சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்
தம்மை அணுகியோரின் கர்ம வினைகளை நொடிப் பொழுதில் மாற்றும் ஆற்றல்மிக்க மகான் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள். கலியுகத்தில் மக்களின் குறைகளைப் போக்குவதற்காகவென்றே அவதரித்த மஹான். மக்கள் மண்ணுக்கும் பொன்னுக்கும் ஆசைப்பட்டு அழிவதை விட்டு, ஆண்டவன் அருள்பெறவே ஆசைப்பட வேண்டும் என்று அறிவுறுத்திய மகாஞானி.

பிறப்பு
1870ம் ஆண்டு ஜனவரி 22 அன்று, வந்தவாசியை அடுத்துள்ள வழூர் கிராமத்தில், வரதராஜ ஜோசியர்-மரகதம் இணையருக்கு மகனாகப் பிறந்தார். தாத்தா காமகோடி சாஸ்திரிகள் ஸ்ரீவித்யா உபாசகர். சகல சாஸ்திரங்களும் அறிந்தவர். ஆலய பூஜை தவிர வேதம், உபநிஷத், சாஸ்திரங்கள், மீமாம்சை போன்றவற்றைச் சீடர்களுக்குக் கற்பித்து வந்தார். தன் மாணவர்களுள் ஒருவரான வரதராஜ ஜோசியருக்கே தனது வளர்ப்பு மகளான மரகத்தைத் திருமணம் செய்து கொடுத்தார். பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லாதிருந்த தம்பதியினருக்கு, காஞ்சி ஸ்ரீ வரதராஜப் பெருமானின் அருளாலும், காமாட்சி அன்னையின் ஆசியினாலும் அவதரித்தார் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்.

தங்கக் கை
ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் குழந்தையாயிருந்த போதே அறிவுக் கூர்மையுடனும், பக்தியுடனும் விளங்கினார். பார்த்தோர் அனைவரும் 'ஞானக்குழந்தை' என்று போற்றும் அளவிற்கு தெய்வச் சிறுவனாக வலம்வந்தார்.

வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் நடக்கும் முக்கியமான பல திருவிழாக்களுள் வைகாசி மாத விசாகத்தில் நடக்கும் தேர்த்திருவிழாவும் ஒன்று. சுற்றுக் கிராமங்களிலிருந்தும் மக்கள் கூட்டமாகத் திருவிழாவைக் காண வருவர். சேஷாத்ரி சுவாமிகளுக்கு நான்கு வயதாக இருக்கும்போது தாய் மரகதம் குழந்தையைக் கூட்டிக்கொண்டு அதற்குச் சென்றாள்.

செல்லும் வழியில் ஒரு வியாபாரி வெண்கலச் சிலைகளை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தான். குழந்தை சேஷாத்ரி அதில் ஒரு பொம்மை வேண்டுமென்று அடம் பிடித்தான். அன்னை அதை வாங்கித் தர மறுத்தாள். குழந்தையின் பிடிவாதம் அதிகமாகி அழுகையாக மாறியது. குழந்தை அழுவது கண்டு மனமிரங்கிய வியாபாரி குழந்தையை அழைத்து எந்தப் பொம்மை விருப்பமோ அதை எடுத்துக் கொள்ளும்படிக் கூறினார். குழந்தை அழுகையை நிறுத்தியது. கூடையில் இருந்த பல சிலைகளுள் வெண்ணெய் உண்ட நவநீத கிருஷ்ணன் சிலையை ஆசையுடன் எடுத்துத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டது. கிருஷ்ணரைப் போன்ற ஒருகுழந்தை, கிருஷ்ணர் பொம்மையையே எடுத்துக் கொண்டது குறித்து வியாபாரிக்கு மிகவும் மகிழ்ச்சி. மரகதம், பொம்மைக்கான விலையைக் கொடுத்தபோதும் அதை வாங்க மறுத்துவிட்டார்.

