குருபிரசாத் எழுதிய 'கொஞ்சு தமிழ்' - சிறுவர் நூல்
'கொஞ்சு தமிழ்' புத்தகம் சிறார் இலக்கியத்தில், குறிப்பாக, புலம்பெயர்ந்த தமிழ்பேசும் உறவுகளின் சந்ததியருக்கு, அமெரிக்க மண்ணின் வாழ்வியலை எளிய நடையில் வழங்கும் நல்லதொரு முயற்சி.

ஒரு பள்ளி மாணவன் சொல்வதாகக் கட்டுரைகள் அமைந்துள்ளன. அவனுடைய பார்வையில், சிறாரின் சிந்தனைப் போக்கில், இலக்கிய மேட்டிமைத்தனம் இல்லாமல், எளிய வாக்கியங்களில் விவரிப்பது நூலின் சிறப்பு. அதேபோலப் பெரியவர்களின் அனுபவத்தைப் பேசும் கட்டுரைகள் இலக்கியத் தரமான கவிதை நடையில் அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு.

ஏரி, பூங்கா, மலை, அருவி, தோட்டம், சந்தை என ஒவ்வோர் இடத்தையும் நுணுக்கமான தகவல்களுடன் விவரிக்கும்போது நாமே அந்த இடங்களை நேரடியாகக் காணுகிற அனுபவத்தைப் பெறுகிறோம். பயணக் கட்டுரைகளில் நம்மையும் சேர்த்தே ஆசிரியர் அழைத்துப் போகிறார்.

அமெரிக்காவில் வாழும் தமிழ்க் குழந்தைகள் படித்து மகிழ்ந்து, தமிழைத் தம் அனுபவத்திற்கு நெருக்கமாக்கிக்கொள்ள உதவும் நூல் இது. பிற நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளும் படித்து, அமெரிக்கச் சூழலை, இங்கு வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கை முறையை, அறிந்துகொள்ள உதவும்.

புத்தகம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. முதல் பகுதி பத்துத் தலைப்புகளில் கட்டுரைத் தொகுப்பாகவும், இரண்டாம் பகுதி வாஷிங்டன், சியாட்டில் பகுதி சார்ந்த ஏழு பயணக் கட்டுரைகளாகவும் அமைந்துள்ளது. இக்கட்டுரைகளைக் குழந்தைகள் தமது வீட்டில் தாத்தா, பாட்டிக்குப் படித்துக் காட்டுவதன் மூலம் அயல்நாட்டுக் கலாச்சாரத்தைப் பற்றி அவர்களுடன் கலந்துரையாட வாய்ப்பு அமையும். தமிழ் வாசிப்புத் திறன் மேம்படும். உலக மொழி மதிப்பீடு குறித்த தகவல் கட்டுரை ஒன்றும் உள்ளது. இது உயர்நிலை மாணவர்கள் எழுதும் மொழித்தேர்வுக்கான ஆரம்பத் தகவல்களை அளிக்கும்.

கட்டுரைகளின் பேசுபொருள் மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பிறமொழிக் கலப்பின்றித் தூய தமிழ்நடையில் எழுதப்பட்டுள்ள பாங்கு பாராட்டுக்கு உரியது. தமிழ் பயிலும் மாணவர்களுக்குப் பாடநூலாக வைத்தலும் தகும்.

நூலாசிரியர்
நூலாசிரியர் திரு. குருபிரசாத், காஞ்சிபுரத்தை சொந்த ஊராக கொண்ட பொறியாளர். பள்ளி, கல்லூரி நாட்களில் இருந்தே கவிதை கட்டுரை ஆர்வம் கொண்டிருப்பவர். பச்சையப்பன் கல்லூரி தமிழ் மாணவர் மன்றச் செயலராகத் தொடங்கி, பல இலக்கிய, தமிழ் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி, தமிழ் பேசி, எழுதி தமிழ் பருகி மகிழ்பவர். தொடர்ந்து ஃபேஸ்புக் மற்றும் வலைத்தளங்களில் எழுதி வருகிறார். தற்சமயம் அமெரிக்காவின் சியாட்டில் பகுதியில் வசித்து வருகிறார். 'கொஞ்சு தமிழ்' இவரது முதல் நூல்.

மேலும் விவரங்களுக்கு | நூலை வாங்க

© TamilOnline.com