'வல்லநாட்டுச் சித்தர் வரலாறு' நூலில் இருந்து...
1. வள்ளலார் வழித்தோன்றல்
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுகா வல்லநாடு அருகே உள்ள பாறைக்காடு என்னும் கிராமத்தில் வாழ்ந்த சாது சிதம்பர சுவாமிகள் மிகவும் பிரசித்தி பெற்ற சித்தர். இவர் கடந்த தலைமுறையினர் வாழ்ந்தபோது கூட நமது மண்ணில் வலம் வந்தவர். அதோடு மட்டுமல்லாமல் அவரோடு வாழ்ந்தவர் பலரும் தற்போதும் இந்தப் புண்ணிய பூமியில் வாழ்ந்து வருகிறார்கள். இவர் வள்ளலார் வழி நடந்தவர். "அருட்பெருஞ்சோதி தனிப் பெருங்கருணை" என்ற மந்திரம் ஒலிக்க வாழ்ந்தவர். அவரின் அதே சன்மார்க்க வழியில் தற்போதும் இவர் அடங்கிய சமாதி கோயிலில் தொண்டர் குல மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இவர் தனது வாழ்க்கையில் செய்த அதிசயங்கள் பல. இவர் நிறுவிய ஆலயம் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள பாறைக்காடு என்னும் இடத்தில் உள்ளது. தற்போதும் இவர் ஏற்றிவைத்த தீபம் எரிந்து கொண்டே இருக்கிறது. இவரின் சமாதியுடன் தாய், தந்தை மற்றும் சின்னத் தகப்பன், சின்னத் தாயார், மனைவி, மணிகண்டன் என்ற யானை அடக்கமான இடம் உள்ளது. அங்கே பூஜை நடந்து கொண்டே இருக்கிறது.

இவர் சதுரகிரி சென்ற போது, தன்னோடு பழகிய யானையின் சிரசின் மீது தீபம் போட்டு வணங்கி வந்தார். அந்த விளக்கு தீபமும் தொடர்ந்து எரிந்து கொண்டேயிருக்கிறது.

விளக்கு வழிபாடு
மேலும் பாறைக்காட்டில் 7 தீபம் எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது. குளத்துக் கரையில் உள்ள ஆலமரம் அடியில் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. இவர் ஆலயத்துக்குள் செல்வதே ஆனந்தம் தான்.

வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் கோயிலுக்குச் சென்றாலே மனதுக்கு நிம்மதியும் உற்சாகமும் பிறக்கிறது என்பது இங்கு வந்து செல்லும் அனைவரின் சொல் வாக்கு. இவரது சீடராக வந்து இங்கு அமர்ந்த சிவா சுவாமிகள் ஏற்பாட்டின் பேரில் கட்டப்பட்ட மண்டபமும் இக்கோயிலுக்கு மணி மகுடமாகக் காட்சியளிக்கிறது.

வல்லநாட்டு சாமியின் காலத்தில் இருந்தே இங்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. உணவு என்று பசியுடன் வருபவர்களுக்கு இங்கு உணவு அளிக்கப்படுகிறது. இவர் வாழ்ந்த காலத்தில் சித்தரின் அருளைப் பெற்றவர்கள் பலர். தற்போதும்கூட இந்த பீடத்தில் வந்து வணங்கி அவரின் அருளை பெற்று வருபவர்கள் பலர்.

நாகத்துடன் ஒரே கலசத்தில் உணவருந்தியவர் இவர். ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சியளித்தவர். நவகண்டயோக கலை மூலம் தனது உடலை ஒன்பது துண்டுகளாக பிரித்துப் போட்டு யோகம் செய்தவர். அபூர்வ சக்திகள் அடங்கிய சித்தர்கள் அரூபமாக பொதிகை மலையில் வாழ்கிறார்கள். அந்தப் பொதிகை மலையில் பக்தர்களுக்கு வெள்ளை யானையை வரவழைத்துக் காட்டியவர்.

வல்லநாட்டில் வாழ்ந்த இந்த சித்தருடன் வாழ்ந்தவர்கள் கூறிய அற்புதங்களைத் தொகுத்து தருவதே இந்நூலின் நோக்கம். இதில் சித்தர் தீரச்செயல்கள் மயிர்க் கூச்செறியும் சம்பவங்கள் குறித்து அவருடன் பல இடங்களுக்குச் சென்று தீப விளக்கேற்றிய ஓட்டப்பிடாரம் வெள்ளாரம் என்ற ஊரைச் சேர்ந்த கணபதி என்பவர் கூறியதாவது. அவருடன் இருந்தபோது நடந்த அற்புதங்களை கூறுகிறார்.