பால சேஷாத்ரியும், அன்னை மரகதமும் ஆலயத்திற்குள் சென்றனர். ஆலயத்தில் அன்று கூட்டம் அதிகம் இருந்ததால் தரிசனம் முடிந்து வெளியே வர வெகுநேரம் ஆகிவிட்டது. ஆலயத்திலிருந்து இவர்கள் வருவதைப் பார்த்த பொம்மை வியாபாரி, அவர்களை நோக்கி வேகமாக ஓடி வந்தார். குழந்தையின் கரத்தை அப்படியே தொட்டு வணங்கியவன், "தங்கக் கை; தங்கக் கை" என்று சொல்லிக் குழந்தையின் கரங்களுக்கு முத்தமிட்டான். மரகதத்திடம் அவன், "அம்மா, நான் இங்கே வருடக்கணக்காக வியாபாரம் செய்து வருகிறேன். சாதாரண நாட்களில் ஒரு சில பொம்மைகள் விற்கும். திருவிழாக் காலத்தில் நூறு பொம்மைகள் போல விற்கும். ஆனால் இன்றைக்கு, குழந்தையின் கை பட்ட வேளை நான் கொண்டு வந்த ஆயிரம் பொம்மைகளும் விற்றுத் தீர்ந்தன" என்று மகிழ்ச்சியுடன் கூறினார். "இது சாதாரணக் குழந்தை அல்ல. தெய்வக் குழந்தை" என்று சொல்லி பால சேஷாத்ரியை வணங்கினான்.

பால சேஷாத்ரி செய்த முதல் அற்புதம் இது. வளர வளர அவர் வாழ்வில் எத்தனையோ அற்புதங்கள், அதிசயங்கள் நடந்தன.இளமைப் பருவம்
தந்தை வரதராஜர், தாத்தா காமகோடி சாஸ்திரிகள் ஆகியோரிடமிருந்து வேதம், பாஷ்யம், சுலோகம் என அனைத்தையும் சேஷாத்ரி கற்றார். அவர் வளர வளர அறிவு சுடர்விட்டு ஞானசூரியன் போலப் பிரகாசிக்க ஆரம்பித்தது. முகத்தில் பிரம்மதேஜஸ் ஒளிவிடத் தொடங்கியது. தினந்தோறும் அன்னை காமாட்சி ஆலயத்திற்குச் செல்லும் அவர், அங்கே தனித்து அமர்ந்து காயத்ரி மந்திரத்தை ஜபிப்பார். அத்துடன் தாத்தா சொல்லித் தந்த லலிதா சஹஸ்ரநாமம், மூகபஞ்சசதி போன்றவற்றைச் சொல்வார். பின் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்துக்குச் சென்று அங்கே சிவபஞ்சாக்ஷரி ஸ்தோத்திரம், சிவஸ்துதி எல்லாம் சொல்லி வணங்குவார். பின்னர் வரதராஜப் பெருமாள் ஆலயம் செல்வார். அங்கே சக்கரத்தாழ்வார், வரதராஜர், தாயார் சன்னிதிகளுக்குச் சென்று வணங்குவார். கிருஷ்ணாஷ்டகம், பால முகுந்தாஷ்டகம் போன்றவற்றைக் கண்ணீர் வழிய ஓதுவார். பின்னர் வீடு திரும்புவார். இந்த நித்ய வழிபாட்டிற்குப் பின்னர்தான் காலை உணவு. இதுவே அவரது தினசரி வழக்கம்.

சேஷாத்ரி சுவாமிகளுக்குப் பன்னிரண்டு வயது நடந்து கொண்டிருந்தபோது தந்தை வரதராஜர் காலமானார். அது சிறுவன் சேஷாத்ரியின் உள்ளத்தை வாட்டியது. பிறப்பு, இறப்பு என்பவை ஏன் ஏற்படுகின்றன, அந்தச் சுழற்சியிலிருந்து விடுபடுவது எப்படி என்பது பற்றியெல்லாம் யோசிக்கத் தொடங்கினார். நாளாக நாளாக ஆன்மீக நாட்டம் அதிகமாயிற்று. அடிக்கடி தியானத்தில் மூழ்கினார். தன்னை மறந்து பூஜை செய்தார். அவருக்குத் திருமணம் செய்துவைக்க அன்னை மரகதம் முயற்சித்தார். ஆனால் அவை தோல்வியில் முடிந்தன. அந்த வருத்தத்தில் அன்னை படுத்த படுக்கையானார்.

