போருக்குப் புறப்பட்ட உத்தரகுமாரன்
துரியோதனனுடைய கணக்கு துளியும் தப்பவில்லை. விராட மன்னனின் தம்பியான சதானீகன், கவசத்தை அணிந்துகொண்டு போருக்குக் கிளம்பினான். விரடனுடைய மகனான சங்கன் (இவன் மூத்தவன். உத்தரகுமாரன் இளையவன்.) வெண்மையான கவசத்தை அணிந்துகொண்டு போருக்குக் கிளம்பினான். அதைப் பார்த்ததும அங்கே கங்கன் (Kankan) என்ற பெயரோடு வாழ்ந்துகொண்டிருந்த தர்மபுத்திரர் தாமே முன்வந்து, 'அரசே! எனக்குப் போர்புரியத் தெரியும். நான் மட்டுமல்லாது நம் மடைப்பள்ளியில் பணியாற்றும் வல்லபனும் நம்மிடம் குதிரைகளை கவனித்துக் கொள்பவனான தாமக்ரந்தியும் நம் மாடுகளை மேய்க்கும் தந்திரிபாலனும் போரில் வல்லவர்கள்தாம். அவர்களையும் போருக்கு அழைத்து வாருங்கள்' என்றார், அவர்களுக்குத் தேவையான தேர் முதலானவற்றையும் ஆயுதங்களையும் விராடனுடைய தம்பியான சதானீகன் கொடுத்தான்.

அனைவரும் போருக்குக்குக் கிளம்பினார்கள் விராடனுடைய தலைமையில் கிளம்பிய அந்தப் படை மாலையில் திரிகர்த்தர்களைச் சந்தித்தது. பாரதப் போர் பற்றிய வாட்ஸாப் செய்திகளைப் படிப்பவர்கள் அதிர்ச்சியடைய வேண்டாம். ஆநிரை கவர்தல் எனப்படுவது இரவு நேரங்களில் நடக்கும் போர்தான். பாரதப் போரில் பீஷ்மர் விழுந்த பத்தாம் நாள் வரையில் போர் மாலையானதும் நின்றுகொண்டுதான் இருந்தது. அங்கேயேகூட ஜயத்ரத வதம் நடந்த 14ம் நாளன்றே இரவுப் போர் தொடங்கிவிட்டது. களவருணனையைப் படித்தால் அதில் 'இரவானது, இருட்டியது' என்பன போன்ற வருணனைகளைக் கவனிக்கலாம்.

ராமாயணத்திலேயே கூட இலக்குவனுக்கும் இந்திரஜித்துக்கும் இரவில்தான் போர் நடைபெற்றது. இருளில்தான் இந்திரஜித் இலக்குவனை மயக்கத்தில் ஆழ்த்துகிறான். அதிலிருந்து இலக்குவனை மீட்பதற்காகத்தான் அனுமன் மருந்து மலையைக் கொண்டு வருகிறான். அள்ளிக் குடித்துவிடலாம் போன்றிருந்த அந்த இருட்டில் களத்துக்கு வந்த ராமன், ஆக்னேயாஸ்திரத்தால் ஒளியை உண்டாக்கினான் என்ற வருணணையைக் கவனிக்க வேண்டும்.

கொள்ளியின் சுடர் அனலிதன் பகழி கைக்கொண்டான்;
அள்ளி நுங்கலாம் ஆர் இருட் பிழம்பினை அழித்தான்
(கொள்ளியின் சுடர் அனலி = ஆக்னேயாஸ்திரம்.)