மருத்துவம்
சுவாமி அதிகமாகப் படிக்கவில்லை . வல்லநாட்டு மலை அடிவாரத்தில் வாழ்ந்த இவர், மறவர் சமூகத்தினை சேர்ந்தவர். ஆனால் அனைத்து சமுதாயத்தினையும் அரவணைத்துச் செல்லக்கூடியவர். அதோடு மட்டுமல்லால் வல்லநாட்டு சாமி ஒருபடி மேலே போய் தாழ்த்தப்பட்ட மக்களைத்தான் உடன் வைத்து இருப்பார். அதே நேரம் உயர்ந்த சாதியினர் என கூறப்படும் மக்கள் மத்தியில் சாதிக்கொடுமையை அனுபவித்தவரும் இவர்தான்.

ஆகவே முதல்முதலில் இவருக்கு மேற்சாதி மக்களால் ஏற்பட்ட ஒரு சம்பவத்தினையும், அதை இவர் மன்னித்த விதத்தினையும் காணலாம்.

சுவாமி சிறு வயது முதலே தன் தகப்பனார் செய்யும் மருத்துவத் தொழிலுக்கு உதவியாக இருந்தார். ஒரு நாள் அவரது தகப்பனார் வெளியூருக்குச் சென்று விட்டார். அந்த சமயம் பாம்பு கடித்து உயிருக்கு மோசமான நிலையில் ஒருவரை கொண்டு வந்தார்கள். அவரின் விஷத்தை தந்தையின் துணையில்லாமல் தானே இறக்கிச் சுகமாக்கினார். அன்று முதல் சுவாமி மருத்துவர் என்று எல்லோரும் ஒப்புக்கொண்டனர். அந்நேரங்களில் தாழ்த்தப்பட்டவர்கள், வேறு சாதியினர் எனப் பிரிவினை அதிகமாக இருந்தாலும் வல்லநாட்டில் சாதிக்கொடுமை தலை விரித்தாடியது. ஒரு குறிப்பிட்ட சாதியினர் வசிக்கும் இடத்திற்குச் செருப்பு போட்டு செல்லக்கூடாது. ஆனால், சுவாமி ஆடு மேய்த்து செருப்புக் காலுடன் அந்த தெருவுக்குச் சென்று விட்டார். அதைப் பார்த்த அத்தெருவைச் சேர்ந்த பெரியவர்களில் ஒருவர் சாமியைத் திட்டித் தீர்த்துவிட்டார்.

விஷம் இறக்கினார்
அன்றிரவு திட்டியவரின் மனைவியைப் பாம்பு கடித்துவிட்டது. உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். பாம்புக்கடி விஷத்தை இறக்க வேண்டும் என்றால் சிதம்பர சுவாமிதான் வரவேண்டும். எனவே சுவாமிக்கு ஆள் அனுப்பப்பட்டது. அனைவரும், 'சாமியை இன்றுதான் ஏசியுள்ளார். எனவே பழிவாங்கி விடுவார். விஷத்தை இறக்க வரமாட்டார்' என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், சுவாமி சிரித்துக்கொண்டே "நான் ஒரு மருத்துவன். யாராக இருந்தாலும் நோயைத் தீர்ப்பதற்கு உரியவன்" என்று கூறினார். பாம்பு விஷத்தினை இறக்கினார். அந்தப் பெண்ணைக் காப்பாற்றினார். அனைவரும் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்று விட்டனர். சாதியைப் பற்றி பேசிய அந்த மனிதர் நிலைகுலைந்து போய் சுவாமியைக் கையெடுத்து கும்பிட்டார். அவர் கண்களில் நீர் வடிந்தது. அப்போதே மருத்துவ குணங்களைக் கண்டறியும் நிலையைச் சித்தர் அடைந்துவிட்டார்.

கருநாகத்தோடு
அதன் பிறகு சாமியின் சகாப்தம் தொடங்க ஆரம்பித்தது. இவருக்குள் இருந்த இறை சக்திக்கு காரணம் என்ன?

ஒரு சமயம் வல்லநாடு மலையில் ஆடு மேய்க்கச் சுவாமி சென்றிருந்த போது அங்கு அவருடன் ஆடு மேய்க்கும் அனைத்துச் சிறுவர்களின் கஞ்சியும் கெட்டுப் போகும்.