அன்னையின் உபதேசம்
நாளுக்கு நாள் அன்னையின் உடல் நலிவுற்றது. தன் முடிவுக் காலம் நெருங்குவதை உணர்ந்த அன்னை, ஒருநாள் மகனை அருகில் அழைத்தார். அவரது தலையில் கையை வைத்து ஆசீர்வதித்தவர்,

"ஸத் ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோகத்வம்
நிர்மோகத்வே நிஸ்சலதத்வம்
நிஸ்சலதத்வவே ஜீவன்முக்தி"
என்ற சுலோகத்தையும்,
"தர்சனாத் அப்ரஸதசி
ஜனனாத் கமலாலயே
காச்யந்த்து மரணான் முக்தி
ஸ்மரணாத் அருணாசலே:"


என்ற ஸ்லோகத்தையும் சொல்லி, "அருணாசல, அருணாசல, அருணாசல" என மும்முறை உச்சரித்து, அதையே மந்திரோபதேசமாய் சேஷாத்ரிக்கு அளித்து உயிர் நீத்தார்.

அன்னையின் மறைவு சேஷாத்ரி சுவாமிகளை மீளாத்துயரில் ஆழ்த்தியது. யாருமற்றவரானார் என்றாலும் அவரது சித்தப்பா ராமசாமி ஐயரும், சித்தி கல்யாணியும் சேஷாத்ரியை தங்கள் குழந்தையாகவே எண்ணி வளர்க்கத் தலைப்பட்டனர்.

நாட்கள் நகர்ந்தன. ஆயினும் அந்திம காலத்தில் அன்னை கூறிய ஞான தத்துவமும் "அருணாசல, அருணாசல, அருணாசல" என்ற மந்திரமும்இடைவிடாமல் சேஷாத்ரியின் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தன. அன்னையின் அந்த அருள்வாக்கே சேஷாத்ரி சுவாமிகளுக்கு மகா மந்திரமானது. சதா அருணாசல மந்திரத்தை உச்சரித்தவாறே இருந்தார். உண்ணாமல், உறங்காமல் மந்திர உச்சாடனம் தொடர்ந்தது. நாள் முழுக்க பூஜை, தியானம் என்று கழிக்க ஆரம்பித்தார். அறைக்குள் போய் கதவைப் பூட்டிக் கொண்டால் நாள் முழுவதும் வெளியே வரவே மாட்டார். எப்பொழுதும் தியானத்திலும் ஜபத்திலும் ஆழ்ந்திருந்தார். இந்தக் கடும் தவத்தின் பலனாக விரைவிலேயே அவர் ஞான வைராக்ய நிலையை அடைந்தார். அஷ்டமா சித்திகள் உட்படப் பல்வேறு சித்திகளும் கைவந்தன. ஆனாலும் அவ்வகை ஆற்றல்களை அவர் வெளிப்படுத்தவில்லை. அவரது மனம் முழுக்க அருணாசலமே நிறைந்திருந்தது. அதனைக் காணும் ஆர்வம் அதிகமானது.

குரு உபதேசம்
ஒரு சமயம், ஹரித்துவாரத்தில் இருந்து ராமேஸ்வரம் போவதற்காக வந்திருந்த பாலாஜி சுவாமிகள் என்பவர், காமாட்சி அன்னையை தரிசிக்கக் காஞ்சிபுரத்தின் சர்வதீர்த்தக் கரையில், பர்ணசாலை அமைத்துத் தங்கியிருந்தார். அவரைச் சந்தித்தார் சேஷாத்ரி சுவாமிகள். அவரிடம் உபதேசம் வேண்டினார்.

சேஷாத்ரியைக் கண்டதுமே இவர் மிகச்சிறந்த ஆத்மஞானி என்பதைக் கண்டுகொண்டார் பாலாஜி சுவாமிகள். ஆகவே தினந்தோறும் சேஷாத்ரி சுவாமிகளை வரவழைத்து அவருடன் சத்விஷயங்கள் குறித்து விவாதித்து வந்தார். ஒரு நன்னாளில் சுவாமிகளுக்கு சந்யாச தீட்சை அளித்து ஆசிர்வதித்தார்.

தவ வாழ்க்கை
அன்று முதல் வீட்டைத் துறந்த சேஷாத்ரி சுவாமிகள் உண்ணாமல், உறங்காமல் சதா தியானத்தில் ஈடுபட்டார். ஞான வைராக்யம் மேலும் வலுப்பெற மயானத்திற்குச் சென்றும் தவம் செய்தார். இதனால் ஊரார், உறவினர் அவரைப் பித்தன் என்று ஏசினர். ஆனால் இதற்கெல்லாம் அவர் வருந்தவோ, வேதனையுறவோ இல்லை. கூண்டை விட்டுப் பறவை பறக்கத் துடிப்பது போல, பொய்யான உறவுத் தளைகளிலிருந்து விடுபட அவர் ஆயத்தமாகியிருந்தார்.

