கருமலை களவாணிகள் (அத்தியாயம்-1)
சனிக்கிழமை காலை என்பதை பக்கரூவுக்குச் சொல்ல வேண்டியதே இல்லை. முந்தின இரவில் நடக்கும் கூத்தின் மூலமாகவே அவனுக்குப் புரிந்துவிடும். அருண் அடிக்கும் கொட்டம் ஒன்று போதும். வெள்ளிக்கிழமை இரவு மணிக்கணக்காக நேரலை டி.வி. பார்த்தாக வேண்டும். பிடித்த சீரியல்களை மாற்றி, மாற்றி விடாமல் பார்ப்பான். கீதாவுக்கும் ரமேஷுக்கும் எப்படா முடியும் என்றாகிவிடும். பக்கரூவும் இதில் கூட்டு. "லொள் லொள்" என்று குரைத்து, தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்வான்.

சனிக்கிழமை காலையில்தான் முந்தின நாள் இரவின் தாக்கம் தெரியவரும். அன்று ஒருநாள் அருணுக்கு ஒரு வேலைகூடக் கிடையாது. சிறப்பு வகுப்பு, விளையாட்டு என்று எதுவும் கிடையாது. மற்ற நாட்களில் அருணால் மூச்சு விடக்கூட முடியாது. அப்படி ஒரு பிசியான வாழ்க்கை இந்த வயதிலேயே அவனுக்கு.

பக்கரூவுக்கு சனி, ஞாயிறு என்றால் ஒரே குஷி. அருணுக்குப் பள்ளிக்கூடம் போகும் அவசரம் கிடையாது என்பது அவனுக்குத் தெரியும். அதனால் காலையில் சீக்கிரமே எழுந்து காத்துக் கொண்டிருப்பான். கீதா மட்டும் எப்போதும்போல் காலையில் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருப்பார். அவருக்கு ஓய்வு என்பதே கிடையாது. காலையில் தாமதமாக எழுந்து நாளை வீணடிக்க அவருக்குப் பிடிக்காது. ரமேஷோ அதற்கு நேரெதிர். விட்டால் தூங்கிக்கொண்டே இருப்பார்.

அருண் தூங்கிக் கொண்டிருந்ததால் பக்கரூ வாலை ஆட்டியபடி கீதாவின் அருகில் வந்தான். அவன் விளையாட ஆள் தேடுகிறான் என்று கீதாவிற்கு புரிந்தது. ஆனாலும் பக்கரூவைக் கண்டு கொள்ளாமல் இருந்தார். பொறுத்துப் பார்த்த பக்கரூ கோபத்தில் கத்த ஆரம்பித்தான்.

"அருண், அருண்! பக்கரூ கூப்பிடறான் பாரு!" அருணை அப்படியாவது எழுப்ப முடியுமா என்று பார்த்தார் கீதா. "நான் ஜாகிங் போறேன். வறியா?"

என்ன பதில் வரும் என்று கீதாவுக்கு நன்றாகத் தெரியும். முன்போல இப்பொழுதெல்லாம் அருண் அவரோடு ஜாகிங் அவ்வளவாக வருவது இல்லை. அந்த உற்சாகம் இல்லை. ஆனாலும் ஆரோக்கியத்துக்காக, அவரது வற்புறுத்தலுக்காக, முனகிக்கொண்டே வருவான்.

கீதா ஜாகிங் போய் வந்தார். பக்கரூவை அழைத்துப் போனார். வீட்டில் ரமேஷும் அருணும் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

"ரமேஷ்! ரமேஷ்! நீங்களாவது எழுந்திருங்களேன். மணி பத்தாச்சு."

கீதாவுக்கு எரிச்சல் வந்தது. தன்னைப்போல் மகனும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். அருணோ, ரமேஷைப் போலக் கொஞ்சம் 'take it easy' ஆசாமியாக இருந்தான். "அருண்! அருண்!" மீண்டும் குரல் கொடுத்தார்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தார் கீதா. ரமேஷ் நின்று கொண்டிருந்தார். "எதுக்கு இப்பிடி காலங்கார்த்தால கத்தற? ஒருநாள் தூங்கினா என்ன தப்பு?" ரமேஷ் கொட்டாவி விட்டுக் கொண்டே கேட்டார். "மத்த நாள்தான் அந்த வகுப்பு இந்த வகுப்புன்னு அவனைப் படுத்தியாகிறது."

ரமேஷ் சொல்வதில் நியாயம் இருந்தாலும் கீதாவுக்கு எரிச்சல் அதிகமானது. சூடாகப் பதில் கொடுக்க நினைத்தார். வேண்டாம் என்று விட்டுவிட்டார். பக்கரூவை ஒரு முறை முறைத்தார். அது பயந்து அருணின் அறைப்பக்கம் ஓடியது.

மெதுவாக அருணின் அறைக்கு கீதா சென்றார். அருண் மெத்தையில் அமர்ந்து பக்கரூவுடன் பேசிக் கொண்டிருந்தான். பக்கரூ அவனை நக்கிக் கொண்டிருந்தது.

"மணி என்ன தெரியுமா?"

அருண் பதில் சொல்லாமல் பக்கரூவுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

"அருண், பல் விளக்கினியா?"

அப்பொழுதும் பதில் சொல்லவில்லை. ஏதோ ஓர் உலகத்தில் அவன் இருந்தான்.

"பக்கரூ!" ஒரு அதட்டலுடன் கூப்பிட்டார். பக்கரூ படாரென்று குதித்து அறைக்கு வெளியே ஓடியது. அருண் அப்பொழுதுதான் கீதா நிற்பதை கவனித்தான்.

"ஹை அம்மா! குட்மார்னிங். இன்னிக்கு என்ன காலை டிஃபன்? வெளியே போலாமா?"

கீதா மௌனமாக இருந்தார்.

"குட்டியா ஒரு ரன் பண்ணி அப்படியே டோநட்டும், பேகலும் வாங்கிட்டு வரலாமா அம்மா?"

கீதா அதற்கும் பேசவில்லை. அருண் தன் உலகத்தில் இருந்தபடியே பேசிக்கொண்டிருந்தான். படுக்கையை விட்டு எழுந்து அப்படியே போனான். கீதா அவனைத் தடுத்தார். என்ன என்று கேள்வி கேட்காமல் அவரைப் பார்த்தான். கண்ணால் ஜாடை காட்டினார்.

"அப்புறமா மடிச்சு வைக்கறேன். டிஃபன் சாப்பிட்ட பின்னால்…."

கீதா விடவில்லை. "இப்ப செய்யறே!" என்றார். குரலில் கண்டிப்பு இருந்தது.

"ஓகே" என்று சொல்லிக்கொண்டே படுக்கையைச் சரி செய்தான்.

"சந்தோஷமா?" என்று ஒரு செருக்கோடு கேட்டான்.

"இன்னொரு விஷயம்" என்றார் கீதா.

"என்ன?" எரிச்சலோடு கேட்டான் அருண்.

கையை மேல்நோக்கிக் காண்பித்தார், சுற்றிக் கொண்டிருந்த மின்விசிறியை அணைக்கும்படி.

சுவிட்சை ஒரு தட்டு தட்டியபடி அருண் அங்கிருந்து நகர்ந்து சென்றான்.

கீதா மணியைப் பார்த்தார். மணி 11:30!

(தொடரும்)

© TamilOnline.com