பாரதிமணி
நாடக நடிகர், சமூக சேவகர், எழுத்தாளர், கட்டுரையாளர் என பன்முகப் படைப்பாளியாகத் திகழ்ந்த பாரதி மணி (84) காலமானார். 'பாட்டையா' என்று பலராலும் அன்போடு அழைக்கப்பட்டவர். நாகர்கோவில் அருகே உள்ள பார்வதிபுரத்தில் பிறந்தவர். பணி வாய்ப்பிற்காக டெல்லிக்குப் பயணப்பட்டவர், பாரத் எலக்ட்ரானிக்ஸில் பணியாற்றிக் கொண்டே உயர்கல்வியை முடித்தார். டெல்லி அவருக்குப் பல வாசல்களைத் திறந்துவிட்டது. இலக்கியம், இசை, நாடகம், சினிமா, அரசியல் என்று பல துறை நட்பும் அறிமுகமும் கிடைத்தன. நண்பர்களுடன் சேர்ந்து டெல்லியில் தட்சிண பாரத நாடக சபாவைத் தோற்றுவித்தார். புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நாடகங்கள் பலவற்றை மேடையேற்றினார். தானும் நடித்தார். நாடகத்தில் உடன் நடித்த ஜமுனாவைத் திருமணம் செய்துகொண்டு எழுத்தாளர் க.நா. சுப்ரமண்யத்தின் மாப்பிள்ளை ஆனார். திரைப்படங்களிலும் நடித்தார். பாரதியாரின் வாழ்க்கை வரலாறு படமான பாரதியில், பாரதியாருக்கு தந்தையாக நடித்ததால் 'பாரதி' மணி ஆனார். 'பல நேரங்களில் பல மனிதர்கள்', 'புள்ளிகள், கோடுகள், கோலங்கள்', 'பாட்டையாவின் பழங்கதைகள்' போன்ற நூல்களை எழுதியிருக்கிறார். (பாரதிமணி தென்றலுக்கு அளித்த விரிவான நேர்காணலை வாசிக்க

யாவரிடமும் நட்புடனும் இனிமையுடனும் பழகியவர். இளைஞர்கள் சூழ இருப்பதை விரும்பியவர். எதையும் வெளிப்படையாகப் பேசும் குணம் கொண்டிருந்தார். சில காலமாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாரதி மணி, நவம்பர் 16 அன்று பெங்களூருவில் காலமானார். இவரது விருப்பப்படி மறைவிற்குப் பின் இவரது உடல் செயின்ட் ஜான்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. பாரதிமணிக்கு அனுஷா, ரேவதி என இரு மகள்கள்.

பாரதிமணிக்குத் தென்றலின் அஞ்சலிகள்!

© TamilOnline.com