ஒருநாள் தந்தைக்குக் கர்மா செய்ய வேண்டுமென சுவாமிகளின் சித்தப்பா வலியுறுத்தினார். மறுத்த சுவாமிகளை அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டார். பிரார்த்தனை நேரத்தில் அவர் பூட்டிய அறையைத் திறந்துபார்த்தபோது சுவாமிகள் அங்கே இல்லை. மாயமாய் மறைந்து விட்டிருந்தார். சுவாமிகளின் மகிமையை உணர்ந்து கொண்ட அனைவரும் அவரை ஊர் முழுக்கத் தேடிப் பார்த்தனர். சுவாமிகள் யார் கண்ணிலும் தட்டுப்படவில்லை.

வீட்டை விட்டு நீங்கியவர் காவேரிப்பாக்கம், திண்டிவனம், விழுப்புரம், படவேடு, திருப்பத்தூர், போளூர் என்று பல இடங்களுக்கும் சென்று அங்குள்ள திருக்கோவில்களை தரிசனம் செய்தார். பின்னர் அருணாசலத்திற்குப் பயணப்பட்டார்.அருணாசலத்தில்...
அண்ணாமலையை அடைந்தவர் உடனடியாக அன்றைய நாள் முழுவதும் பலமுறை கிரிவலம் வந்தார். ஊண், உறக்கம் மறந்தார். நாளடைவில் மலைமீதும், கிரிவலப் பாதையிலும், ஆங்காங்கே உள்ள குகைகளிலும் தனித்திருந்து தவம் செய்தார். விரைவிலேயே பிரம்மஞான நிலையை அடைந்தார். உடல் மீதிருந்த பற்று முற்றிலுமாக நீங்கியது. ஓரிடத்தில் நில்லாமல் அங்கும் இங்கும் சதா சுற்றிக் கொண்டிருப்பதும், வாய் ஓயாமல் ஏதாவது பேசிக் கொண்டிருப்பதும் வழக்கமானது. சதா பிரம்மத்தில் ஒன்றியிருந்த அவர், சிலர் கண்களுக்கு யோகியாகவும், சிலர் கண்களுக்குப் பித்தராகவும் தென்பட்டார். பைத்தியம் என்று நினைத்தவர்கள் சுவாமிகளைத் துரத்தினர். ஞானி என்று கருதியவர்களோ அவரைத் தொழுது வணங்கினர்.

சேஷாத்ரி சுவாமிகள் முக்காலமும் உணர்ந்தவர். ஒரு சமயம் இருந்த இடத்திலிருந்தே போளூரில் மகாசமாதியான விட்டோபா சுவாமிகளின் மரணத்தை முன்னறிவித்தார். சுவாமிகளின் உண்மையான பெருமையை அதுவரை உணராதிருந்த மக்கள், அப்போது உணர்ந்து கொண்டு அவரைப் போற்றினர். அவர் எங்கு சென்றாலும் கூடவே செல்வதும், அவரது அருள் வேண்டி யாசிப்பதும் பக்தர்களின் வழக்கமானது.

உண்மையான பக்தியுடனும், ஆர்வத்துடனும் தம்மை அண்டியோருக்கு அருளாற்றலை வாரி வழங்கினார் சேஷாத்ரி சுவாமிகள். அவரது கை பட்டால் தொட்டது துலங்கியது. அவர் ஒரு கடைக்குள் நுழைந்து பொருட்களை அள்ளி வீசி எறிந்தால் கடைக்காரர்களுக்கு நல்ல லாபம் கிட்டியது. அவர் ஆசீர்வதித்தாலோ, கட்டியணைத்தாலோ பக்தர்களது பாவம் நீங்கியது. அதனால் திருவண்ணாமலையில் உள்ள மக்களும், வியாபாரிகளும் தினந்தோறும் மகானின் வருகைக்காகக் காத்திருந்தனர்.

சாலையில் நடந்துகொண்டே இருப்பார், திடீரென்று ஏதோ ஒரு கடைக்குள் நுழைவார். அது நகைக் கடையாக இருந்தால் கல்லாவில் இருந்த காசுகளை அள்ளி எறிவார். உணவு விடுதி என்றால் பண்டங்களை, பதார்த்தங்களை அள்ளி வீசுவார். துணிக்கடை என்றால் துண்டுகளை, ஆடைகளை அள்ளித் தெருவில் வீசுவார். அன்றைய நாள் முடிவதற்குள் அந்தக் கடைக்காரர்களுக்கு நிறைய லாபம் கிடைத்துவிடும். இதனால் சுவாமிகளைத் தெய்வமாக எண்ணிப் பலரும் தொழுதனர்.

