ஆன்லைன் ஆனந்தக்கண்ணன்
"பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கும் வசதி வந்தாலும் வந்தது. பத்தடி தூரத்தில் இருக்கும் கடைக்குக்கூட பலபேர் போக மாட்டேங்கிறாங்க சார். அதுவும் இந்த 'ஆன்லைன் ஆனந்தக்கண்ணன்' இருக்கான் பாருங்க... தொழில்நுட்பத்தை இந்த அளவுக்கு முழுமையா யாரும் பயன்படுத்திருக்க மாட்டாங்க சார். காலையில இட்லி தோசை ஆர்டர் பண்ணி சாப்பிடறதுலேந்து, வீட்டுக்குத் தேவையான காய்கறி, கவுச்சி, மளிகை, மாத்திரைன்னு சகலமும் உட்கார்ந்த இடத்துலே ஆர்டர் பண்ணிடுவான். பொண்டாட்டிய டைவர்ஸ் பண்ணி ஐஞ்சு வருஷமாகுதாம். புள்ளைகுட்டி கிடையாது. வீட்டுப்படி தாண்ட மாட்டான். இப்படியே தனி ஆளா ஒரு வீட்டுக்குள்ள எப்படி சார் இருக்க முடியும்?" கீழ்வீட்டு சேகர் மூச்சு விடாமல் பேசினான்.

எங்கள் வீட்டின் மாடியில் குடியிருப்பவர்தான் அந்த மேற்படி ஆன்லைன் பேர்வழி. வாரத்தில் மூன்று நாள்தான் ஆபீஸ் போவார். மற்ற நாட்கள் ஒர்க் ஃப்ரம் ஹோம், அதாவது வீட்டில் இருந்தபடியே கம்ப்யூட்டரில் வேலை.

"சினை மாடு மாதிரி ஒரே இடத்துல உட்கார்ந்து ஃபோனை நோண்டிகிட்டே இருக்கான் சார்," சொன்னது வீடு பெருக்கும் கமலாக்கா.

இப்படி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசாமி இரண்டு நாளாய்க் கதவைத் திறக்கவேயில்லை. பொருள் டெலிவரி செய்யும் ஆட்கள் யாரும் வந்து போனதாகவும் தெரியவில்லை. ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்குமோ என்று ஃபிளாட்டே கூடி பேசியது. நான் துணிந்து சென்று கதவைத் தட்டினேன். மூன்று முறை இடைவெளி விட்டுத் தட்டிய பின்பு, ஆனந்தக்கண்ணன் கதவைத் திறந்தார். சோர்வாகக் காணப்பட்டார்.

"என்னாச்சு சார், ஆளையே காணோம், உடம்பு சரியில்லையா?"

"உள்ள வாங்க. ரெண்டு நாளா நல்ல ஜுரம். பிரெட் சாப்பிட்டு மாத்திரையைப் போட்டு படுத்துட்டேன். எழுந்திருக்கவே முடியல."

"டாக்டர்ட்ட போலாமா, கிளம்புங்க சார்" என்றேன்.

"இல்ல, இல்ல. இப்போ பரவாயில்ல. தேங்க் யூ."

"ஓ அப்படியா. சரி சார். பாத்துக்கங்க. ஏதாவது ஹெல்ப் தேவைப்பட்டா கூப்பிடுங்க." விடைபெறத் தயாரானேன்.

"கண்டிப்பா. அப்புறம் சார்... ஜுரத்துக்குக் கஞ்சி வச்சுக் குடுக்க ஏதாவது ஆன்லைன் சர்வீஸ் இருக்குமா? உங்களுக்கு ஏதாவது லிங்க் கிடைச்சா எனக்கு ஃபார்வேர்ட் பண்ணுங்க ப்ளீஸ்." என்றார்.

என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் விழித்துக்கொண்டு நின்றேன்.

விஷ்வசாந்தி சரவணகுமார்,
டெக்சஸ்

© TamilOnline.com