தென்றல் பேசுகிறது...
மூன்றாவது உலகப் போர் என்று ஒன்று வந்தால் அது அணு ஆயுதப் போராக இருக்கும், அதனால் ஏற்படும் அழிவு மனிதனின் கற்பனைக்கு எட்டாததாக இருக்கும் என்ற அச்சமே நாடுகளை இதுவரை போர் தொடங்க விடாமல் செய்து வந்தது. அதையும் மீறி ரஷ்யா உக்ரைன்மீது போர் தொடுத்துவிட்டது. உலக நாடுகள் தத்தமது வியூகங்களை வகுத்த போதிலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு உலகப் போராக மாறிவிடக் கூடாதென்பதிலும், இயன்றவரை ராஜதந்திரம், கலந்தாலோசனை மூலமே சேதத்தைக் குறைக்கவும் நிறுத்தவும் வேண்டும் என்பதிலும் யாவரும் குறியாக இருப்பதைக் காண முடிகிறது. ரஷ்யாமீது விதிக்கப்படும் பொருளாதார, வணிக ரீதியான தடைகள் எத்தனை பயனுள்ளதாக இருக்கும் என்பதைச் சொல்ல முடியவில்லை. உக்ரைன் மிகுந்த இழப்புகளை இந்தத் தாக்குதலால் சந்தித்துவிட்டது. தத்தம் நிலைப்பாடுகளை எவரும் தளர்த்துவதாகத் தெரியவில்லை. தீர்வு ஏதோவொரு திருப்புமுனையில் நிகழும். அந்தத் திருப்புமுனை எதுவாக இருக்கக்கூடும் என்பதுதான் இன்றைய கேள்வி. தீர்வு விரைவில் வரட்டும்.

★★★★★


51 வயதான கெடாஞ்சி பிரவுன் ஜாக்சன் என்னும் கறுப்பினப் பெண்மணியை அதிபர் ஜோ பைடன் அமெரிக்க உச்சநீதி மன்ற நீதிபதி பதவிக்கு முன்மொழிந்துள்ளார். இந்தப் பதவியை வகிக்கத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் கறுப்பினப் பெண்மணியாக இவர்தான் இருப்பார். இந்த நியமனம் உறுதி செய்யப்பட்டதும், நீதியரசர் கிளாரென்ஸ் தாமஸ் அவர்களை அடுத்து இந்தப் பதவியை வகிக்கும் இரண்டாவது கறுப்பினத்தவராக இவர் இருப்பார். அஹமௌது ஆர்பரி, ஜார்ஜ் ஃப்ளாயிடு ஆகியோர் மீதான, கறுப்பினத்தவருக்கு எதிரான வன்முறைச் செயல்பாடுகள் சமுதாயத்தில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாட்டின் நீதி மன்றங்களுக்குச் சரியான புரிதலை ஏற்படுத்துவதாக, அவற்றின் மீது நம்பிக்கை ஏற்படுத்துவதாக இந்த நியமனம் அமைகிறது என்பதில் சந்தேகம் இல்லை.

★★★★★


வளரும் இசைக்கலைஞர் ஸ்வராத்மிகாவுடன் நேர்காணல், பத்மஸ்ரீ விருதுபெற்ற சதிராட்டக் கலைஞர் முத்துக்கண்ணம்மாள், 'லைஃப் ட்ரஸ்ட்' கலைவாணி, எழுத்தாளர் கலைச்செல்வி ஆகியோர் பற்றிய அருமையான கட்டுரைகள் என இந்த மகளிர் சிறப்பிதழ் பெண்மையைக் கொண்டாடுவதாக அமைகிறது. முதன்முதலில் ஆங்கில நாவல் எழுதிய இந்தியப் பெண்மணியான கிருபா பாய் சத்தியநாதன் பற்றிய கட்டுரையும் இதே கொண்டாட்டத்தின் ஒரு பகுதிதான். "வணக்கம் நான் உங்கள் தமிழ்ப்பையன். என்றென்றும் உங்கள் நண்பன்" என்று அசத்தலாகப் பேசி மனங்கவரும் சித்தார்த் வரதராஜனையும் சந்திக்கப் போகிறீர்கள். 'லாக்கெட் லோகநாதன்' உங்களைச் சற்றே திகிலடையச் செய்தால் ஆச்சரியமில்லை.

வாசகர்களுக்கு மஹா சிவராத்திரி, தமிழ்ப் புத்தாண்டு, ஹோலி, புனிதவெள்ளி மற்றும் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்.

தென்றல்.
மார்ச் 2022

© TamilOnline.com