ஆனால், குறுகிய நோக்கத்துடனும், தீய எண்ணங்களுடனும் தம்மை நாடி வருவோரிடமிருந்து சுவாமிகள் ஒதுங்கியே இருந்தார். தான் என்ற அகந்தை மிகுந்தவர்களையும், தகுதியற்ற தீயவர்களையும் அவர் புறக்கணித்தார். அதற்குக் காரணம், இது போன்ற புறக்கணிப்பாலாவது அவர்கள் தாங்கள் செய்த பாவத்தை நினைத்து வருந்தி மனம் திருந்தட்டும் என்பதுதான்.

அன்போடும் பக்தியோடும் உண்மையான அருள் தாகத்தோடும் வருபவர்களுக்கு சுவாமிகள் தக்க வழி காட்டினார். ஆன்ம முன்னேற்றத்திற்கு உதவினார். பலரது கர்மவினைகள் அகலக் காரணமாக இருந்தார். ஏழைகள்மீது மிகுந்த இரக்கம் கொண்டிருந்தார். பல்லாயிரக்கணக்கான மக்களை மலை சுற்றவைத்த பெருமையும் சுவாமிகளுக்கு உண்டு.

பகவான் ரமணர்
திருச்சுழியில் அவதரித்த பகவான் ரமணர் இறையருள் வேட்கையால் தம் இருப்பிடம் நீங்கி அண்ணாமலையைச் சரணடைந்தார். பால சந்யாசியாக விளங்கிய அவரது தவத்துக்குப் பலரும் இடையூறு விளைவித்தனர். அதனால், அண்ணாமலையார் ஆலயத்தில் ஆள் நடமாட்டமற்ற பாதாளலிங்கேஸ்வரர் சன்னதியில் தனித்திருந்து அவர் தவம் செய்து வந்தார்.

தினந்தோறும் அப்பகுதிக்குச் செல்லும் சேஷாத்ரி சுவாமிகள், ரமணர் அங்கு தவம் செய்து கொண்டிருப்பதை அறிந்தார். அவரது தவத்துக்கு இடையூறு ஏற்படாமல் காத்தார். ஒருநாள் போக்கிரிச் சிறுவர்கள் சிலர் பாதாள லிங்கேஸ்வரர் சன்னிதிக்குள் கல்லெறிந்து கொண்டிருப்பதைக் கண்டார் சுவாமிகள். மிகச் சினங்கொண்ட அவர், அந்த மூடச் சிறுவர்களை அங்கிருந்து விரட்டினார். அப்போது அங்கே வந்த வெங்கடாசல முதலியாரிடம் 'என் குழந்தை இங்கே தவம் செய்கிறான் பார்' என்று சொல்லி ரமணரின் தவக்காட்சியைக் காண்பித்தார். உடனே வெங்கடாசல முதலியார், துணைக்குச் சில ஆட்களை அழைத்து, ரமணரை அங்கிருந்து வெளிக்கொணர ஏற்பாடு செய்தார். உடலின் தொடைப்பகுதி முழுதும் வண்டுகள், பூச்சிகள் துளைத்துப் புண்ணான நிலையில் ரமணர் மேலே கொண்டு வரப்பட்டார். பின் ரமணரின் தவவாழ்வு அண்ணாமலையில் தொடர்ந்தது.

இவ்வாறு ரமண மகரிஷியை உலகோருக்கு அறிவித்து, அவர்தம் பெருமை விளங்கக் காரணமானார் சத்குரு சேஷாத்ரி சுவாமிகள்.சுவாமிகளின் அற்புதங்கள்
சுவாமிகள் செய்த அற்புதங்கள் பலப்பல. அண்ணாமலையில் வாழ்ந்த காலத்தில் தம்மை நாடி வந்த அடியவர்களின் வாழ்வில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்.

வெங்கடசுப்பையா என்பவரது வீட்டிற்கு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் அடிக்கடி செல்வார். அந்த வீட்டில் உள்ளவர்கள் ஸ்ரீ சுவாமிகளைத் தெய்வமாகவே எண்ணித் தொழுது வந்தனர். ஆனால் சுப்பையாவின் மைத்துனருக்கு சுவாமிகள்மீது நம்பிக்கை இல்லை. சுவாமிகள் சும்மா ஊர்சுற்றிக் கொண்டிருப்பதாகவே நினைத்தார்.

