சதுரங்கச் சாம்பியன் பரத் சுப்ரமணியம்
இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் செஸ் சாதனையாளர்களைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவின் 73 கிராண்ட்மாஸ்டர்களில் 25 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அந்தப் பெருமைக் கிரீடத்தில் மேலுமோர் இறகாக பரத் சுப்ரமணியத்தின் சமீபத்திய சாதனை வருகிறது.

இவ்வாண்டு இத்தாலியில் நடைபெற்ற வெர்கானி கோப்பை செஸ் போட்டியில் பங்கேற்ற பரத் சுப்ரமணியம், 9 சுற்றுகளின் முடிவில் 6 வெற்றி, ஒரு டிரா, 2 தோல்வி என 6.5 புள்ளிகளுடன் ஏழாம் இடம்பெற்றார். செஸ் விளையாட்டில் ஒருவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல வேண்டுமானால் மூன்று கட்ட கிராண்ட் மாஸ்டர் இலக்குகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். போட்டிகளில் 2500 Elo புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும். பரத் ஏற்கனவே 2 கட்டங்களை முடித்துவிட்ட நிலையில், இந்தப் போட்டியில் மூன்றாவது கட்டத்தைப் பூர்த்தி செய்தார் பரத். 2500 புள்ளிகளை அடைந்ததால் இந்தியாவின் 73வது செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆக அறிவிக்கப்பட்டார்.

இத்தாலி போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய கிராண்ட்மாஸ்டரான லலித் பாபு டைபிரேக்கர் மூலம் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துச் சாம்பியன் பட்டம் வென்றார்.அக்டோபர் 17, 2007 அன்று சென்னையில் பிறந்த பரத்திற்கு வயது 14தான். சிறு வயதிலிருந்தே சதுரங்கத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். தந்தை ஹரிசங்கர் மகனை முற்றிலும் ஊக்குவித்தார். தந்தையிடம் சதுரங்கம் பயிலத் தொடங்கிய பரத், 'செஸ் குருகுல்' பள்ளியில், ஆசிரியரான கிராண்ட்மாஸ்டர் ராமச்சந்திரன் ரமேஷ் பல நுணுக்கங்களைக் கற்பித்தார். 2019 முதல் கிராண்ட்மாஸ்டர் அலெக்சாண்டர் கோலோஷ்போவின் பயிற்சி அமர்வுகளில் கலந்துகொண்டார்.

ஜனவரி 2020ல், முன்னாள் உலகச் சாம்பியன் விளாடிமிர் க்ராம்னிக் மற்றும் முன்னாள் உலக சதுரங்கச் சவாலாளரான போரிஸ் கெல்ஃபான்ட் ஆகியோர் நடத்திய மைக்ரோசென்ஸ் நெட்வொர்க் சிறப்புப் பயிற்சி முகாமிற்கு பரத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர் பயிற்சியாலும் முயற்சியாலும் முன்னணி வீரரானார். 2019ல், தனது 11ம் வயதில், சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்றார். கடந்த ஆண்டு மாஸ்கோவில் நடந்த போட்டியில் பதினொன்றாவது இடம் பெற்றார். பல்கேரியாவில் நடந்த போட்டியில் நான்காவது இடம்.

பரத் சுப்ரமணியத்திற்குத் தென்றலின் வாழ்த்துகள்!

சிசுபாலன்

© TamilOnline.com