சாகித்ய அகாதமி விருது
தமிழில் 2021ம் ஆண்டுக்கான சாஹித்ய அகாதமி விருது எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்படுகிறது. அவர் எழுதிய "சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை" சிறுகதைத் தொகுப்பு, விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 'அம்பை' எனும் புனைப்பெயரில் எழுதி வரும் சி.எஸ். லக்ஷ்மி, தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவர். 'சிறகுகள் முறியும்', 'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை', 'காட்டில் ஒரு மான்', 'அந்தி மாலை', 'சொல்லாத கதைகள்' போன்றவை இவரது குறிப்பிடத் தகுந்த படைப்புகளாகும்.

வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கும் அம்பை, அமெரிக்கவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னட மொழிகளில் தேர்ந்தவர். பெண் எழுத்தாளர்களைப் பற்றிய இவரது ஆய்வுநூலான, 'உடலெனும் வெளி, பெண்ணும் மொழியும் வெளிப்பாடும்' முக்கியமானது. இவரது மற்றுமொரு முக்கியமான ஆய்வு நூல் 'The Face Behind the Mask: Women in Tamil literature' என்பது. 'SPARROW' (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குநராகச் செயல்பட்டு வருகிறார். (அம்பை பற்றி மேலும் வாசிக்க)

கே. முத்துகிருஷ்ணன், எழுத்தாளர் இமையம், பேராசிரியர் ராம. குருநாதன் ஆகியோர் அடங்கிய நடுவர்குழு 'சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை' நூலை விருதுக்குரியதாகத் தேர்ந்தெடுத்துள்ளது. விருது செப்புப் பட்டயமும் சால்வையும் ஒரு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும் அடங்கியது.

அம்பைக்குத் தென்றலின் வாழ்த்துக்கள்.

© TamilOnline.com