குற்ற உணர்ச்சியுடன் அல்ல, பாசத்துடன்...
அன்புள்ள சிநேகிதியே,
எனக்கு 65 வயது ஆகப்போகிறது. மனைவி, பெண், பிள்ளை, வீடு, வசதி எல்லாம் இருக்கிறது. அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்து 36-37 வருடங்கள் ஆகின்றன. மனைவி இந்த ஊர்ப் பெண். பெற்றோரை எதிர்த்து ஏதோ ஒரு மோகத்தில் திருமணம் செய்து கொண்டேன். இப்போது இருக்கும் முதிர்ச்சி அப்போது இல்லை. நல்லவள்தான். Very principled. குழந்தைகளை அக்கறையுடன் வளர்த்தாள். ஆனால், நம்முடைய கலாச்சாரம், மதம், உணவு ஆகியவற்றில் அவளுக்கு அவ்வளவு ஈடுபாடில்லை. யார் வந்தாலும் மரியாதையுடன் நடத்துவாள். ஆனால் அவ்வளவு ஒட்டுதல் இருக்காது. எனக்கு அந்தக் குற்ற உணர்ச்சி இருந்துகொண்டே இருக்கிறது. அப்பா, அம்மாவை மற்ற குடும்பங்களைப் போல் ஆறுமாதம் வரவழைத்து புளியோதரை, இட்லி, தயிர்சாதம் என்று கட்டி எடுத்துக் கொண்டு அடிக்கடி வெகேஷன் போக முடியவில்லையே என்று ஆதங்கம். எனக்குத் தமிழ் ஆர்வமுண்டு. கர்நாடக சங்கீதம் பிடிக்கும். ஆரம்பகாலத்தில் பார்ட்டி ஃபிரண்ட்ஸ் என்று ட்ரை செய்து பார்த்தேன். அவள் மிகவும் அமைதியானவள். அதுவும் நாமெல்லாம் ஒன்று சேர்ந்தால் நம்மை அறியாமலேயே நம் மொழியில் பேச ஆரம்பித்து விடுகிறோம். ஆகவே, “நீ எந்த பார்ட்டிக்கு வேண்டுமானாலும் போ. ஆனால் என்னைக் கூப்பிடாதே எனக்கு frustrating ஆக இருக்கிறது" என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டாள். அதனால் எனக்கு ஏற்ற நட்பு வட்டாரத்தை வளர்த்துக்கொள்ள முடியவில்லை.

எங்களுக்குள் மோதல் என்று எதுவும் இருந்தது இல்லை. நான் தொழில் விஷயமாக அடிக்கடி டூர் போகும்போதெல்லாம் அவள்தான் எல்லாக் குடும்பப் பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டாள். குழந்தைகளுக்கு வேண்டிய அனைத்து சௌகரியங்களையும் செய்து கொடுத்தாள். ஆனால், குழந்தைகளுக்கு இந்திய நண்பர்களும் அதிகம் இல்லை. பார்ப்பதற்கு இரண்டு பேரும் என்னை போலவே இந்திய நிறம், முகம். எனக்கு வயது ஆக ஆக நமது உணவும், நமது கலாசாரமும் மிகவும் பிடிக்க ஆரம்பித்தது. என்னுடைய தங்கையும் இங்கேயே 300 மைல் தள்ளி இருக்கிறாள். அவள் தன் குழந்தைகளை ‘சின்மயா மிஷன்’ போன்றவற்றில் சேர்த்து நம்முடைய பழக்கவழக்கங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறாள். அவளுடைய இரண்டு பிள்ளைகளும் வெஜிடேரியன். தமிழ் பேசுகிறார்கள். நிறைய குடும்ப நண்பர்கள். எனக்கு அதையெல்லாம் பார்த்தால் கொஞ்சம் ஆதங்கமாக, சொல்லப் போனால் சிறிது பொறாமையாக இருக்கும். மனதில் சதா ஒரு வெறுமை. ஒரு குற்ற உணர்ச்சி. என் பெற்றோர்கள் மூன்று நான்கு முறை விருந்தாளி போல் வந்து தங்கிவிட்டுப் போவார்கள். மீதி நேரமெல்லாம் என் தங்கை குடும்பத்துடன் தான் இருப்பார்கள்.

