தென்றல் பேசுகிறது...
அமெரிக்க மக்கள் முப்பதாண்டுக் காலமாகப் பார்த்திராத 6.2% பணவீக்கத்தில் தத்தளிக்கின்றனர். பொருட்களுக்குத் தட்டுப்பாடு, மிகையான விலையேற்றம் என்று இதைப் புரிந்துகொள்ளலாம். கோவிட் அல்லது கோவிட் அலைகளைத் தொடர்ந்து அரசு கொடுத்த நிவாரண நிதியால் மட்டுமே இப்படி ஆனதென்று சொல்லிவிட முடியவில்லை. சீனப் பொருட்களைத் தருவிக்க விதிக்கப்பட்ட வரிகள் ஒரு முக்கியக் காரணம். பல நாடுகள் சீனாவில் நடத்தி வந்த உற்பத்திக் கூடங்களை வேறு நாடுகளுக்கு நகர்த்துவதில் ஈடுபட்டுள்ளன. அப்படிப் போகுமிடத்தில் தொழிற்சாலைகளை நிறுவி, உற்பத்தியைச் சரளமாக்கச் சில ஆண்டுகள் பிடிக்கும். அதில் வெற்றி பெற்றாலும், சீனாவின் அடிமட்ட உற்பத்தி விலைக்கு இணையாக வேறெந்த நாடும் தரமுடியாது. மறுபக்கம், கெடுபிடியான குடிவரவுக் கொள்கையின் காரணமாக அமெரிக்காவில் வேலைக்கு ஆள் கிடைக்காமல் போய்விட்டது. குறிப்பாக, ட்ரக் ஓட்டுநர் தட்டுப்பாடு, பொருள் விநியோகத்தின் மென்னியைப் பிடித்து விட்டதைப் பார்க்கிறோம். அதிகச் சம்பளம் கொடுத்தாலும் வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை. போதாக் குறைக்கு வட்டி விகிதம் ஏறிக்கொண்டிருக்கிறது. இந்த இடியாப்பச் சிக்கலைத் தீர்க்க அரசு பொருளாதார, தொழில்துறை மேதைகளைக் கொண்ட மேல்மட்டக் குழு ஒன்றை அமைத்து, தேவையான நடவடிக்கையை விரைந்து எடுத்தாக வேண்டும்.

★★★★★


மாநில மற்றும் உள்ளூர் வரிகளைச் (State and Local taxes - SALT) செலுத்திய பிறகு, அந்தத் தொகைக்கும் சேர்த்து ஐக்கிய வரி (Federal tax) விதிக்கப்படுகிறது. முன்னர் செலுத்திய வரி எவ்வளவானாலும், தற்போது $10,000 மட்டுமே விலக்குப் பெறுகிறது. இது குறைவானது மட்டுமல்ல, மிக அநியாயமானதும் ஆகும். இதை ஓரளவு சரிசெய்யும் Build Back Better சட்டம் காங்கிரஸின் ஒப்புதல் பெற்று செனட் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. இது அமலுக்கு வந்தால் முன்னரே கட்டப்பட்ட வரித்தொகையில் $80,000 வரை மத்திய வரிவிலக்கு கிடைக்கும். செனட் இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் தந்து, மிகையான வரி வசூலில் துயருறும் மக்களுக்கு நிவாரணம் தரவேண்டும்.

★★★★★


சிவஸ்ரீ ஸ்கந்தப்ரசாத் வளர்ந்துவரும் இசைக்கலைஞர். சம்பிரதாய நாம சங்கீர்த்தனம், ஓவியம், பரதநாட்டியம் என்று பலவற்றிலும் மிளிர்ந்துகொண்டிருப்பவர். பாரம்பரியக் கலைகளை வரும் தலைமுறைகளுக்குக் கொண்டு சேர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்த இதழின் நேர்காணலில் இவருடைய அர்ப்பணிப்பைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. யோகி ராம்சுரத்குமார், காருகுறிச்சி அருணாசலம், கோவி. மணிசேகரன் ஆகியோரின் வாழ்க்கைக் குறிப்புகள் வாசிப்பவர் வாழ்க்கைக்கும் செறிவூட்டுபவை. முத்தான இரண்டு கிறிஸ்துமஸ் சிறுகதைகளும் உண்டு. வாருங்கள் வாசகரே, உங்களுக்காக இதோ திறக்கிறது தென்றலின் மணிக் கபாடம்.

வாசகர்களுக்குத் ஆருத்திரா தரிசனம், கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

தென்றல்
டிசம்பர் 2021

© TamilOnline.com