அபிராமி
புற்றுநோய் மெல்ல மெல்லக் கொல்லும் நோய். "இந்த நோய் வந்தால் வாழ்க்கையே அவ்வளவுதான்" என்று எவரும் தளர்ந்துவிடுவர். ஆனால் அபிராமி அதற்கு விதிவிலக்கு. ஒரு வயதிலேயே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு, அப்போதிலிருந்தே எல்லா வலிகளையும் தாங்கிக்கொண்டு வளர்ந்தார் இவர். இன்றைக்கு 12 வயது அபிராமி, ஓர் உலக சாதனையாளர். நடனத்தில் டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார்.

எப்படி இதனைச் சாதித்தார்?
அபிராமிக்கு ஒரு வயதானபோது மூச்சு விடுவதில் பிரச்னை இருந்திருக்கிறது. டாக்டர்களிடம் காண்பித்ததில் குழந்தைக்குப் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. ஆரம்பித்தது தொடர் சிகிச்சை. துள்ளித் திரிய வேண்டிய வயதில் பெரும்பாலான பொழுது மருத்துவமனையில் கழிந்தது. மகள்மீது பெரும்பாசம் கொண்ட தாய் மகளுக்காகத் தன்னையே அர்ப்பணித்தார். அவளுடன் முழுநேரமும் செலவிட்டார். 5 வருடங்கள் கடும் போராட்டத்திற்குப் பின் குணமானாள் அபிராமி.

ஒரு சமயம் மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஆலயத்துக்கு அபிராமியுடன் சென்றிருந்தார் தாய். அங்கு பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த அபிராமி ரசித்தாள், வியந்தாள். தானும் அப்படி ஆட ஆசைப்பட்டாள். தாயிடம் ஆசையைச் சொன்னாள். ஆனால், தொடர்சிகிச்சை அவளது வலுவையெல்லாம் உறிஞ்சியிருந்தது. ஆர்வமும் விடாமுயற்சியும் அந்தத் தடையை வென்றன.



டாக்டர் வித்யா மற்றும் நிருத்ய சிரோமணி வள்ளியம்மையிடம் நடனம் கற்க ஆரம்பித்தார் அபிராமி. விரைவிலேயே விதவிதமான நடனங்களைக் கற்றார். 'யுனிக் வேல்ர்ட் ரெகார்ட்' பற்றிக் கூறி, சாதனை நிகழ்த்த நடன ஆசிரியர் ஊக்குவித்தார். 2018ல், அரைமணி நேரம் மண்பானை மீது நின்றபடியே நடனமாடி, சாதனை படைத்தார். கடந்த ஆண்டு, அடுக்கி வைக்கப்பட்ட 24 கத்திகள்மீது நின்றபடி நடனமாடி, 'கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' உலக சாதனையை நிகழ்த்தினார். இவரது சாதனைகளைப் பாராட்டி சமீபத்தில் ஸ்ரீ ருத்ராக்ஷா பல்கலைக்கழகம் நாட்டியத்தில் முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.

பரதநாட்டியத்தில் கின்னஸ் சாதனை செய்ய ஆசைப்படுகிறார் அபிராமி. அதற்காக நாட்டிய நுணுக்கங்களை தற்போது ரமணி சுரேஷ் குருவிடம் கற்று வருகிறார். கிடைக்கும் ஓய்வு நேரத்தில் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை போன்றவற்றுக்கு சென்று, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆறுதல் கூறுவதுடன், முறைப்படி சிகிச்சை பெற்றால், தன்னைப்போல இந்த பிரச்னையிலிருந்து மீண்டுவிடலாம், சாதனை நிகழ்த்தலாம் என்று அவர்களை ஊக்கப்படுத்தியும் வருகிறார்.

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ! அபிராமிக்கு வாழ்த்துக்கள்!

© TamilOnline.com