. இத்தல இறைவன் கிழக்குப் பார்த்து நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். மூலவர் சன்னிதியில் மேலேயுள்ள விமானம் 'கனக விமானம்' எனப்படுகிறது. இத்தல இறைவனை கருடாழ்வார், சந்திரன் ஆகியோர் வந்து தரிசித்து அருள் பெற்றுள்ளனர்.

ஆலயத்தின் உள்ளே நுழைந்ததுமே பலிபீடம். அடுத்து கருடாழ்வார் சன்னதி, மகாமண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பகிரகம். மூலஸ்தானத்தில் வரதராஜர் கிழக்குப் பார்த்து தாமரை பீடத்தின்மீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். பின் கைகளில் சங்கு, சக்கரம். 'ஊரு முத்திரை'யில் (கையைத் தொடையில் வைத்த கோலத்தில்) சேவை சாதிக்கிறார். பெருமாளின் வலப்புறத்தில் சதுர வடிவமான தாமரைப் பீடத்தின்மீது நின்றபடி இடக்கரத்தில் தாமரை மலருடனும் வலது காலைத் தொங்கவிட்டபடியும் ஸ்ரீதேவி காட்சியளிக்கிறார். அருகில் உற்சவ மூர்த்திகள். அர்த்த மண்டபத்தின் வலப்புறம் நம்மாழ்வார் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார்.



தட்சனுக்கு 27 மகள்கள். அனைவரும் சந்திரனைத் திருமணம் செய்துகொண்டனர். 27 பெண்களிடமும் ஒரேமாதிரி அன்பு செலுத்துவதாகத் தட்சனிடம் சந்திரன் வாக்குக் கொடுத்தார். ஆனால், ரோஹிணியிடம் மட்டும் மிகுந்த காதலுடன் இருந்தால், மற்ற மனைவியர் தந்தையிடம் முறையிட்டனர். கோபமடைந்த தட்சன், 'உன் அழகும் ஒளியும் தினம் தினம் குறையட்டும்' எனச் சந்திரனுக்குச் சாபமிட்டான். முழுச் சந்திரன் தேயத் தொடங்கினான். சாபம் தீர திருஇந்தளூர், தலைச்சங்காடு என ஒவ்வொரு கோயிலாகச் சென்று, கடைசியில் திருமணக் கூடத்திற்கு வந்தான். அங்கே அவனுக்குப் பெருமாள் வரம் தந்து வரதராஜராகக் காட்சி தந்தார்.

தீராத நோய்தீர இத்தல இறைவனைப் பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். இது பெருமாளின் 108 திருப்பதிகளில் 37வது தலம். வைகுண்ட ஏகாதசித் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.

ஆலயம் காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரையும் மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும் திறந்திருக்கும்.

கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் மரியும் மாவும்
அண்டமும் சுடருமல்லா ஆற்றதுமாய எந்தை
ஒண்டிறல் தென்னனோட வடவர சோட்டங்கண்ட
திண்டிற லாளர் நாங்கூர்த் திருமணிக் கூடத்தானே.

- திருமங்கையாழ்வார்

சீதாதுரைராஜ்,
சான்ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com