இருட்டில் நடந்த அந்தப் போரில் விராட மன்னன் திரிகர்த்தனிடம் (சுசர்மாவிடம்) பிடிபட்டான். மன்னன் பிடிபட்டதும் உற்சாகம் குன்றியது. இதைக் கவனித்த தர்மபுத்திரர், பீமனிடத்தில் சென்று விராடனை விடுவிக்கச் சொன்னார். அவனோ, அங்கே வளர்ந்திருந்த மரம் ஒன்றைப் பிடுங்கப் போனான். "இதோ பெரிய கிளைகளுள்ளதும் மலைபோன்றதும் பூவாமற் காய்ப்பதுமான ஒரு மரம் இருக்கிறது. நான் இதைப் பெயர்த்துப் பகைவர்களை நாசம் செய்கிறேன்" என்று கிளம்பினான். (விராட பர்வம், கோக்ரஹண பர்வம், அத். 35, பக். 157) ஸாஹஸம் செய்யாதே பீமா! என்று தடுத்தார் தர்மபுத்திரர். மனிதர்களைப் போலப் போர்புரி. பார்க்கிறவர்களுக்கு 'இது பீமன்' என்று அடையாளம் காட்டிக் கொள்ளாதே' என்றார். ஆனால், அவருடைய பதற்றத்துக்கான காரணம் ஏதும் இல்லை. விராடபர்வப் போர் நடந்தபோது அக்ஞாத வாசம் முடிந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகியிருந்தது. இந்தக் கணக்கையெல்லாம் கிஸாரி மோஹன் கங்கூலியும் பிபேக் தேப்ராயும் சொல்கிறார்கள். நாம் சற்றுப் பொறுத்து இவற்றைக் காணலாம். பீமனையல்லாமல் அர்ஜுனனை அடையாளம் கண்டிருந்த துரியோதனன், 'நீங்கள் அனைவரும் மீண்டும் 12+1 ஆண்டுகள் வனத்தில் கழிக்க வேண்டியதுதான்' என்கிறான். அப்போது இந்தக் கணக்கெல்லாம் வருகின்றன. (கும்பகோணம் பதிப்பில் இந்தக் கணக்கு இல்லை). பீமன் போருக்குப் போனால் ஆகாதது உண்டோ? விராடன் மீட்கப்பட்டான். யுதிஷ்டிரனும் நகுல சகதேவர்களும் தங்கள் போர்த்திறமைகளைக் காட்டினார்கள். பீமன் சுசர்மாவிடம் சென்று அவனுடைய குதிரைகளை அடித்து வீழ்த்தினான். இரண்டு பாணங்களை எய்து அவனுடைய பாதுகாப்பாளர்களைக் கொன்றான்.

சுசர்மாவிடம் பிடிபட்ட தன்னை வல்லபன் மீட்டான் என்றதும் விராடன் மகிழ்ந்தான். 'இனி உங்கள் பேச்சை மீறமாட்டேன். இந்த நாட்டுக்கு நீங்கள்தாம் அரசர்கள்' என்றெல்லாம் தர்மபுத்திரரிடம் பேசினான். ஆனால், 'உங்கள் பேச்சை மீறமாட்டேன்' என்று அவன் கங்கரிடத்தில் சொன்னாலும், அவரை மறுத்துப் பேசவேண்டிய நிலை ஒன்று வந்தது. திரிகர்த்தர்களைத் தான் வென்றதாக எல்லா இடங்களிலும் அறிவிக்கச் செய்தான். இதற்கிடையில் துரியோதனன் மச்ச நாட்டைத் தாக்கத் தொடங்கினான். அவனுக்குத் துணையாக பீஷ்மர், துரோணர், கிருபர், அஸ்வத்தாமா, கர்ணன் போன்றோர் இருந்தனர். அத்துடன் சகுனி, துச்சாதனன், துர்முகன் போன்றோரும் இருந்தனர். இவர்கள் எல்லோரும் மச்ச நாட்டுக்குள் புகுந்து, அங்கிருந்த மாடுகளைக் கைப்பற்றினார்கள். பல லட்சக்கணக்கான மாடுகளைக் கவர்ந்தார்கள் இதைக் கண்ட இடையர் தலைவர் செய்தியைச் சொன்னானன். யாரிடம்? அந்தப்புரத்திலிருந்தவனான விராட மன்னனின் இளையமகன் உத்தரகுமாரனிடம்!