ஆனால் சுவாமியின் கஞ்சி மட்டும் மூலிகை மகத்துவத்தால் கெடாமல் இருந்ததாம். அந்த ஆச்சரியம் அனைவரையும் வியக்க வைத்தது. மகனின் அரிய செயலைக் கேள்விப்பட்ட தந்தை சண்முகசுவாமிகள் மகனைப் பார்க்கக் காட்டுக்கு வந்தார். அங்கு மகன் மண் கலசத்தில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். மண் கலசத்திற்கு இவர் ஒரு கையை விட்டுச் சாப்பிடுவார். மறுநிமிடம் அருகில் நின்ற கருநாகம் தலையை அந்த மண் கலசத்திற்குள் விட்டு உணவு உண்டது. அந்த ஆச்சரியத்தைப் பார்த்து தந்தை சண்முகசாமி அடுத்த நிமிடம் அதிர்ச்சியடைந்தார்.

★★★★★
2. பூசைக்கு வந்த நாகயோகி
மகனின் மகத்துவத்தைப் புரிந்துகொண்டார் சுவாமியின் தந்தை. அன்றிலிருந்து சுவாமியின் அற்புதங்கள் தொடர ஆரம்பித்தன. குஷ்டரோகிகளைக் குணமாக்குவதில் சித்தர் விசேஷமானவர். இதுபற்றி கணபதி கூறும்போது, "முதல் நாள் தொழுநோயால் ரணத்தில் இருப்பவரைப் பார்ப்பேன். இரண்டு நாள் சித்தரின் மருத்துவத்தில் அந்த நோய் குணமாவதையும் நான் கண்ணால் பார்த்துள்ளேன்" என்றார். அத்தோடு அவர் விட்டு விடவில்லை. தொடர்ந்து சுவாமியின் அற்புதங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார்.

முதல் சந்திப்பு
முதன்முதலில் நான் சுவாமியைச் சந்தித்தது 1961ல் தான். வல்லநாடு சிவன் கோவிலில் நவக்கிரகம் பிரதிஷ்டை செய்திட சுவாமி ஏற்பாடு செய்தார். அப்போது நடராஜ அய்யர் என்பவர் என்னைச் சுவாமியிடம் கூட்டிக்கொண்டு காட்டினார். வல்லநாடு பஞ்சாயத்து தலைவராக திரவியம் செட்டியார் பதவி வகித்து வந்தார். முதன்முதலில் சுவாமியை நவக்கிரகம் முன்தான் நான் சந்தித்தேன். 5 பேரும் சேர்ந்து நவக்கிரகத்தைச் பிரதிஷ்டை செய்தோம். வல்லநாடு சிவன் கோயில் மிகவும் விசேஷமானது. இங்குள்ள சிவன் தானே தோன்றியவர். நவலிங்கபுரத்தில் முதல் சிவன் கோயிலாக இந்தக் கோயில் திகழுகிறது. மார்ச்சு மற்றும் செப்டம்பர் மாதங்களில் சூரிய ஒளி சிவன்மீது படும். அந்த அளவுக்கு சிறப்பானதாகும். வல்லநாடு சிவன் மீது வல்லநாட்டுச் சித்தர் அதிகப் பற்று வைத்திருந்தார்.

பூஜைக்கு வந்த நாகம்
அதன்பிறகு பல இடங்களுக்கு சுவாமியோடு கணபதி சென்றுள்ளார். அவர் "நான் சுவாமியுடன் ஐக்கியமாகி விட்டேன்" என்றே பெருமையாக என்னிடம் கூறினார். ஒருசமயம் கோவையில் உடுமலைப்பேட்டை தாலுகா உடுக்கன்பாளையம் என்ற இடத்தில் ஆறுமுகக் கவுண்டர் தோட்டத்தில் 1008 விளக்கு பூஜை நடந்து கொண்டிருந்தது. இந்தப் பூஜைக்கு சுவாமி சென்றிருந்தார். சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர். இதில் நமது சுவாமியோடு வளையாபதி சாமி, மைனர் சாமி, பச்சைவேட்டி சாமி, திருவலம் சாமி உள்படப் பல சுவாமிகள் கலந்துகொண்டனர். பூஜை அருமையாக நடந்துகொண்டிருந்தது. அப்போது அந்த கூட்டத்துக்கு நடுவே ஒரு கருநாகம் வந்தது. கூட்டத்தினர் சலசலப்பானார்கள்.

அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தீப விளக்கு நடைபெறும் பந்தல் வழியாக மேலே ஏறி மோட்டுக்குள் சுருண்டு அமர்ந்துகொண்டது.

