லக்ஷ்மணர் குகனுக்குக் கூறிய அறிவுரை
ராமர், லக்ஷ்மணர், சீதை ஆகியோர் வனவாசத்தின் பொருட்டு அடர்ந்த காட்டுக்குள் நுழைந்த முதல் நாள் அது. நதிக்கரையில் ராமரும் சீதையும் உறங்கிக்கொண்டிருந்தனர். அவர்களைத் தனது படகில் கங்கையின் மறுகரைக்குக் கொண்டு சென்ற மீனவர் தலைவன் குகன் தாழ்ந்த குரலில் லக்ஷ்மணரோடு பேசிக்கொண்டிருந்தான். சாம்ராஜ்யத்தை ஆளவேண்டியவர் வானமே கூரையாக மண்ணில் கிடந்து உறங்குகிறாரே என்று குகன் பெரும் துக்கத்தில் இருந்தான். இதயத்தைப் பிளக்கும் இந்தச் சோகத்துக்குக் காரணமான ராணியையும் அவளது கொடிய தோழியையும் சபித்தான்.

அப்படிச் சபிக்காதே என்று லக்ஷ்மணர் கூறினார். "நானும் இப்படித்தான் நெருப்பைக் கக்கிக் கொண்டிருந்தேன். காரணம், ராம சரிதத்தின் இந்த அத்தியாயத்தின் உட்பொருள் எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. தீய அரக்கர் கூட்டத்தை அழிப்பதற்காக அவர் வந்துள்ளார். இந்த லட்சியம் நிறைவேறும்வரை ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகி இருப்பதற்காகச் சாமர்த்தியமாக அவரேதான் இந்த வனவாசத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். குகனே! இறைவனின் மர்மங்களையோ, அல்லது இறைவனே மனித உடலில் வந்துள்ளதன் மர்மங்களையோ நாம் எவ்வாறு அறிவோம்? ஜடம் அல்லது ஜீவராசிகளின் மர்மத்தைத்தான் அறிவோமா? அவையும் நமது சிறிய புலன்களுக்கு அப்படித் தோன்றுகிற, ஆனால் அறிதற்கரிய தெய்வீகமே அன்றோ! இத்தகைய திறனற்ற அறிவுக் கருவிகளை வைத்துக்கொண்டு நம்மால் அவற்றின் மெய்யியல்பை என்றேனும் அறியத்தான் கூடுமா?" என்றார் லக்ஷ்மணர்.

நன்றி: சனாதன சாரதி, ஜூன் 2021

பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா

© TamilOnline.com