மாமி யார்? மாமியார்?
நானும், என் கணவரும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது காதலித்தோம். பிறகு நாங்கள் 10 வருடமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல், எந்த கடிதப் போக்குவரத்தும் இல்லாமல் வாழ்ந்து வந்தோம். திடீரென்று ஒருநாள் அவராகவே என்னைச் சந்திக்க வந்திருந்தார். என் மனதிலும் அவரைப் பற்றிய நினைவுகள் மட்டுமே இருந்ததால் நானும் சந்தித்தேன். அவர் கிறிஸ்தவர். நான் ஓர் இந்து.

அவர் ஒரே பையன் என்பதால் என் மாமனார், மாமியார் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார்கள். எனது பெற்றோர் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. நானும் எவ்வளவு முயற்சி செய்தும் என் அப்பாவின் மனத்தை மாற்ற முடியவில்லை. கடைசியில் என் அம்மா சலித்துப்போய் என் காதலை ஏற்றுக் கொண்டார்கள். அவருடைய வீட்டார் என்னைப் பெண் பார்க்க வந்தபோது என் கணவரின் மாமா "உங்கள் பெண் கட்டின சேலையுடன் வந்தால் போதும். நாங்கள் 100 பவுன் போடுவோம்" என்று சொல்லவே, அப்பா என் திருமணத்தின் போது எந்த நகையும் போடமாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

திருமணம் நல்லபடி சர்ச்சில் நடைபெற்றது. திருமணமான முதல் நாளே என்னுடைய மாமியார் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டார். காரணம், நான் நகை போட்டு வரவில்லை என்பதுதான். திருமணம் ஆன அடுத்த நாளே என் கணவருடன் வெளியில் எங்கும் போகக்கூடாது, அறையில் தனியாக இருவரும் அமர்ந்து சிரிக்கக் கூடாது, வண்டி எடுத்துக் கொண்டு போனால் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் வீட்டில் இருக்க வேண்டும் என்றெல்லாம் கட்டளை போட ஆரம்பித்தார். இதற்கு என் கணவரும் 'நாம் சேர்ந்து இருந்தால் அம்மா செத்துவிடுவார்' என்று நாங்கள் படுக்கும் அறையின் கதவைத் திறந்து வைத்துத் தூங்குவார். சினிமா, கோவில் என்று ஒரு இடத்துக்கும் என்னை அழைத்துப் போகவில்லை. தேனிலவுக்குப் போகக்கூட அனுமதி தரவில்லை. போனால் உடம்பு இளைத்துப் போய்விடுமாம்!

இந்த நேரத்தில் அமெரிக்காவுக்கு வர வாய்ப்புக் கிடைத்தது. திருமணமாகி 1 மாதம் கூட ஆகவில்லை. என் மாமியாருக்குப் பித்தப்பையில் கோளாறு ஏற்படவே மருத்துவரிடம் காண்பித்து அதை எடுக்க ஆபரேஷன் நடந்தது. என்னைத் தன் அம்மாவைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு அவர்மட்டும் இங்கு வந்துவிட்டார். நான் என் மாமியாருக்குச் சிறுநீர் அகற்றுவதிலிருந்து எல்லா வேலைகளையும் முகம் சுளிக்காமல் செய்தேன். உணவு மருந்து எல்லாம் சரியாகக் கொடுத்தேன். மருத்துவரே 'நீ அவங்க பொண்ணா?' என்று கேட்கும் அளவுக்கு கவனித்துக் கொண்டேன்.

விளைவு, என்னை நான்கு மாதங்களாகக் கொடுமைப்படுத்தினார்கள். "தெய்வமே இல்லை. அந்த மாதா இருந்திருந்தால் இப்படிக் கல்யாணம் நடக்கவிட்டிருப்பாளா?" என்று வீட்டிற்கு வருவோர் போவோர் எல்லாரிடமும் சொல்ல ஆரம்பித்தார். என் மீது திருட்டுப் பழி சுமத்தினார்கள். இத்தனைக்கும் என் மாமனார் காவல் துறையில் பணிபுரிபவர். என்னை இங்கு அனுப்பி வைக்கவே அவர்களுக்கு மனம் வரவில்லை. போனால் எங்கே மகனை மாற்றிவிடுவாளோ என்ற பயம். ஆனால் என்னுடைய பெரும் முயற்சியினால் பாஸ்போர்ட் எடுத்து இங்கு வந்தேன்.

