எங்கிருந்தோ வந்த விதை
அத்தியாயம் - 11
பள்ளிக்கூட வளாகத்தில் நடந்த கூட்டத்தில் எல்லோரும் சட்டத்தை மாற்றவேண்டும் என்று வீரமுழக்கம் செய்தார்கள். சட்டத்தை மாற்ற என்னவெல்லாம் சட்டபூர்வமான வழிகள் உண்டோ அதை எல்லாம் செய்யவேண்டும் என்று முழங்கினார்கள். புதிய சட்டத்தை அமல்படுத்த, வரும் தேர்தலில் ஒரு வாக்குப்பதிவு கொண்டுவரத் தேவையான கையெழுத்துகளை அங்கிருந்தவர்கள் மனுவில் போட்டார்கள். ஊர்த் தேர்தலில் ஹோர்ஷியானா போன்ற தனியார் நிறுவனங்களின் அட்டூழியங்களுக்கு மக்கள் முடிவு கட்டட்டும் என்று முடிவெடுத்தார்கள். பள்ளித் தலைமையாசிரியர், மறுநாள் மேயரிடம் சென்று தானே மனுவைக் கொடுக்கப்போவதாக அறிவித்தார்.

சூஸன் சாராவை அழைத்துக்கொண்டு கிளம்பினார். அவருக்கு அன்றைய தினம் நடந்தது என்னதான் மகிழ்ச்சியாக இருந்தாலும், இருக்கும் சட்டத்தை மீறமுடியாதே என்ற கவலை இருந்தது. வக்கீல் நோட்டீஸிற்கு அவர்கள் பதில் அளித்துத்தானே ஆகவேண்டும்.

★★★★★


அருண் திரும்பி வரும்போது வளவளவென்று அம்மாவிடம் பேசிக்கொண்டே வந்தான். எப்படி முகநூலில் இடுகை இட்டான், எப்படி அதற்கு பெற்றோர்கள் அமோக ஆதரவு தந்தார்கள் என்றும் அளந்தான். கீதாவுக்கு சாராவின் குடும்பம்பற்றிக் கொஞ்சம் கவலையாகத்தான் இருந்தது.

"பாரு பாரு, நாம எப்படியாவது இந்த ஹோர்ஷியானா கேஸ வாபஸ் பண்ண வச்சிருவோம். இன்னிக்கு வந்த கூட்டம் பார்த்து பயந்து போயிருப்பாங்க."

அருண் சொல்லிக் கொண்டிருந்த பொழுது சில முரடர்கள் வேண்டுமென்றே அருணையும் கீதாவையும் நோக்கி நடந்து வந்தனர். கீதா சற்று மிரண்டு போனார்.

"என்னம்மா, பொடியன் பெரிய கட்சித் தலைவன் மாதிரி கூட்டம் கூட்டிப் பேசாறாப்ல இருக்கு. கொஞ்சம் வயசுக்கு ஏத்த மாதிரி இருக்கச் சொல்லுங்க. சரியா? வக்கீல், சட்டம் இதெல்லாம் பெரியவங்க சமாச்சாரம், புரியுதா?" முரடர்களில் ஒருவன் மிரட்டனான்.

"டே பொடியா, ஒழுங்கா படிக்கறத விட்டுப்புட்டு உனக்கு என்னடா புரட்சி வேலை எல்லாம்? உங்க அம்மா எங்க அய்யாகிட்ட வேலை பாக்கிறாங்க புரிஞ்சுதா?" இன்னொரு முரடன் சொன்னான். அவர்கள் சிரித்தபடியே அங்கிருந்து போனார்கள்.

கீதா அருணை இறுகப் பிடித்தபடி நின்றார். அவருக்கு வியர்த்துக் கொட்டியது. வேகவேகமாக அருணை இழுத்துக்கொண்டு நடந்தார். அருண் வீடு போய்ச் சேரும்வரை ஒன்றுமே பேசவில்லை. கீதா அவசர அவசரமாக கதவைத் திறந்து உள்ளே போனார்.

"அருண், உள்ளே வா சீக்கிரம். அப்பா வேற ஊருல இல்லை."

தபால் பெட்டியில் உறை ஒன்று இருப்பது அருணுக்குத் தெரிந்தது. படாலென்று பாய்ந்து அதை எடுத்துக்கொண்டான். அம்மா திரும்பக் கூப்பிடுமுன் வீட்டின் உள்ளே சென்றான்.

நெஞ்சு படபடக்கப் பார்த்தான், அவன் பெயருக்குத்தான் வந்திருந்தது. தனக்கு மர்ம மனிதனின் கடிதம் வந்திருக்கிறது என்று அவனுக்குப் புரிந்துவிட்டது. பிரித்தான். கவரின் உள்ளே கடிதத்தோடு ஒரு SD-Card இருந்தது. இதுவரைக்கும் வந்த கடிதங்களில் SD-Card இருந்ததில்லை. இதுவே முதல்முறை.

கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தான் அருண். ஒருவிதமான எதிர்பார்ப்பு அவனிடம் இருந்தது.

அன்புள்ள அருணுக்கு,
நான்தான் மீண்டும் எழுதுகிறேன். உனது அருமை நண்பி சாரா குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சங்கடத்தை அறிந்தேன். என்ன அயோக்கியதனம்டா இது. தானே வளர்ந்த செடி, உரிமம் அது இதுன்னு ஒரு பாவமும் அறியாத அந்த குடும்பத்தை என்ன பாடு படுத்திட்டாங்க. அருண், சட்டம் இந்த ஹோர்ஷியானா அயோக்கிய பயலுக பக்கம் இருக்கு. அதான் இப்படி எல்லாரையும் மிரட்டரானுங்க. எதிர்த்துக் கேட்க ஆளு இல்லைன்னா இப்படித்தான் திமிரு பிடிச்சு அலைவானுங்க.

இந்தச் சட்டங்கள் என்ன ஒரு கிறுக்குத்தனமானவைன்னு இப்பத்தான் எனக்கும் தெரியுது.

காத்துல பறந்து வந்து விழுந்தாக்கூட சட்டத்துக்கு கவலை கிடையாதாம். நஷ்ட ஈடு கொடுக்கணுமாம். சட்டமாம் சட்டம்! ஹோர்ஷியானா போன்ற நிறுவனங்கள் எவ்வளவோ செலவு பண்ணித்தான் இந்த மாதிரி உரிமம் எல்லாம் செய்யறாங்க. அதுக்காக, இப்படியா காசு சம்பாதிக்கறது? ஏன் இப்படி சாரா குடும்பம் மாதிரி ஆளுங்களத் துன்புறுத்தறாங்க?

அப்புறம் அருண், இந்த SD-Card எதுக்குன்னு யோசிக்கறயா? அதுலதான் கூத்தே இருக்கு. எனக்கு எதேச்சையா ஒரு விடியோ கிடைச்சுது. இந்த ஹோர்ஷியானா ஆளுங்க படா ஆளுங்க பா. அவங்க யாருக்கும் தெரியாமா சாரா வீட்டு பின்புறத்துல அவங்களோட உரிமம் பதிவு பண்ணின விதைகளைத் தூவிட்டு போயிட்டாங்க. அதுல வந்த செடிதான் இந்த பிரச்சினைக்கு எல்லாம் காரணம். இது ஹோர்ஷியானா வேண்டுமென்றே செய்த வேலை. காத்துல வந்து விழுந்து முளைச்சது கிடையாது அந்தச் செடி.

உன்கிட்ட இருக்கிற SD Card-ல எல்லாம் அப்பட்டமா பதிவாயிருக்கு. சாராவீட்டு பக்கத்துல யார் வீட்டுலையோ செக்யூரிட்டி கேமராவுல இது பதிவாயிருக்கு. இப்ப சட்டம் நம்ம பக்கம், அதாவது சாரா குடும்பத்தின் பக்கம். இதைக் காட்டி சாரா அப்பா, அம்மா பதில் வழக்கு போடலாம். கன்னாபின்னான்னு ஹோர்ஷியானா கிட்ட நஷ்ட ஈடு கேட்கலாம். ஹோர்ஷியானாவைத் தெருவுக்கு இழுத்து அவமானப் படுத்தலாம்.

எதுக்கு சாரா வீடு, ஏன் மத்த வீடுகள் இல்லைன்னு நினைக்கிறயா? சாராவோட அப்பா, டேவிட் ராப்ளே கூட ஏதோ சண்டை போட்டிருக்காரு போல. இது நடந்து ரொம்ப நாள் ஆச்சு. ஆன ராப்ளே அதை மறக்கவே இல்லை. சாராவோட அப்பாவுக்கு ஒரு பெரிய பாடம் கற்பிக்க இப்படி ஒரு சதி பண்ணிருக்கான்.

இனிமே என்ன பண்ணணும்னு நான் சொல்ல வேண்டியதில்லை. நம்மகிட்ட வலுவான ஆதாரம் இருக்கு. ஒரு கிழி கிழிச்சிடு. அப்புறம், நீ அசகாய சூரனப்பா! ஒரே நாளுல எப்படிப்பா இவ்வளவு பேரை கூட்டம் கூட்டிட்ட? The power of social media, I guess! உன்னை மாதிரி இதை ஒரு நல்ல ஆயுதமாக உபயோகிக்க எல்லாச் சிறு வயதினரும் கற்கட்டும். உனக்கு என் ஆசிகள்.

இப்படிக்கு,
உன் அபிமானி

(தொடரும்)

ராஜேஷ்

© TamilOnline.com