இசைமேதை காருகுறிச்சி அருணாசலம்
எஸ். ஜானகி அம்மா தனது புல்லாங்குழல் குரலில் "சிங்கார வேலனே தேவா" என்று தொடங்குவார். அடுத்து அந்த வரி அப்படியே - இல்லை, இன்னும் அழகாக - நாகஸ்வரத்தில் ஒலிக்கும். நூறாண்டுகள் கடந்தாலும் மறக்கமுடியாத இந்த நாகஸ்வர இசைக்குச் சொந்தக்காரர் காருகுறிச்சி அருணாசலம். இந்தப் பாடல் ஒன்றே போதும் 'கொஞ்சும் சலங்கை' என்ற படத்தை என்றும் இனிப்பாக நினைத்துப் பார்ப்பதற்கு.

"அருணாசலத்துக்கு மிக இனிய குரல். அற்புத சாரீரம். நாகஸ்வரத்தில் போடும் எந்தச் சங்கதியும் அவர் வாய்ப்பாட்டில் பேசும். இவ்வளவு சாரீர வளத்துடன் சிரம சாத்தியமான பிடிகளையும் அனாயாசமாகப் பிடித்துக் கற்பனைப் பெருக்குடன் வாய்ப்பாட்டுச் சங்கீதத்தில் ராகாலாபனம் செய்யக்கூடியவர்கள் எனக்குத் தேர்ந்த வரையில் ராஜரத்தினம் பிள்ளை, விளாத்திகுளம் நல்லப்பசாமி பாண்டியன், எம் எஸ் சுப்புலக்ஷ்மி போன்ற சிலரே" என்று பாராட்டுபவர் கு. அழகிரிசாமி. அழகிரிசாமி மட்டுமல்ல; கி. ராஜநாராயணன் உள்ளிட்ட பிற எழுத்தாளர்களாலும் விதந்தோதப்பட்டவர் நாகஸ்வர மாமேதை காருகுறிச்சி அருணாசலம். இவர், 1921ல், நெல்லை, அம்பாசமுத்திரம் அருகே உள்ள காருகுறிச்சியில், பலவேசம் பிள்ளை, செல்லம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை நாகஸ்வர வித்வான். கோயில்களுக்கும் கச்சேரிகளுக்கும் வாசிப்பவர். ஆனால், அதனை அவர் தொழிலாகச் செய்யும் சூழல் அமையவில்லை. நெல் தானியம் அளந்து அளிப்பதே அவரது பணியாக அமைந்தது. அதேசமயம், சிறந்த நாகஸ்வர வித்வானாக வரவேண்டும் என்ற ஆசையும் ஏக்கமும் இருந்தது. அது நிறைவேறாத சூழலில், தன் மகன் அருணாசலத்தைச் சிறந்த நாகஸ்வர வித்வான் ஆக்க எண்ணினார். அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார். பத்து வயதில் களக்காடு சுப்பையா பாகவதரிடமும், நாராயண பாகவதரிடமும் வாய்ப்பாட்டு கற்க அனுப்பப்பட்டார் அருணாசலம். தொடர்ந்து சுத்தமல்லி சுப்பையா கம்பரிடம் நாகஸ்வரம் கற்றார். கடும் பயிற்சி மேற்கொண்டு வித்வானாகப் பரிணமித்தார் என்றாலும் மேலும் கற்கும் ஆர்வம் அவருக்கிருந்தது.



ஒரு சமயம் ஊருக்கு வந்திருந்த நாகஸ்வரச் சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளையுடன் வாசிக்கும் சூழல் அமைந்தது. இளைஞன் அருணாசலத்தின் திறமையை உடனே உணர்ந்து கொண்டார் ராஜரத்தினம் பிள்ளை. கச்சேரி முடிந்ததும் பலவேசம் பிள்ளை, ராஜரத்தினம் பிள்ளையிடம் தன் மகனுக்குக் கற்பிக்கும்படி வேண்டிக் கொண்டார். பிள்ளையும் இசைந்தார். ராஜரத்தினம் பிள்ளையிடம் சீடராகச் சேர்ந்தார் அருணாசலம். குருகுலவாசம் செய்தார். பிள்ளை வாசிப்பதைக் கேட்டும், அவர் கச்சேரிகளைக் கேட்டும், சேர்ந்து வாசித்தும் நாகஸ்வர நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார். இக்காலகட்டத்தில் அவருக்கு ராமலக்ஷ்மியுடன் திருமணம் நிகழ்ந்தது. மணம் முடிந்த பின்னரும் குருகுலவாசம் தொடர்ந்தது. நாளடைவில் தேர்ந்த நாகஸ்வர இசைக் கலைஞராகப் பரிணமித்தார் அருணாசலம்.

