இயக்குநர் கே.எஸ். சேதுமாதவன்
தனக்கென ஒரு தனிப்பாணியில் இயங்கி தரமான படங்களைத் தந்த இயக்குநர் சேதுமாதவன் (90) காலமானார். இவர் மே 15, 1931ல் பாலக்காட்டில் பிறந்தார். இளவயதிலேயே நாடகம் மற்றும் திரைப்பட ஆர்வம் கொண்டிருந்த இவர், இயக்குநர் கே. ராம்நாத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். 'ஓடையில் நின்னு' என்ற மலையாளப் படத்தில் இயக்குநராக அறிமுகமானார். அப்படம் தேசிய விருது பெற்றது. தொடர்ந்து 'தாகம்', 'கூட்டுக் குடும்பம்' என 60க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார். பல படங்களுக்கு கதை, வசனம் எழுதினார். நடிகர் கமல்ஹாசனை மலையாளத்தில் அறிமுகப்படுத்தியது இவர்தான். அடிமைகள், பணிதீர்த்தவீடு போன்ற மலையாளப் படங்களுக்காக தேசிய விருது பெற்றிருக்கிறார். கேரள மாநில அரசு விருது, ஃபிலிம்ஃபேர் விருது உள்பட பல்வேறு விருதுகளும் பாராட்டுதல்களும் பெற்றவர். 'ஸ்த்ரீ' படத்தை இயக்கியதற்காகப் பிரபல 'நந்தி விருது' இவருக்கு அளிக்கப்பட்டது.

சிவகுமார் நடித்த 'மறுபக்கம்' படத்தை இயக்கியது இவர்தான். பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய 'உச்சிவெயில்' கதையின் திரை வடிவம் இப்படம். முதன்முதலில் தமிழில் சிறந்த படத்திற்கான 'தங்கத்தாமரை' விருது பெற்றது இப்படம்தான். அது தவிர, சிறந்த கதை வசனம், சிறந்த நடிகை என்ற பிரிவுகளிலும் இப்படத்திற்கு மேலும் இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன. கமல் நடித்த 'நம்மவர்' படத்தின் இயக்குநரும் சேதுமாதவன்தான். இப்படத்திற்கும் 1994ம் ஆண்டில் தேசிய விருது கிடைத்தது. இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் நாகேஷுக்கு சிறந்த குணசித்திர நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. தமிழக அரசின் சிறப்புப் பரிசும் இப்படத்திற்குக் கிடைத்தது.

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகம் பல்வேறு விருதுகளும் சாதனைகளும் நிகழ்த்த உறுதுணையாக இருந்த சேது மாதவன், சென்னையில் காலமானார்.

© TamilOnline.com