தரிசனம் செய்தனர்
அனைவரும் அதிர்ந்து நிற்றனர். அப்போது சுவாமி, "இங்கு நாகயோகியாக வந்தது யார் தெரியுமா? அவர் பெரிய யோகி" என்று கூறிச் சிரித்தார் வல்லநாட்டார். அனைவருக்கும் ஒன்றுமே புரியவில்லை . ஒருவர் அவரிடம் அதற்கு விளக்கம் கேட்டார். உடனே அவர் பீர்முகமது பாடிய

"உற்றவர் பாதம் உணர்த்திடு நாளில் ஒரு பொருளை
பற்றிடுவேரு பழக்கறியா வான் உலகில்
கற்றவரோடு கலந்துரு வேளையில் அவனுக்குச்
சித்தனும் ஞானம் பாம்பு மாறாகத் தரிசிப்பேனே"


என்ற பாடலைப் பாடினார்.

அனைவரும் புரிந்துகொண்டனர். அந்த நேரம் சுவாமியிடம் எதுவும் கேட்கவில்லை. அந்த பூஜையில் பெரிய வசதிச் சீமானான ஏ.பி.டி. மகாலிங்கம் என்பவர்கூடச் சட்டையைக் கழட்டிவிட்டு பவ்யமாகச் சாமியைக் கும்பிட்டார்கள். அனைவரும் நாகத்தை வணங்கி நின்றனர். மறுநாள் சுவாமியிடம் சிஷ்யர்கள் கேட்டனர்.

"சுவாமி நேற்று பூஜைக்கு நாகமாக வந்தவர் யார்?"

சுவாமி அமைதியாக இருந்து விட்டு பேசினார். "அவர் 5 ஆயிரம் வருடத்திற்கு முன் ஐவர்மலை என்று கூறப்படும் அமராவதி நதிப்பக்கத்தில் ஒரு சுனையில் வாழ்ந்தவர்.

ஒரு கால கட்டத்தில் இந்தக் குகையில் பஞ்ச பாண்டவர்கள் திரவுபதியுடன் தங்கியிருந்தனர்.

கண்ணபிரானின் சோதனை
அப்போது கண்ணபிரான் எல்லோரையும் சோதித்துக் கொண்டிருந்தார். அப்படிச் சோதிக்கும் போது யார் பொய் சொல்லாமல் இருக்கிறார்களோ அவர் கையில் கனி விழும் என்று கூறினார். பஞ்ச பாண்டவர்கள் கைகளில் அந்தக் கனி விழுந்தது. ஆனால் திரவுபதி கையில் கனி விழவில்லை. அதற்கு காரணம் அவர் கேட்ட கேள்வி.

கண்ணன், "பஞ்ச பாண்டவர்களை மட்டும்தான் நீ விரும்பினாயா?" என்று கேட்டார்.

திரௌபதியோ, "ஆம்" என்று பதிலளித்தார்.

ஆனாலும் கனி விழவில்லை . அப்படியென்றால் பஞ்ச பாண்டவர்கள் தவிர வேறு யாரையும் திரௌபதி விரும்பினாரா?. கண்ணனே அவளிடம் கேட்டுவிட்டார். "நீ... பஞ்ச பாண்டவர்களைத் தவிர வேறு யாரையும் விரும்பினாயா?"

திரவுபதி தலைகுனிந்தார். "இவர்களுக்கு முன் நான் கர்ணன்தான் பஞ்சபாண்டவர்களின் தலைவர் என்று நினைத்தேன். எனவே அவரை விரும்பினேன்" என்று கூறினார். அந்த உண்மையைச் சொன்னவுடன் கனி அவள் கையில் விழுந்தது. இந்தச் செய்கையைக் குகையின் ஓரத்தில் இருந்து ஒரு யோகி பார்த்துக் கொண்டிருந்தார். அந்த யோகிதான் நேற்று நாகமாக நமது பூஜையில் கலந்து கொண்டார்" என்று அவர் கூறினார்.

இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. எனவே வல்லநாட்டு சுவாமியை வச்ச கண்ணு வாங்கமல் அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

உடனே ஒருவர் சுவாமியிடம் கேட்டார், "சுவாமி நாகங்களைப் பற்றிக் கூறும்போது, அவர்களைச் சித்தர்கள் என்று கூறுகிறீர்கள். அது உண்மையா? 5 ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை வரவழைத்துக் காட்ட முடியுமா?" என்று கேட்டார்.