ஒருநாள் அந்த மனிதரைக் கருந்தேள் ஒன்று கொட்டிவிட்டது, வலியினால் அவர் மிகவும் வேதனைப்பட்டுத் துடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே ஏதோ ஓர் பாடலை முணுமுணுத்தவாறு வந்தார் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள். அவரைப் பார்த்த அந்த மைத்துனர் கதறினார். "நீங்கள் பெரிய மகான் என்று எல்லோரும் சொல்கிறார்களே, என் வலியைப் போக்கக் கூடாதா?" என்று முறையிட்டார்.

"சிறிது மணலை எடுத்துத் தேள் கொட்டிய இடத்தில் தடவு. சரியாகி விடும்" என்றார் சுவாமிகள்.

அந்த நபரும் அவ்வாறே எடுத்துத் தடவினார். ஆனால், வலி நிற்பதாக இல்லை. அது மேலும் மேலும் அதிகமானது. அந்த நபரால் பொறுக்க முடியவில்லை.

"ஏதாவது மந்திரம் ஜெபித்தாவது என் வலியைப் போக்குங்கள். என்னால் தாங்க முடியவில்லை" என்று அழுதார்.

உடனே சுவாமிகள், "சேஷாத்ரி என்று சொல்லிக்கொண்டே அந்த மணலைத் தடவு. எல்லாம் சரியாகப் போய்விடும்" என்றார்.

உடனே அவரும் அழுதுகொண்டே மணலை எடுத்து "சேஷாத்ரி", "சேஷாத்ரி" என்று சொல்லிக்கொண்டே, தேள் கொட்டிய இடத்தில் தடவினார். என்ன ஆச்சரியம்! சற்று நேரத்தில் வலி குணமானது மட்டுமல்ல; தேள் கொட்டிய சுவடே இல்லாமல் போய்விட்டது. அதுவரை சுவாமிகளை நம்பாமல் கேலி பேசிக்கொண்டிருந்த நபர், அது முதல் சுவாமிகளின் தீவிர பக்தராக மாறிப்போனார்.

ஒருமுறை 'ரேணு' என்று அழைக்கப்படும் குழுமணி நாராயண சாஸ்திரிகளுக்காக நூற்றுக்கணக்கான கருடன்களை வானத்தில் சுவாமிகள் வரவழைத்திருக்கிறார். கடும் கோடைக்காலத்தில் விடாமல் மழை பொழிய வைத்திருக்கிறார். ஓடாத தேரை ஓட வைத்திருக்கிறார். ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி அளித்திருக்கிறார். இவ்வாறு அண்ணாமலையில் சுவாமிகள் செய்த அற்புதங்கள் பலப்பல.

மகாசமாதி
அண்ணாமலையில் கால்வைத்த நாள்முதல் தன் இறுதிக்காலம் வரை வேறெங்கும் செல்லாமல் அண்ணாமலையிலேயே வாழ்ந்த மகான் ஜனவரி 4, 1929 வெள்ளிக்கிழமையன்று, தமது 59ம் வயதில் அண்ணாமலையில் கலந்தார். மகானின் சமாதி ஆலயம், கிரிவலப்பாதையில், ரமணாச்ரமத்திற்கு முன்னால் அக்னி லிங்கம் அருகே அமைந்துள்ளது.

மார்கழி மாதத்து ஹஸ்தத்தில் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் குருபூஜை விழாவும், தை மாத ஹஸ்தத்தில் ஜெயந்தி விழாவும் கொண்டாடப்படுகின்றன. அதுபோன்று சென்னை மாடம்பாக்கம், காஞ்சிபுரம், ஊஞ்சலூர் ஆகிய இடங்களிலும் மகானின் ஆராதனை மற்றும் ஜெயந்தி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடு மற்றும் உள்நாட்டு பக்தர்களின் முயற்சியால் மகான் பிறந்த ஊரான வழூரில் புதிய மணிமண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் குடமுழுக்கு விழா வரும் ஜனவரி, 23, 2022 அன்று நடைபெற உள்ளது. (பார்க்க: seshadriswamigal.in)

பா.சு.ரமணன்

© TamilOnline.com