இப்போது என்னுடைய மகன், மகள் இருவரும் தனியாக இடம் பார்த்துக்கொண்டு போய்விட்டார்கள். ஆறு படுக்கையறை கொண்ட வீடு. நானும் இவளும் மட்டும்தான் இருக்கிறோம். Soup Kitchen, சர்ச், மருத்துவமனை என்று ஏதாவது தன்னார்வப் பணியில் பிஸியாக இருக்கிறாள். எங்களுக்குள் அவ்வளவு பேச்சுவார்த்தை இருப்பதில்லை. அப்பா, அம்மாவுடன் கொஞ்ச நாள் போய் இந்தியாவில் தங்கிவிட்டு வரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதுவும் இரண்டு வருட காலத்தில் முடியவே இல்லை. அப்பா இரண்டு முறை சீரியஸாகிப் பின் பிழைத்துவிட்டார். ஒரு முக்கியமான ப்ராஜெக்டில் இருந்தேன் கோவிடும் சேர்ந்துவிடவே போக முடியவில்லை. மனிதர்களுக்கு இந்தப் பணம் சம்பாதிக்கும் வெறி எப்போதுதான் தணியப் போகிறதோ? என்னையேதான் நொந்து கொள்கிறேன். என் மனதில் இப்போது பெரிய ஏக்கம். வெறி. என் அப்பா, அம்மாவுடன் போய்த் தங்கிச் சிறிதுநாள் இருக்க வேண்டும் என்று. ஆனால், ப்ராஜெக்ட் மேல் ப்ராஜெக்ட் வந்துவிடுகிறது. எப்படி இந்தத் தளையில் இருந்து விடுபடுவது என்று யோசிக்கிறேன். நிறைய மாதம் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க மனைவியிடம் கேட்கவும் தயக்கமாக இருக்கிறது. உங்களுக்குப் புரியும்படி எழுதுகிறேனா என்று தெரியவில்லை. மன உளைச்சல், வேதனைப் பட்டுக் கொண்டிருக்கிறேன்.

இப்படிக்கு,
.................


அன்புள்ள சிநேகிதரே
உங்களுடைய மன உளைச்சலை ஒருவாறு புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், என்னிடம் எதுபோன்ற கருத்துக்களை எதிர்பார்க்கிறீர்கள் என்று புரியவில்லை. உங்கள் மனைவியை அன்றுபோல் இன்றும் காதலிக்கிறீர்களா அல்லது பாசத்துடன் பழகுகிறீர்களா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.

நாம் யாருமே வாழ்க்கையில் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கென்ற பின்விளைவுகள் இல்லாமல் இருக்காது. அதுவும் அந்தக் காலகட்டத்தில் நீங்கள் எடுத்த முடிவால் பெற்றோர்களுக்குப் பேரதிர்ச்சியும் கலாச்சார முரண்பாடுகளும் கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும்.

இவ்வளவு மனம் சோர்வடைந்து உளைச்சலை உருவாக்கிக்கொண்டிருக்கும் அளவுக்கு உங்கள் பிரச்சனை அவ்வளவு பெரியதா என்றால் என் கருத்தில் இல்லை. அல்லது நீங்கள் உங்களைப் பாதிக்கும் பல விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம்.

நான் பார்த்தவரை your life is blessed.

* ஆசைப்பட்ட பெண்ணை மணந்து கொண்டிருக்கிறீர்கள்
* பெரிய பிரச்சனை, மோதல் இல்லாத தாம்பத்திய வாழ்க்கை
* அருமையான இரண்டு குழந்தைகள்
* பக்கத்தில் சகோதரி
* தொடர்பில் இருக்கும் பெற்றோர்கள்
* குவியும் தொழில்முனைவு வெற்றிகள்
* அதற்கேற்றாற்போல் ஏறும் வங்கிக் கையிருப்பு
* நேரத்தை எப்படி வேண்டுமானாலும் செலவழிக்க கூடிய வயது
* எந்த ஆர்வம், ஆசையையும் பூர்த்தி செய்து கொள்ளும் அளவு பொருளாதார வசதி

உங்கள் மன உளைச்சலுக்கு உங்கள் மனதையே வழிகாட்டச் சொல்லுங்கள். You are intelligent and smart man. நீங்கள் சிறு வயதில் அதாவது திருமணமான பின், பல ஆசைகளை விட்டுக்கொடுத்து, உங்கள் மனைவியுடன் ஒத்துழைத்து, குழந்தைகளை நன்றாக முன்னுக்கு கொண்டுவந்ததுடன் நீங்களும் முன்னேறி இருக்கிறீர்கள். நீங்கள் அட்ஜஸ்ட் செய்யாது இருந்திருந்தால், இத்தனை வருடம் நீங்கள் ஒன்றாக இருக்கக் கூடிய வாய்ப்புகள் குறைந்திருக்கும்.

ஆகவே குற்ற உணர்ச்சி என்பதைத் தயவுசெய்து களைந்து விடுங்கள். அதன் காரணமாக அல்லாமல் பாசத்தின் காரணமாக உங்கள் பெற்றோருடன் இருக்க விரும்புங்கள் என்றுதான் எனக்குச் சொல்லத் தோன்றுகிறது. உங்கள் திருமணத்திற்கு எடுத்த முடிவு நிலைத்து நிற்கிறது. அதேபோல் இந்தியப் பயணமோ, தொழிலிலிருந்து விடுப்போ - எந்த முடிவு எடுத்தாலும் நிலைக்கும். கவலைப்படாதீர்கள்.

டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்
Personal Queries: drcv.listens2u@gmail.com

© TamilOnline.com