உறுதிமிக்க ஒரு சீடன் அலைபாயும் ஆயிரம் சீடர்களைவிட மேல்
ஜனக மகாராஜர், நாட்டை ஆளுதல் மற்றும் அதன் தேவைகளைப் பூர்த்தி செய்தல் போன்ற சாதாரண, உலகியல் கடமைகளைச் செய்தபோதிலும் தன் மனதை முழுமையாகக் கடவுளிடமே வைத்திருப்பது அவருக்குச் சாத்தியமாயிற்று என்பதை நாம் அறிவோம். மிதிலாபுரியை ஒட்டியிருந்த காடு ஒன்றில் சுக மகரிஷி தனது சீடர்களுக்குப் பல விஷயங்களைக் கற்பித்துவந்தார். இதை அறிந்த ஜனகர், தானும் சுகருக்குச் சீடராகி அவரது போதனைகளைக் கேட்கவேண்டும் என விரும்பினார். ஜனகர் காட்டுக்குச் சென்று, சுகரை நமஸ்கரித்து, தன்னையும் அவரது சீடர்களில் ஒருவராக ஏற்று, பாடம் கேட்க அனுமதிக்க வேண்டும் என வேண்டினார். அன்றிலிருந்து ஜனகர் சீடர்களில் ஒருவராகவே நடந்துகொண்டார்.

ஒருநாள் ஜனகர் சரியான நேரத்துக்கு வகுப்புக்கு வரவில்லை; சுகர் பாடத்தைத் தொடங்காமல், அவர் வரும்வரை காத்திருந்தார். அந்தக் காரணத்துக்காகவே வகுப்பைத் தாமதப்படுத்துவதாக சுகர் சீடர்களிடம் கூறினார். ஜனகர் வரும்வரை காத்திருக்கும்படிக் கூறியதும் சீடர்கள் ஒருவருக்கொருவர் முணுமுணுத்துக் கொண்டனர். மகரிஷியிடம் சீடராகச் சேர்ந்ததுக்குக் காரணமே அவர் ராஜாவுக்கும் அதிகாரம் கொண்டவர்களுக்கும் எந்த விசேஷ முக்கியத்துவமும் கொடுப்பதில்லை என்று நம்பியதனால்தான் என்று அவர்கள் பேசிக்கொண்டனர். அன்றிலிருந்து குருவின்மீது அவர்கள் கொண்ட நம்பிக்கை வலுவிழக்கத் தொடங்கியது. அவர்களுக்கு ஜனகர் மீதும் பொறாமை ஏற்பட்டது.

சீடர்களிடம் பொறாமை ஏற்பட்டதைக் கண்ட சுகர், அவர்களுக்குப் பாடம் கற்பிக்க எண்ணினார். சரியானதொரு சமயத்தில், மிதிலாபுரி தீப்பிடித்து எரிவதுபோல அவர்களை எண்ண வைத்தார். ஒவ்வொருவரும் இந்த நெருப்பில் என் வீடு என்ன ஆகுமோ என்று எண்ணி, தம்மால் முடிந்ததைக் காப்பாற்றுவதற்காக நகரத்தை நோக்கி ஓடத் தொடங்கினார்கள். ஜனகர் இடத்தைவிட்டு அசையவே இல்லை. அரண்மனைக்கும் தீ பரவியதுபோல இருக்கிறது, போய் அதில் இருப்பவர்களைக் காப்பாற்று என்று சுகர் ஜனகரிடம் கூறினார். கடவுளின் சங்கல்பப்படி நடக்கும், அதை யாராலும் மாற்றமுடியாது என்று நினைத்தபடி ஜனகர் ஒரு புன்னகை பூத்தார். பொறாமை பிடித்த சீடர்கள் நகரத்துக்கு ஓடிப்போய், அங்கே நெருப்பு எதுவும் இல்லை, அது வெறும் மாயத்தோற்றமே என்று கண்டறிந்தனர். அவர்கள் திரும்பி வந்து இதைச் சுகரிடம் கூறினர்.

அவர்கள் ஜனகரின் மனவுறுதியை வியந்து பேசினர். பொறாமை கொண்டிருந்த சீடர்களிடம் சுகர், "கட்டுப்பாடான ஒரு சீடன், அலைபாயும் மனம் கொண்ட ஆயிரம் சீடர்களைவிட மேல்" என்று கூறினார்.

நன்றி: சனாதன சாரதி, ஜூலை 2021

-

© TamilOnline.com