அவனோ வயதில் இளையவன். வந்திருப்பதோ துரியேதனனுடைய பெரும் சைனியம். பீஷ்மர் தலைமை தாங்குகிறார். 'இந்தப் போரை வென்றே தீருவேன்' என்று கர்ணன் தன் கத்தியின் மீது சபதம் செய்திருக்கிறான். இந்த நிலையில் இச்சிறு பிள்ளை, 'உறுதியான வில்லை ஏந்திக்கொண்டு மாட்டுக் கூட்டங்களைத் தொடர்ந்து சென்று அவற்றை மீட்டுக்கொண்டு வருவேன். ஆனால் பாருங்கள், எனக்குத் தகுதியான சாரதி ஒருவன் இல்லை' என்று அந்தப்புரத்துப் பெண்களுக்கு மத்தியில் பேசிக்கொண்டிருக்கிறான்! போதாக்குறைக்கு 'நான் போரிட்டு வந்ததும் இவன் அர்ஜுனன்தானோ' என்று எல்லோரும் வியக்கும் அளவுக்குப் போரிடுவேன். ஒரு சாரதி இல்லாமல் போய்விட்டான்' என்றெல்லாம் பேசுகிறான். அவன் பேசுவதைக் கேட்கக் கேட்க பாஞ்சாலிக்குக் கோபம் மேலிடுகிறது. அவன் சொன்ன அந்த அர்ஜுனனேகூட பிருஹன்னளை வடிவில் இருந்து கேட்டுக்கொண்டிருக்கிறான். பாஞ்சாலி நேரே வந்து பிருஹன்னளை வடிவில் இருந்த அர்ஜுனனுடைய கையைப் பற்றி இழுத்துக்கொண்டு அர்ஜுனன் நடனம் கற்பித்துக் கொண்டிருந்த உத்தரகுமாரியிடத்தில் சென்று 'இந்த பிருஹன்னளை முற்காலத்தில் அர்ஜுனனுக்குத் தேரோட்டியிருக்கிறாள். எனவே, இளவரசர் இவளையே சாரத்தியம் செய்யக் கூட்டிக்கொண்டு போகட்டும்' என்றாள்.

உத்தரகுமாரி, தன்னுடைய அண்ணனான உத்தரனிடம் வந்து இதைச் சொன்னாள். 'நான் பேடிகளிடம் பேசமாட்டேன்' என்றான் உத்தரன். 'என்னுடைய போர்க்குதிரைகளைச் செலுத்து என்று ஒரு பேடியிடத்தில் நான் கேட்கமாட்டேன். எனக்கு அது இழுக்கு' என்று பிடிவாதம் பிடிக்கிறான் உத்தரன்! கடைசியில் உத்தரகுமாரியே பிருஹன்னளையிடம் வந்து, தன் சகோதரனுக்காகத் தேரோட்டும்படி கேட்டுக்கொண்டாள். அரஜுனனோ தனக்கு எதுவுமே தெரியாது என்கிறான். தன்னிடம் தரப்பட்ட கவசத்தைத் தலைகீழாக மாட்டிக்கொள்கிறான்! பெண்களெல்லாம் பரிகாசம் செய்கிறார்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் மாறாக, உத்தரனே அர்ஜுனனுக்குக் கவசத்தை அணிவிக்கிறான்.

பிருஹன்னளை தேரோட்ட உத்தரகுமாரன் போருக்குக் கிளம்பினான். அங்கிருந்த பெண்களோ, 'பிரஹன்னளை! போரில் கௌரவர்களை வெற்றிகொண்டு, எங்களுக்கு நல்ல ஆடைகளையும் ரத்தினங்களையும் கொண்டுவா' என்கிறார்கள். அர்ஜுனனோ என்றால், 'கௌரவர்களை இளவரசர் வெல்வார். அவர் வென்றதும் நான் உங்களுக்கு ஆடைகளையும் ரத்தினங்களையும் கொண்டு வருகிறேன்' என்கிறான்! இருவரும் போருக்குக் கிளம்பினார்கள்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com