அந்த நாள்
தண்டனை அனுபவித்த பின் விடுதலை அடையும் கைதிகள், அடுத்த நாள் சுதந்திரமாகத் தன் வீட்டிற்கும் வெளி உலகிற்கும் செல்கிறோம் என்ற பூரிப்பில் அந்த இரவு எப்படா விடியும் என்று காத்திருப்பது இயல்புதானே?

பதினைந்து ஆண்டுகள் தண்டனை அனுபவித்து நாளை விடுதலை. என் மனமோ இது போன்ற உணர்வின்றி, பதினைந்து வருடத்துக்கு முந்தைய அந்த நாளையே மனத்திரையில் விடியும்வரை படம்போட்டுக் காட்டிக் கொண்டிருந்தது.

அந்த நாள்தான் என் வாழ்க்கையில் உற்சாகப் பெருமிதத்தோடு நான் மிதந்த நாளும், என் கனவுக் கோட்டைகள் தகர்ந்து பொடிந்த நாளும். அந்நாள் என் இதயத்தின் ஆறாப் புண் நாள் ஆயிற்று!

அந்த நாளில்...

கமகம என மணக்கும் சூடான காஃபியை உறிஞ்சியபடி, பெரிய பங்களா வராண்டாவில் சொகுசு நாற்காலியில் சாய்ந்த வண்ணம், கடந்த கால வாழ்க்கையை அசை போட்டுக்கொண்டிருந்தேன். ஐ.டி. கம்பெனி விருப்ப ஓய்வு பெற்ற நான்,

வெறும் பட்டப்படிப்புடன் தான் வாழ்க்கையைத் தொடங்கினேன். இன்று அதிகம் படித்து வெளிநாட்டில் வாழ்ந்துவரும் நண்பர்கள் உறவினர்களை விடப் பெரும் பணக்காரனாக, பங்களா காருடன் வாழ்கிறேன். ஒரே மகன் அமெரிக்காவில் கம்ப்யூட்டர் துறையில் PhD முடிக்கப் போகிறான்.

பெருமிதத்துடன் காபியை குடித்துக்கொண்டே யோசித்தேன். என் உத்தியோக சம்பளத்திலா இந்நிலையை நான் எட்டினேன்? எனது புத்தி சாதுரியம் அல்லவா இதற்குக் காரணம்!

தொழில்நுட்ப அறிவு இந்தியாவில் நுழைந்து வளரத் தொடங்கிய அந்நாளில் சாதாரண கம்ப்யூட்டர் சயன்ஸ் பட்டதாரியான நான் ஓர் ஐ.டி. கம்பெனியில் சேர்ந்து, புரோக்ராம் எழுதும் நுட்பங்களை நன்கு கற்று, திறமையான ப்ரொக்ராமர் ஆனேன்.

சுதந்திரம் ஆக்கப்பட்ட அரசாங்கப் பொருளாதாரக் கொள்கைகளால், வங்கிகள், தனியார்த் துறை, மால்கள், பங்குச்சந்தை மற்றும் நிதி நிறுவனங்கள் எல்லாம் கிரெடிட் கார்டு, ஏ.டி.எம். மூலம் ஆன்லைன், எலக்ட்ரானிக் பணப் பரிமாற்றங்கள் தொடங்கிவிட்டன.

சிறிது கணினியியல் கற்று அறிந்த இளைய தலைமுறை, இத்துறையில் தாங்களே முதல் தலைமுறை என்ற பெருமிதத்தோடு பெரும் வேலைவாய்ப்புகளைப்

பிடித்ததோடு, இந்த கணினிப் பணமாற்ற முறைகளை வெறித்தனமாகக் கையாண்டு வந்தார்கள்.

இந்தக் கணினிவழிப் பணப் பரிமாற்றத்தை வங்கிகள் கையாளுவதற்கு மென்பொருள் தயாரிக்கும் பெரிய கம்பெனியில் எனக்கு வேலை. இதில் நான் வல்லவனானேன்.

இந்த கணினியியல் பணப்பரிமாற்ற ப்ரொக்ராமே என் மூளையில் எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்குந்த காலம் அது.

ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்குப் பணப் பரிமாற்றம் செய்யும் போது, அவர்கள் அறியாமல் சிறிதை லவட்டிக்கொள்ள மென்பொருள் ஏன் எழுதக்கூடாது? மனதில் சபலம் உதித்தது. அது இரவு பகலாக என்னை வாட்டியெடுத்தது. நான் காதலித்த போதும் படாத இந்த வேதனையால் உந்தப்பட்டு பலநாள் விடாமல் முயற்சித்து மென்பொருள் தயார் செய்து, ரகசியமாகச் சோதனை செய்தேன். தவறுகளை படிப்படியாக நீக்கி இறுதியாக வெற்றியடைந்த பொழுது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. என் தொழில்நுட்ப அறிவுக்குக் கிடைத்த வெற்றி அது.

மளமளவென்று பல வங்கிகளில், பல கிளைகளில் என் பேரில் அக்கவுண்ட் தொடங்கினேன் இருந்த இடத்திலேயே யாருடைய பணமோ தானாக என் கணக்கில் வந்து கொட்டுவதைப் பார்த்து மெய்சிலிர்த்தேன். அன்று தொடங்கி நான் விருப்ப ஓய்வு பெறும்வரை சில கோடிகள் சேர்த்துவிட்டேன்.

