'அனிமல் கம்யூனிகேட்டர்' பா. ஜனனி
"மனிதர்களிடம் எப்படிப் பேசுகிறோமோ அதேபோல் விலங்குகளுடனும், ஏன் பறவைகள், தாவரங்கள் என முழு இயற்கையுடனும் என்னால் பேச முடியும்!" - இப்படிச் சொல்லி நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார் ஜனனி பார்த்திபன். கூடவே, "இது ஒன்றும் மாயமோ, மந்திரமோ, சூப்பர் பவரோ, சித்து விளையாட்டோ இல்லை. நீங்களும் நினைத்தால், முயன்றால் பேசமுடியும்" என்று சொல்கிறார். இதுவரை 1500க்கும் மேற்பட்ட விலங்குகளிடம் உரையாடி இருக்கிறார். உளவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்கும் ஜனனி. தொலையுணர்வு மிருகச் செய்தித்தொடர்பு (Telepathic Animal Communication) பயின்று சான்றிதழ் பெற்றவர். தமிழ்நாட்டின் முதல் அனிமல் கம்யூனிகேட்டராக அறியப்படுபவர். கோவையை அடுத்த திருப்பூரில் வசிக்கிறார். இதோ, தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார் ஜனனி, கேட்போமா?

கே: அனிமல் கம்யூனிகேஷன் துறையில் உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது எப்போது, எப்படி, ஏன்?
ப: நான் அனிமல் கம்யூனிகேட்டர் என்னும் இந்தத் துறைக்கு வந்ததற்கு முழுக் காரணம் ஜின். ஜின் எனது வளர்ப்பு நாய். மிகவும் ஆசையாக வளர்த்து வந்தோம். திடீரென்று ஒருநாள் அவன் இறந்துவிட்டான். அவன் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால் எனக்கு மிகவும் வலுவானதோர் உணர்வு, அடுத்த வருடம் அவன் இருக்க மாட்டான், என்று ஏற்பட்டது. நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என் மனதின் கற்பனையாக இருக்கும் என்று விட்டுவிட்டேன். மட்டுமல்லாமல் அவன் மிகவும் ஆரோக்கியமாக, சுறுசுறுப்பாக இருந்தான். அவனுக்கு வயதும் அதிகம் ஆகவில்லை. ஆகவே இது என் கற்பனைதான் என்று நினைத்து விட்டுவிட்டேன்.

ஆனால், அடுத்த ஒன்றரை மாதத்தில் திடீரென்று ஒருநாள் அவனுக்கு உடம்பிற்கு மிகவும் முடியாமல் போய்விட்டது. என்னென்ன சிகிச்சைகள் கொடுக்க வேண்டுமோ எல்லாம் கொடுத்தோம். நன்கு கவனித்துக் கொண்டோம். ஆனாலும் அவனைக் காப்பாற்ற முடியவில்லை. எங்களை விட்டுப் பிரிந்து போய்விட்டான்.

அவனது மறைவிற்குப் பிறகு, இது ஏன், எதனால் நடந்தது என்றெல்லாம் எனக்குள் கேள்விகள் எழுந்தன. ஏனென்றால் அவன் மிகவும் ஆரோக்கியமாக இருந்தவன். எந்தவித நோயும் இல்லை. ஆனால், திடீரென எல்லாம் முடிந்துவிட்டது. இது ஏன் என்பதற்கான விடையைப் பல தளங்களிலும் தேடிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் என் அண்ணா, "அனிமல் கம்யூனிகேட்டர் பற்றித் தெரியுமா?" என்று கேட்டான். "இதுவரைக்கும் கேள்விப்பட்டதில்லை அண்ணா" என்று சொன்னேன். "அவர்கள் இறந்துபோன பிராணிகளிடமும் கூடப் பேசுவார்களாம்" என்றான். நான் ஆச்சரியத்துடன் அதுபற்றித் தெரிந்து கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். அப்படித்தான் ஆரம்பித்தது இந்த ஆர்வம்.