குருவின் ஆசியுடன் தனியாகக் கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தார். ராக ஆலாபனையாலும், அரிய கீர்த்தனைகளை விரிவாக வாசித்தும் விரைவிலேயே குருவுக்கு நிகரான சீடர் என்ற பாராட்டைப் பெற்றார். அவரது நாகஸ்வரத்திலிருந்து வரும் ஒலிக்கு ஒரு தெய்வீகத் தன்மை இருப்பதாக ரசிகர்கள் கருதினர். மயங்கினர். அதற்கு அவரது வாசிப்பும், வாய்ப்பாட்டுப் பயிற்சியும், மேதைமையுமே காரணம். இவரது நண்பரும், எழுத்தாளருமான கு. அழகிரிசாமி, "குருமலையில் 1946ல் அருணாசலத்தின் ஷட்டகரான நாகஸ்வர வித்வான் பொன்னுசாமிப் புலவரின் தம்பிக்குத் திருமணம் நடைபெற்றபோது அருணாசலம் வந்திருந்தார். அப்போது கல்யாண வீட்டில் நண்பர்களாகிய நாங்கள் அருணாசலத்தைப் பாடும்படிக் கூறினோம். நடபைரவி ராகத்தைச் சுமார் ஒன்றரை மணி நேரம் பாடினார். பாடிய பிறகு, 'வாய்ப்பாட்டுக் கச்சேரி செய்யவும் எனக்கு ஆசைதான். நாகஸ்வர வாசிப்பில் மட்டுமே கவனம் செலுத்தாமல் வாய்ப்பாட்டுக் கச்சேரியும் செய்தால் எங்கள் வாத்தியார் கோபிப்பார்,' என்று சொன்னார் அருணாசலம். இதனால்தான் அருணாசலம் வாய்ப்பாட்டு கச்சேரி செய்யவே இல்லை. தான் பாடுவதைக்கூட குருநாதர் அறியாமல் மறைத்துக் கொண்டார்" என்று காருகுறிச்சியாரின் வாய்ப்பாட்டு மேதைமை குறித்துச் சொல்கிறார்.



சென்னையில் சங்கீத சபையில் நடந்த காருகுறிச்சியின் கச்சேரியை ரசித்துக் கேட்ட கல்கியும், பெ. தூரனும், புல்லாங்குழல் மாலியும் வெகுவாகப் பாராட்டினர். கல்கி இதழில் ஈ. கிருஷ்ணய்யர் இக்கச்சேரி குறித்து விரிவாக எழுதியிருந்தார். அது காருகுறிச்சியின் மேதையைப் பலரும் அறியக் காரணமாயிற்று. தலைக்கனம் இல்லாமல், அதே சமயம் 'கலைஞன்' என்பதற்குரிய கௌரவத்தையும் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்தவர் காருகுறிச்சியார். பெரிய பெரிய ஜமீன் கச்சேரிகளில் மட்டுமல்லாமல், சாதாரண குக்கிராமக் கோயில்களிலும் அவரது நாகஸ்வரம் ஒலித்தது. நேரந்தவறாமை, வாய்மை அவருக்கு மக்களிடையே நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அர்ப்பணிப்பான வாசிப்பும் மேதைமையும் அவரது கலைத்திறன் சுடர்விடக் காரணமாயின.

கனகாங்கி, ரத்னாங்கி, சந்திரஜோதி, வகுளாபரணம், நாமநாராயணி போன்ற அரிய ராகங்களை வாசிப்பதில் வல்லவர். நாதபைரவி, கரஹரப்ரியா, பந்துவராளி, சண்முகப்ரியா, நாதா மற்றும் கௌளை ஆகியவை அவருக்குப் பிடித்த ராகங்களாகும். இவரது கச்சேரிக்குப் புகழ்பெற்ற கலைஞர்களான கும்பகோணம் தங்கவேல், வடபாதிமங்கலம் தட்சிணாமூர்த்தி, யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி, நீடாமங்கலம் சண்முக வடிவேல் உள்ளிட்டோர் தவில் வாசித்துள்ளனர்.

திருமணமாகி ஏழெட்டு வருடங்களாகியும் குழந்தைகள் இல்லை என்ற ஒரு குறை அருணாசலத்துக்கு இருந்தது. இதனால் முதல் மனைவி வீட்டாரின் சம்மதத்தோடும் உதவியோடும் குருமலைக் கந்தசாமிப் புலவரின் மகளைத் திருமணம் செய்துகொண்டார். மகவுகளும் வாய்த்தன. புதிதாக வீடு கட்டி அதற்கு 'ராஜரத்தின விலாஸ்' என்று பெயரிட்டார். கிரகப் பிரவேசத்துக்கு ராஜரத்தினம் பிள்ளை வந்து கச்சேரி வாசித்து சீடனை கௌரவப்படுத்தினார்.