சிறுதுளி பெருவெள்ளம் என்ற என் அசைக்க முடியாத கொள்கைதான் இதுவரை என்னைக் காப்பாற்றி நிற்கும் மந்திரக்கோல். காலம் பறந்தது.

வேலையில் சேர்ந்த உடனே அதிகமாகச் சம்பாதிக்கிற, கிரெடிட் கார்டில் மிதக்கும் ஐ.டி. தலைமுறை வருடம் ஒருமுறை தங்கள் கணக்கில் எப்பொழுதாவது நூறு, இருநூறு குறைவதைக் கண்டுகொள்வதே இல்லை. அப்படியே பார்த்தாலும் இந்தச் சிறு தொகையைப் பற்றி நோண்டுவது அந்தஸ்துக்கு இழுக்கு என்று நினைத்தார்கள்.

பழைய தலைமுறைக்கோ வங்கி பாஸ்புக் பதிவும் லைன் பிரிண்டர் ஆக மாறியதால் அதில் சிறு தவறுகள் கண்டுபிடிப்பது கடினம் ஆனதுடன், புதிய சமாச்சாரங்கள் தங்களுக்குப் புரியவில்லை என்ற தயக்கத்தில் விட்டுவிட்டனர்.

புலிக்குப் பிறந்து பூனையாகுமா? என் மகன் சேகர், பள்ளி கல்லூரியில் கணினியியல் துறையில் மாநிலத்திலேயே முதல் நிலை மாணவனாக தேர்ச்சி பெற்றான். சிறந்த அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் நிதிநல்கையுடன் ஐந்து ஆண்டுகளாக முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்கிறான்.

நீ எதில் ஆய்வு செய்கிறாய் என்று கேட்பேன். "அமெரிக்கா ஐரோப்பிய தேசங்களில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னேயே கணினிவழி பணமாற்றம் தொடங்கியதால் இங்கெல்லாம் நிறைய ஹேக் செய்து பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. இத்துறையில் நான் ஆராய்ந்து, ஹேக் செய்வோரைக் கண்டறியும் சக்தி வாய்ந்த பல மென்பொருள் ஆப்களை உருவாக்கும் ஆராச்சியில் ஈடுபட்டுள்ளேன்" என்பான் சேகர்.

ஒரு நாள் அவனிடமிருந்து ஃபோன் வந்தது. சேகர் என்னைப் பேசவிடாமல் பொரிந்து தள்ளினான். "அப்பா நான் ஆராய்ச்சியில் வடித்தமைத்த, வங்கிகளில் பண மோசடியைக் கண்டுஅறியும் என் ஆப் (App), பல நாடுகளில் கடந்த இரண்டு வருடங்களாக நடந்த சோதனைகளில் வெற்றி கண்டுவிட்டது. இதை அங்கீகரித்து விட்டார்கள். யூரோப்பிலும் அமெரிக்காவிலும் மிகப்பெரிய பெரிய நிறுவனங்கள் நிறைய விலை கொடுத்து என் பல்கலைக்கழகத்திடம் இதன் உரிமையை வாங்கிவிட்டார்கள். என் ஆராய்ச்சிக்காக எனக்கு பிஎச்.டி. பட்டமும் கிடைத்துவிட்டது. ஒரு பிரபல அமெரிக்க கம்பெனியில் நல்ல சம்பளத்தில் எனக்கு வேலை கிடைத்துவிட்டது."

விடாமல் உற்சாகமாக இன்னும் பேசினான். "என் பட்டமளிப்பு விழாவுக்குப் பிறகு வேலையில் சேருவேன், விழாவுக்கு உங்களையும் அம்மாவையும் அங்கு வந்து கூட்டிக்கொண்டு போகிறேன். தயாராக இருங்கள்."

"சொல்ல மறந்துவிட்டேனே. இந்திய அரசாங்கமும் ஆரம்ப கால இருபது வருட பணப்பரிவர்த்தனைகளை சோதித்து, சந்தேகத்துக்குரியவற்றை அலசி ஆராய ஒரு ஆப் வேண்டுமென்று எங்களை அணுகியது. நானே அதற்கு சிறப்பான ஒன்றைத் தயாரித்துக் கொடுத்துளேன். வழக்கத்துக்கு மாறான, சிறியதானாலும் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளைத் தொகுத்து நொடியில் பிரிண்ட் எடுத்துக் கொடுத்துவிடும். அது பற்றிய தகவல் இன்னும் தெரியவில்லை" என்று என்னைப் பேச விடாமல் சொல்லி முடித்தான்.

மறுநாள் காலையில் அதன் முடிவு எனக்குத் தெரிந்தது...

மூன்று நான்கு கார்கள் வீட்டு வாசலில் வந்து நின்றன. தடதட என்று போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், CBI இன்ஸ்பெக்டர்கள், வருமானத் துறை உயர் அதிகாரிகளின் படை ஒன்று இறங்கி என்னை நோக்கி வந்தது.

இதே நாளில்தான் அது!

கோ. ராமன்,
சான் மாட்டீயோ

© TamilOnline.com