தென்றல் பேசுகிறது...
பிரதமர் மோதி பங்கேற்ற IIT கான்பூரின் 54வது பட்டமளிப்பு விழா, எண்ணியமாக்கலில் (டிஜிடைசேஷன்) ஒரு புதிய மைல் கல்லைத் தொட்டது. இணையவழியில் விழா நடப்பது இன்றைக்குப் புதிதல்ல. எது புதிது என்றால், பட்டச் சான்றிதழ்கள் கட்டச்சங்கிலி (Blockchain) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கைமாற்றப்பட்டன என்பதுதான்! பிளாக்செயின் என்ற உடனே (பிட்காயின் போன்ற) கிரிப்டோ நாணயம் நினைவுக்கு வந்தால் நீங்கள் விஷயம் தெரிந்தவர்தான். இதற்கான தொழில்நுட்பமும் இந்த IITயில், தேசீய கட்டச்சங்கிலி பணித்திட்டத்தின் கீழ் (National Blockchain Project) உருவாக்கப்பட்டது. இந்தப் பட்டங்களை உலகில் எங்கிருந்தும் உறுதி செய்துகொள்ள முடியும் என்பதோடு, போலியாகச் செய்ய முடியாது என்பது இந்தத் தொழில்நுட்பத்தின் சிறப்பு. ஆரம்ப கால அச்சம் சிறிது இருந்தாலும் உலக நாடுகள் இந்தத் தொழில்நுட்பத்தைத் தவிர்க்க முடியாது என்பது எதார்த்தம். எனவே நெடுநோக்கோடு மோதி அரசு இந்தியாவுக்கென இந்தத் தளத்தை உருவாக்கவும் நடப்புக்குக் கொண்டுவரவும் முயல்வது மிகச்சிறப்பு.

இந்தப் புரட்சிகரப் பட்டமளிப்பு விழா உரையில் பிரதமர் கூறிய சில தகவல்கள் நம்மை அசரவும், ஆர்ப்பரிக்கவும் வைப்பன. இந்தியாவில் இன்றைக்கு இருக்கும் 50,000 தொடக்கநிலை (startups) நிறுவனங்களில் 75 யூனிகார்ன்கள் (unicorn - மதிப்பீடு 1 பில்லியன் டாலரை எட்டிவிட்ட ஆரம்பநிறுவனம்) உள்ளன. ஏஞ்சல் முதலீட்டாளர்களும், புதுத்தொழில் முனைவோரும் பெருகி வருகின்றனர். இந்தியாவில் கனவு காணவும், கனவை நனவாக்க முடியும் என்று நம்புவோர் அதிகரித்துள்ளதை இது காண்பிக்கிறது. தொழில், தொழில்நுட்பம், பொருளாதாரம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு இது முக்கியமான குறியீடு.

★★★★★


புத்தாண்டு புலர்ந்துள்ளது. நாட்டை மீளுருவாக்கம் செய்ய, நாம் தொடர்ந்து எழுதி வருவதுபோல, குடிவரவுக் கொள்கை, பணவீக்கம், இறக்குமதி வரிகள், தனிநபர் வரிகள், உடல்நலம், சூழலுக்கு இதமான தூய தொழில்நுட்பம் என்று பல முனைகளிலும் புதுநோக்கோடு கூடிய சீர்திருத்தங்களை நமது அரசு செய்யட்டும். கோவிட்-19 புதுப்புது மாற்றங்களை அடைந்து ஓமிக்ரான்-21 ஆக வடிவெடுத்துள்ளது. இந்த அலை தணியட்டும். ஆறுதலும் தேறுதலும் மனிதகுலத்துக்கு விளையட்டும்.

★★★★★


இளங்கவிஞர் வைரபாரதி ஆன்மீகத்தில் தோய்ந்தவர், திரைப்படக் கவிஞர். மாறுபட்ட நேர்காணல் அவருடையது. மகான் சேஷாத்ரி சுவாமிகள், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு குறித்த கட்டுரைகளும் கதைகளும் இன்னும் பலவும் புத்தாண்டின் இனிமையைக் கூட்ட வருகின்றன. ருசித்து, ரசித்துக் களியுங்கள்.

வாசகர்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

தென்றல்
ஜனவரி 2022

© TamilOnline.com