இங்கு என் கணவரிடத்தில் நடந்த விஷயங்களைத் தருணம் வந்தபோது சொன்னேன். ஆனால் என் கணவரோ அதைப் பொருட்படுத்தவே இல்லை. என்னைச் சமாதானப்படுத்தினார், தன் அம்மாவை எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. இங்கு வந்த பிறகும் அவர் எங்கேயும் என்னை அழைத்துக் கொண்டு போனதில்லை. வீட்டிலேயே பைத்தியம் போல் 6 மாதம் அடைபட்டுக் கிடந்தேன். பணம் சேர்க்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு என்னுடைய சந்தோஷமான நாட்களை இழந்து கொண்டிருந்தேன்.

ஆறு மாதம் கழித்துத் திரும்பவும் சென்னைக்குச் சென்றிருந்தோம். அப்போது என் கணவர் இல்லாத நேரத்தில் என்னைக் கொடுமைப்படுத்தினார்கள். குழந்தை இல்லை என்ற காரணத்துக்காக அசிங்கமாகப் பேசினார்கள். அங்குச் சென்ற இரண்டாவது மாதத்தில் கருத்தரித்தேன். ஏழு மாதங்கள் ஆயிற்று. என் வீட்டில் வளைகாப்பு வைத்து 50 பவுன் நகை போட்டு என்னை அழைத்துச் சென்றனர். திருமணமாகி நான்கு வருடங்களில் நான் சந்தோஷமாக இருந்தது அப்போதுதான்.

வளைகாப்பு முடிந்த கையுடன் என் கணவர் இங்கு வந்துவிட்டார். எனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தான். மூன்று மாதம் கழித்து அவனுடன் நான் அமெரிக்கா வந்தேன். இதைவிடப் பெரிய விஷயம் என்னவென்றால என் மாமியாரின் அம்மா, தன் மருமகளையும், பேரனையும் பைத்திய மாக்கி உள்ளார்கள். இப்போது இருவரும் மனநோய் மருத்துவமனையில்.

என்னுடைய கணவரோ தன் அம்மாவை மாற்றிவிடுவேன் என்று என்று என்னிடத்தில் சொல்வதால் எங்களுக்குள் தினமும் பிரச்சனைதான். மாமியாரை இங்கு கூட்டி வருவேன் என்றும், சென்னைக்குப் போனாலும் இருவரும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். மாமியார் சமையல்கூடத் தானேதான் செய்வார். ஆனால் வெளியில் என்னைப் பற்றி மட்டமாகப் பேசுவார். 'என் அம்மா உன்னிடத்தில் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ள மாட்டார்கள், நீயும் அவங்களிடத்தில் எதுவும் பேசக் கூடாது' என்று சொல்கிறார். இதனால் எங்களுக்குள் எப்போதும் பிரச்சினைதான். விவாகரத்து வரைக்கும் கூடப் போய் விடுகின்றது. என் குழந்தை இதை எல்லாம் பார்த்து அழுகின்றான். ஆனால் எனக்கு என் குழந்தை மற்றும் அவன் எதிர்காலம் முக்கியமாகப் படுகின்றது.

என் கணவர் கடந்த ஆண்டு விடுமுறைக்குப் போனபோதுகூட கதவைச் சாத்தவில்லை. அப்படியே கதவைச் சாத்திப் படுத்தால் என் மாமியார் சமையலறைக்குச் சென்று படுத்துக் கொள்கிறார். இதையெல்லாம் பார்த்துவிட்டு விவாகரத்துச் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளேன். 'நீயும் பிள்ளையும் வேண்டாம். என் அம்மா, அப்பா கூட இருந்து கெள்கிறேன்' என்று அவர் சொல்லிவிட்டார்.

எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மாமியார் என்னுடன் இருந்தால் என்னிடமிருந்து கணவரையும், மகனையும் பிரித்துவிடுவார்கள். என் மனநிம்மதி போய்விடும். கிட்டத்தட்ட 'மெட்டி ஒலி' மாமியார் தான். ஆனால் என் கணவர் அப்படியே அம்மாபிள்ளை.

என்னுடைய கணவரை எப்படி மாற்றுவது? அல்லது நானும், என் பிள்ளையும் அவரைப் பிரியத்தான் வேண்டுமா? நான் செய்யப் போவது பாவமா? அல்லது நியாயமா? உங்களை பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும்

உங்கள் அன்பு சகோதரி...


