தென்றல் பேசுகிறது
செர்னோபைல் அணுவுலை விபத்தை (1986) காரணம் காட்டி, அணுமின்சார நிலையங்கள் அமைப்பதை எதிர்ப்பதில் ஓர் அரசியல் உள்ளதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. செர்னோபைல் வெடிப்பில் 2 பேரும், கதிர்வீச்சுத் தாக்கத்தில் 29 பேரும் உயிர் இழந்தனர். சரி, இதைப் பாருங்கள்: ஓர் ஆண்டில் உலகத்தில் சராசரியாக 130 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் இறந்து போகின்றனர். அதற்காக சாலையில் வாகனங்கள் ஓடுவதற்குத் தடைபோட்டு விடவில்லையே. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களில் சூரியன், நீர், காற்று இவற்றோடு அணுவுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, ஆனால் போதிய பாதுகாப்புகளோடு, மக்கள்தொகை குறைவான பகுதிகளில் மின்சாரம் தயாரிக்க உலக நாடுகள் தைரியம் கொள்ளவேண்டும். நிலக்கரி, பெட்ரோலியம் இவற்றை நம்பித்தான் நாம் சூழலை மாசுபடுத்திக் கொண்டிருக்கிறோம். மாற்றுமுறை ஆற்றல் உற்பத்திப் பெருக்கத்தின் முக்கியத்துவத்தை அண்மையில் கிளாஸ்கோ மாநாடு அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. அணுவில் உள்ளது அருமையான தீர்வு.

★★★★★


கொரோனா சூறையாடிவிட்ட கொடிய சூழ்நிலையிலும் கூடப் பெரும் எண்ணிக்கையில் மக்கள் வேலைகளை ராஜிநாமா செய்கின்றனராம். குடும்பத்தோடு சேர்ந்திருக்கும் விருப்பம், சிற்றூரில் வசிக்கும் ஆசை, ராப்பகலாக வேலை செய்யாமல் தனக்கென்று நேரம் ஒதுக்கவேண்டும் என்னும் எண்ணம், இது இல்லாமல் வாழமுடியாது என்கிற கட்டாயங்கள் மாறிவிட்ட நிலை என்று பலவகைப்பட்ட காரணங்களால் மக்கள் வேலையை உதறுகிறார்களாம். தொழிற்சாலைத் தொழிலாளர் முதல் மென்பொருள் பணியாளர் வரை எல்லா மட்டத்திலும் இது நிகழ்கிறது. அதன் காரணமாகச் சம்பளம், உற்பத்திச் செலவு, தயாரிப்பு விலை, இறுதியாக நுகர்வோர் விலைவாசி என்று எல்லாம் ஏறுகின்றன. குறைவான பொருட்களை அதிகப் பணம் துரத்துவதால் பணவீக்கம் பயமுறுத்துகிறது. இது ஒரு கடினமான காலத்தின் ஆரம்பக்கட்டம். சுய கட்டுப்பாடு, அவசியமானவற்றுக்கு மட்டுமே செலவழித்தல், இயன்ற அளவு இல்லாதாரோடு தமது வளங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், சரியான திட்டமிடல் போன்றவற்றைத் தனிநபரும் நாடுகளும் செய்யவேண்டிய காலம் இது.

★★★★★


தினமும் ஒரு சிறுகதை எழுத முடியுமா? அதுவும் மருத்துவம், மேலாண்மை போன்ற வேறுபட்ட களங்களை எடுத்துக்கொண்டு, சுவை குன்றாமல்? அதிலும், கம்பெனிகளில் முக்கியப் பதவிகளை வகித்தபடி? முடிகிறது ஜெ. ரகுநாதனுக்கு. அவரது நேர்காணலும், ம. சிங்காரவேலர் குறித்த கட்டுரையும் இன்னும் பலவும் இந்த இதழின் சிறப்புகள்.

வாசகர்களுக்கு தீபாவளி, திருக்கார்த்திகை நல்வாழ்த்துகள்!

தென்றல்
நவம்பர் 2021

© TamilOnline.com