கிளீவ்லாந்தில் தியாகராஜ ஆராதனை!
கிளீவ்லாந்தில் ஆண்டுதோறும் நடை பெறும் தியாகராஜ ஆராதனை இசை ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் ஒன்று. கிளீவ்லாந்து பாலு, கிளீவ்லாந்து சுந்தரம் மற்றும் டொராண்டோ வெங்கடராமன் திருவிழாவை முன்னின்று நடத்தும் மூவர் ஆவர். இந்த ஆண்டும் மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை இந்த விழா நடக்க இருக்கிறது.

இந்த ஆண்டு விழாவில் பன்னிரண்டு வளரும் கலைஞர்கள் பங்குபெறப் போகிறார்கள். கிளீவ்லாந்தைச் சேர்ந்த பன்னிரண்டு வயதுக் கலைஞரின் ஒரு மணி நேரக் கச்சேரியும் இருக்கிறது. தேர்ந்த கலைஞர் களுக்கு நடத்தப்படும் பல்லவி பாடும் போட்டியில் முதல் பரிசு பெறுபவர் வருகை தரும் நட்சத்திர இசை கலைஞர்களுடன் இணைந்து வழங்க சிறப்பு இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இசைப் போட்டிகள் வழக்கம்போல உண்டு. அதைப் பற்றிய விவரங்களைப் பார்க்க: http://www.aradhana.org

சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியைச் சேர்ந்த B.V. ஜகதீஷ் மற்றும் சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் முன்னாள் இயக்குனர் நடராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கின்றனர். சங்கீத கலாநிதி வேலூர் ராமபத்ரன் தலைமை தாங்குகிறார்.

விழாவின் முக்கிய அம்சமான பஞ்சரத்ன கீர்த்தனையை T.M. கிருஷ்ணா பதிவுசெய்து அளித்துள்ளார். அதனை இணைய தளத்தில் பெற: www.aradhana.org/ music.html

கிளீவ்லாந்து நகர நிர்வாகம் இதற்குப் பல வகைகளில் உதவி செய்கிறது. மாநிலப் பல்கலைக் கழகம் அரங்கத்தை அளிக்கிறது.

நிகழ்ச்சியை நடத்த ஏராளமான தொண்டர்கள் தேவைப்படுகின்றனர். உங்களுக்கும் ஆர்வமிருந்தால் gomathy_balu@yahoo.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

இந்தவருடத்தின்சிறப்புநிகழ்ச்சிகள்: பத்மா சுப்பிரமணியம் அவர்களின் பரதநாட்டியம், ஏ.கே.சி.நடராஜன்-ரமணி இணைந்து வழங்கும் புல்லாங்குழல்-கிளாரினட் இசை, மறைந்த இசை மேதைகள் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோருக்கு அஞ்சலி, போன்ற சிலவற்றைக் கூறலாம். அருணாசாயிராம், உன்னி கிருஷ்ணன், T.M. கிருஷ்ணா ஆகியோர் பங்கு பெறுகிறார்கள்.

கௌரவிக்கப்படுபவர்கள்: சங்கீதரத்னா கரா- ஏ.கே.சி.நடராஜன்; நிருத்ய ரத்னா கரா - செல்வி பத்மா சுப்பிரமணியம்; சங்கீத கலாசாகரம் - பேரா. ராமரத்தினம்; சேவாரத்னா - டாக்டர் ரோட்ரிக் நைட் (ஓபர்லீன் கல்லூரி); கலாசேவாமணி - சாரதா வெங்கடராமன். மேலும் 'பைரவி' அமைப்பு, அமெரிக்காவின் சிறந்த இசையாசிரியருக்கு விருது வழங்க விருக்கிறது.

இந்திய உணவு, தங்கும் வசதிகள், விமானப் பயண ஏற்பாடு என அனைத்து அடிப்படைத் தேவைகளையும் முன் கூட்டியே செய்து கொள்ள, இணையத்தளத்தில் விவரங்கள் தரப்பட்டுள்ளன.

பத்மப்ரியன்

© TamilOnline.com