அன்புள்ள சிநேகிதியே:

திருமணமான புதிதில் உங்கள் மாமியாருக்கு 'அறுவை சிகிச்சையின்' போது அவரை நன்றாக கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர் உங்களை சிறிது பாசத்துடன் நடத்தியிருக்கலாம். உங்கள் தன் பெண்ணாக, கண்ணாக நினைத்திருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை. மாமியார் என்றாலே நரகலோகத்தின் அதிபதி என்பது போல உங்களுக்கும் தோன்றிவிட்டது. மொத்தத்தில் இது ஒரு 'Negative vibration'. அதற்காக காதல் புரிந்து, மதம் மாறி, பெற்றவர்கள் எதிர்ப்புக்கும் சவால் விட்டு மணம் புரிந்து கொண்ட ஆசைக் கணவரை விவகாரத்து செய்ய முடிவு எடுப்பதால், யாருக்கு வெற்றி? உங்களுக்கா அல்லது உங்கள் மாமியாருக்கா? உங்கள் உரிமையை அப்படி விட்டுக் கொடுத்துவிட்டு, அருமையான தாம்பத்ய வாழ்க்கையை இழக்க வேண்டுமா, மாட்டீர்கள், இல்லையா? ஆகவே, விவாகரத்தைப்பற்றி இப்போது நினைக்க வேண்டாம்.

உங்கள் மாமியாரைச் சமாளிக்க கீழே அணுகுமுறைகளைத் தருகிறேன். சர்க்கரை வியாதிக்கு, பாகற்காய் போல் கசப்பாக இருக்கும். இருந்தாலும் வியாதி கட்டுப்படும். அதுபோல உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் கடைப்பிடித்துப் பாருங்கள். கண்டிப்பாக மாமியார், மருமகள் உறவில் ஒரு பாலம் அமையும்.

1. முதலில் உங்கள் மனதை ஒரு 'slate' ஆக மாற்றி கொள்ளுங்கள். உங்கள் மாமி யாரைப் பற்றிய கெட்ட சிந்தனைகள் எல்லாவற்றையும் வரிசையாக எழுதிக் கொள்ளுங்கள். (ஒரு பேப்பரில் கூட செய்யலாம்.) அவரது அத்தனை வக்கிரக் குணங்கள் (அதாவது உங்கள் நோக்கத் தில்) எல்லாவற்றையும் எழுதுங்கள். பிறகு கண்ணை மூடிக் கொண்டு ஒரே நேரத்தில் அழித்து விடுங்கள். 'Now start with a clean slate' அதில், அவர் உங்களிடம் ஆசையாக இருந்த நிகழ்ச்சி களை மட்டும் நினைவு கூர்ந்து எழுதிக் கொண்டு வாருங்கள். ஏதேனும் 1-2 இல்லாமல் போகாது. (உங்கள் மன நிலையில் இப்போது எழுத முடியாது. இருந்தாலும் முயற்சி செய்து பாருங்கள்.)

2. நீங்கள் இந்தியா சென்று அங்கு தங்குவதை விட அவரை இங்கே வரவழைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், இது உங்கள் இடம். இங்கே அவர் விருந்தினர். விருந்தினருக்குப் புன்சிரிப்புடன், அன்புடன் பராமரிப்பது நம் பண்பாடு. அதைச் செய்யப் பாருங்கள்.

3. அவர் 'இது என் மகன் வீடு. இது என் பேரன்' என்ற நிலையில் தான் இருப்பார். உங்களை முழுதாக ஏற்றுக் கொள்ள வேண்டிய முதிர்ச்சி அவருக்கு இல்லா விட்டால், நீங்கள் முதிர்ச்சியுடன் அந்த மனப்பான்மையைச் சிறிது பொறுத்துக் கொள்ளுங்கள். (முயற்சிதான்)

4. அவர்கள் வந்தால் அழகாகச் சமைத்துப் போடட்டும். அமெரிக்காவில் எத்தனை பேர் இந்த நிலைக்கு ஏங்குகிறார்கள்? அனுபவித்துச் சாப்பிடுங்கள். ஆசையுடன் பாராட்டுக்கள். (ஹ¥ம்... மனது 'மக்கர்' செய்கிறது) அத்தை உங்களைப் போல 'சிக்கன் குருமா' செய்ய எங்க அம்மாவுக்குக்கூட வராது. என்று சொல்லிப் பாருங்கள். உங்களது இந்த சின்னச் செயல் எவ்வளவு பெரிய மாற்றத்தை அவரிடம் ஏற்படுத்தும் என்று உங்களுக்குத் தெரியாது.