காருகுறிச்சி அருணாசலத்தின் இசை மேதைமை குறித்து, "நாயனம் வாசிக்க சீவாளி உதட்டில் உட்கார்ந்தவுடன், காந்தம்போல் ஒட்டிக்கொள்ளும். கொஞ்ச சத்தமும் வெளியில் போகாமல், பிசிறு இல்லாமல் வாசிப்பார். அவர் நாகசுரத்தை வைத்துக்கொள்கிற பாங்கே, பார்ப்பதற்கு கம்பீரமாக இருக்கும். அவர் எந்தச் சுரத்தைத் தொட்டாலும் ஜீவன் பேசுகிற மாதிரிதான் அமைந்தது. வயலின், வீணைக்குரிய இசையை நாகசுரத்தில் மீட்டுவார். அந்த வாசிப்பு ஷெனாய் வாசிக்கிற மாதிரி, பிஸ்மில்லா கான் வாசிப்பதுபோல் மெல்லினமாக வாசித்து மக்களை மயக்கி உட்கார வைத்துவிடுவார்" என்கிறார், கிளாரிநெட் ஏ.கே.சி. நடராஜன். தனது சிஷ்யரின் பரம ரசிகரான ராஜரத்தினம், ஒருமுறை, தி. நகரில் நடந்த கோவில் கச்சேரியின்போது, காருகுறிச்சியார் வாசித்த ஹுசேனி ராக ஆலாபனையைக் கேட்க சாலையிலேயே அமர்ந்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. ஒருமுறை, சென்னை தமிழிசைச் சங்க இசை விழாவில் நடைபெற்ற அருணாசலத்தின் நாகஸ்வரக் கச்சேரியை வானொலி நிலையத்தினர், வழக்கத்துக்கு மாறாக, நள்ளிரவு 12 மணி வரையிலும் நேரடியாக ஒலிபரப்பியது இவரது திறமைக்கும், பெருமைக்கும் சான்று. காருகுறிச்சி அருணாசலத்தின் 'மகுடி' வாசிப்பு மிகவும் புகழ்பெற்றது.

தினந்தோறும் தொடர்ந்து பல மணி நேரம் சாதகம் செய்யக் கூடியவர். அந்தத் தொடர் சாதகமே அவரது மேதைமைக்கும், இனிய வாசிப்புக்கும் அடிகோலின. இவரது இசையின் சிறப்பு பற்றி இசை ஆய்வாளர்கள், "இசை உருக்களை முறையான பாடாந்திர அமைப்பில் வாசிப்பது; ராக ஆலாபனையில் சங்கதிகளைத் தொடர்ந்து இடைவிடாது வாசிப்பது; விறுவிறுப்புடன் ஆலாபனையை அமைத்துக்கொள்வது; அடிக்கடி குழைவு சங்கதிகள் கொடுத்து வாசிப்பது; ஒவ்வொரு ராகத்திலும் ஒரு சுரத்தை மெல்லிய ஒலி வெளிப்பாட்டில் வாசிப்பது; இசை உருக்களில் சில பகுதிகளைக் காலப்ரமாணம் கூட்டி வழங்குவது; கற்பனை சுரப்பகுதியில் இடையிடையே காலப்ரமாணத்தைக் கூட்டி வாசிப்பது" என்று பலவாறாக மதிப்பிடுகின்றனர்.



பாமர மக்களிடம் நாகஸ்வர இசையைக் கொண்டு சேர்த்தவர்; சாதாரணர்களையும் நாகஸ்வரத்தின் மீது நாட்டம் கொள்ள வைத்தவர் என்ற சிறப்பு ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி அருணாசலம் இருவருக்குமே உண்டு. நேரு, இந்திரா காந்தி, காமராஜர் ஆகியோர் முன்னிலையில் நாகஸ்வரம் வாசித்த பெருமை இவருக்குண்டு.

1964 ஏப்ரல் 8 அன்று, தனது 43ம் வயதில் காருகுறிச்சி அருணாசலம் காலமானார். கோவில்பட்டி கடலையூர் சாலையில் அரசு அவருக்கு அளித்த நிலத்தில் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவாகச் சிலை ஒன்றும் அமைக்கப்பட்டது. 2021ம் ஆண்டு அவரது நூற்றாண்டு.

நாகஸ்வர இசையால் தமிழர் கலாசாரத்துடனும் வாழ்வியலுடனும் பின்னிப் பிணைந்திருக்கும் மாமேதை காருக்குற்ச்சி அருணாசலம் தமிழர்கள் மறக்கவொண்ணாத முன்னோடிகளுள் ஒருவர்.

பா.சு.ரமணன்

© TamilOnline.com