அப்போது வல்லநாட்டு சாமி "முடியும்" என்று கூறினார். மேலும் அவர் கூறும்போது. "பாற்கடலைக் கடையும் போது ஆலகால நஞ்சினைச் சிவபெருமான் குடித்ததும் நஞ்சினைத் தொடர்ந்து பாற்கடலில் இருந்து உச்சை சிரவம் என்னும் வெண்குதிரை, காமதேனு, ஐராவதம் என்ற வெள்ளை யானை, கவுஸ்தவமணி என்ற ரத்தினமாலை போன்றவைகள் தோன்றின. இதில் ஐராவதம் என்ற வெள்ளை யானையைத் தேவேந்திரன் தன்வசம் ஆக்கிக் கொண்டான். அந்த வெள்ளை யானையை நான் பொதிகை மலையில் வரவழைத்துக் காட்டுகிறேன்" என்று சொன்னார்.

"உங்களால் முடியமா?" என்று வெளியே சொல்ல முடியாமல் மனதுக்குள் அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தனர்.

★★★★★


3.பொதிகைக்கு வந்த வெள்ளையானை
வல்லநாட்டுச் சாது சித்தர் சுவாமிகள் சிஷ்யர்களுக்கு வெள்ளை யானையைக் காட்ட பொதிகை மலைக்குக் கிளம்பினார். அவருடன் 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கிளம்புவதற்கு ஆயத்தமானார்கள். இவர்களெல்லாம் கொஞ்சதூரம் செல்லச் செல்ல பல்வேறு காரியங்களால் தடைபட்டனர். இதில் சுமார் 26 பேர் மட்டும் வாண தீர்த்தத்தை தாண்டினர். முதல் நாள் வாண தீர்த்தத்தின் அருகில் உள்ள குகையில் இவர்கள் அனைவரும் தங்கினர்.

வெள்ளம் வந்தது ஆனால் சுவாமி மட்டும் தனியாகச் சென்றுவிட்டார். இருப்பினும் சுவாமியிடம் ஒவ்வொருவரும் சென்று ஒவ்வொன்றாகப் பேசிக்கொண்டிருந்தனர். சுவாமி அதை விரும்பவில்லை. அவர் தியானம் செய்யவும் காட்டுப் பகுதியில் கொடிய விலங்குகளிடம் இருந்து உடன் வந்தவர்களைக் காப்பாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டார்.

எனவே தன்னைக் காண வந்தவர்களிடம் "இனிமேல் நீங்கள் இங்கு வரக்கூடாது. வந்தால் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்து விடுவீர்கள்" என்று கூறினார்.

எல்லோருக்கும் ஆச்சரியம். "சின்ன ஓடை போல் உள்ள இந்த இடத்தில் வெள்ளமா?" என்று நினைத்தனர். ஆனால் சுவாமி கூறியது போல் 10 நிமிடங்களில் மிகப்பெரிய வெள்ளம் வந்தது. சித்தர் மறுபுறம் இருந்து இவர்களைக் கண்காணிக்க, இவர்கள் அன்றிரவு அங்கு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.

மறுநாள் பயணம் தொடங்கியது. ஆறுகளைக் கடந்து, மலைகளைக் கடந்து, கொடிய மிருகங்களைக் கடந்து செங்குத்தான பாறையில் ஏறி அகத்தியர் பிரதிஷ்டை செய்துள்ள இடத்திற்குச் சென்றனர். இறுதியாக 26 பேர் மட்டும் வந்து சேர்ந்தனர்.

அந்த நேரத்தில் இஞ்சிக்குழி என்ற இடத்தில் வைத்து புலி ஒன்று இவர்களை நோக்கி வந்தது. அனைவரின் கதியும் அதோகதிதான் என்று நினைத்த போது சித்தரைக் கண்ட புலி அவரைப் பார்த்துப் பின்புறமாகச் சென்றுவிட்டது. உடனே மீண்டும் வெள்ளம் வர வைத்து அந்த 26 பேர்களையும் காப்பாற்றினார். அதன் பிறகு அகத்தியர் பிரதிஷ்டை செய்த இடத்தில் வைத்து தேவேந்திரனின் வெள்ளை யானையைத் தன்னுடைய தவ வலிமையால் வரவழைத்தார். அந்த வெள்ளை யானை 25 பேருக்குத் தெரிந்து. ஆனால் ஒருவருக்கு மட்டும் தெரியவில்லை .

ஏனென்றால் அவர் மிக அதிகமாகத் தவறு செய்தவர். ஆகவே அந்த பாக்கியம் அவருக்குக் கிடைக்கவில்லை சுவாமி வெள்ளை யானையை அனைவருக்கும் காட்டிய சந்தோஷத்துடன் மீண்டும் வல்லநாடு வந்து சேர்ந்தார்.

முத்தாலங்குறிச்சி காமராசு

© TamilOnline.com