5. உங்களைப்பற்றிக் கீழ்த்தரமாகச் சொல்லுகிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நம்மைப் பிடிக்காதவர்கள் நமக்குப் 'பாராட்டுவிழா'வா கொண்டாடப் போகிறார்கள்? இல்லை. உங்களைப் பற்றி தவறாகப் பேசியதை நிரூபிக்க உங்கள் நல்ல குணங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டுமா? யோசித்துப் பாருங்கள்.

6. இங்கே சம்பந்தப்பட்டிருப்பது உங்கள் கணவரின் தாய். உங்களுக்கு உங்கள் தாய் எவ்வளவு அருமையோ, அது போல் தான் அவருக்கும். பாசத்தின் முன்னால், அந்தத் தாயின் குறைகள் அடிபட்டு போய்விடும். உங்கள் கணவரின் மேல் உங்களுக்கு உண்மையான அன்பு இருக்கும் போது, நீங்கள் கொஞ்சம் அனுசரித்து விட்டுக் கொடுப்பது நல்லது. எப்படி விட்டுப் கொடுப்பது என்பதற்குச் சில 'tips' கொடுக்கிறேன்.

* 'என் பிள்ளை' நினைப்பில் அவர் ஆதிக்கம் செலுத்தினால், அவர் மேல் பரிதாபப்படுங்கள். she feels very insecure! அவருடைய அருமை மகன் உங்களுக்கு இப்போது சொந்தம். அதை யாரும் பிரிக்க முடியாது. தாயுக்கும் பிள்ளைக்கும் உள்ள உறவைப் பார்த்து மகிழுங்கள். அந்த உறவே வேறு அல்லவா.

உங்களைப் பற்றி இகழ்வாகப் பேசினா லோ, அல்லது கடிந்து கொண்டாலோ, கண்டு கொள்ளாதீர்கள். நீங்கள் பதிலடி கொடுப்பதைவிட, மகத்தான சக்தி வாய்ந்தது நம் வாய்க்கு பிளாஸ்திரி போட்டுக் கொள்வது.

பேரனிடம் நன்றாகக் கொஞ்சட்டும். அவனும் உங்கள் சொத்து. அவனுக்குத் திருமணமாகும் வரை யாரும் அவனைச் சொந்தம் கொண்டாட முடியாது.

உங்களுக்குப் பிடிக்காத விஷயங்களை நாசுக்காக எடுத்துச் சொல்லுங்கள். குரல் சின்னதாக மாறினால் சொற்கள் powerful ஆக இருக்கும். உதாரணம். அவர் எதற்காவது சப்தம் போட்டால் ''இதற்கு இவ்வளவு சப்தம் போட்டிருக்க வேண்டாமே அத்தை'' என்று ஒரே வரியில் சொல்லிவிட்டு, அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுங்கள்.

இப்படி ஒரு 6 மாதம் நடந்து பாருங்கள். உங்கள் முயற்சியால் உங்கள் மாமியாரின் மனம் மாறி உங்களுக்குள் ஒற்றுமை நிலவ ஆரம்பிக்கலாம்.

அல்லது,

உங்கள் மாமியாரின் சப்தம் மட்டும் சதா கேட்டுக் கொண்டே இருக்க, உங்கள் கணவர் சிறிது காலம் பொறுத்துவிட்டு உங்களுக்காக வாதாட ஆரம்பித்து விடுவார்.

அல்லது,

உங்களுக்கே பொறுக்க முடியாமல், உங்கள் மாமியாரை மறுபடி வழியனுப்பி வைத்திருப்பீர்கள்.

அல்லது,

'மாமியாரை வழிக்கு கொண்டு வருவது எப்படி' என்று நீங்களே ஒரு புத்தகம் போட்டு இருப்பீர்கள்.

மறக்காதீர்கள்.இது பாகற்காய் வைத்தியம். பொறுமை நிறைய வேண்டும். 'இந்த மாமி யார்?' என்று கேட்கும் உறவு அல்ல மாமியார்.


வாழ்த்துக்கள்
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com