கே: அதன் பின்?
ப: ஜின் ஏன் இறந்தான், எப்படி இறந்தான், என்ன நடந்தது அவனது உடலில் என்பதையெல்லாம் அனிமல் கம்யூனிகேட்டர் மூலம் அறிய விரும்பினேன். அதன்படி ஒருவருடன் தொடர்பு கொண்டேன். அவர் கேட்டுக்கொண்டபடி அவரிடம் ஜின்னின் ஒரு ஃபோட்டோ கொடுத்தேன். அவன் பெயர் கொடுத்தேன். அவ்வளவுதான். ஆனால், அவர் கொடுத்த பதில்கள் எனக்குப் பெரிய பிரமிப்பைத் தந்தன. Mind Blowing Experience. எங்களைத் தவிர வேறு யாரும் அறியமுடியாத, தெரியவராத, பல சொந்த அனுபவங்களை, குடும்ப விஷயங்களைச் சொன்னார். அதையெல்லாம் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஏனென்றால் அவர் யார் என்பது எங்களுக்குத் தெரியாது. எந்த ஊரில் இருக்கிறார் என்பதும் தெரியாது. ஆனால், எங்களது தனிப்பட்ட விஷயங்களை எல்லாம் அவர் சொன்னபோது அது மனதைத் தொட்டது. அத்தோடு, நான் தேடிய விடைகளும் கிடைத்துவிட்டன.

எனக்கு ஜின் மிக மிக நெருக்கமானவன். Emotionaly Connected. ஆகவே, அவனிடம் ஒவ்வொருமுறையும் பேசுவதற்குப் பிறருடைய உதவியை நாடாமல் நானே நேரடியாகப் பேச வேண்டும் என்று நினைத்தேன். என்னுடைய தனிப்பட்ட விஷயங்கள் எல்லாமே முன்னர் நான் அவனிடம் பேசுவேன். அதில் அவனுக்குச் சொல்வதற்கு ஏதாவது இருக்கிறதா, இல்லையா என்பதை அவனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அவனிடம் எப்போதும் தொடர்பில் இருக்கவேண்டும் என்று எண்ணினேன். அதே சமயம் இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பதும் தெரியாமல் இருந்தது. அதனால், நான் மேலும் பல கம்யூனிகேட்டர்களுடன் பேசினேன். கிடைத்த அனுபவங்கள் எல்லாமே பிரமிப்பூட்டும்படி இருந்தன.

கே: ஓ. என்ன அவை?
ப: 'மாயா கின்கேட்' (Maia Kincaid) அமெரிக்காவில் இருக்கிறார். நான் அவருடைய ஆன்லைன் வகுப்புக்கு ஒரு கெஸ்ட் ஆகப் போனேன். அவரும், அவருடைய குழுவினரும் அங்கே இருந்தார்கள். உரையாடினார்கள். அப்போது யதேச்சையாக மாயா சொன்னார். "உங்களுடைய பெட் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். நாம் பேசலாம்" என்றார். நான் 'ஜின்' என்ற பெயரை மட்டுமே சொன்னேன். ஃபோட்டோகூடக் கொடுக்கவில்லை. அவன், இறந்துவிட்டான் என்பதையும் சொன்னேன்.

அதன்பின் அவர் ஜின்னுடன் பேசி எனக்குச் சொன்ன தகவல்கள் எல்லாம் அவ்வளவு துல்லியமாக இருந்தன. அவர் அவ்வளவு சரியான தகவல்களைத் தரும்போது என்னால் மறுக்க முடியவில்லை. அது தவிர்த்து நிறைய மெசேஜும் கொடுத்தார்கள். அதில் ஒன்றுதான் 'ஜின்' என்னிடம் சொன்னதாக, 'இது உனக்கு இயற்கையாக வருவது. இதை விட்டுவிட்டு நீ ஏன் வேறு எதையெல்லாமோ செய்து கொண்டிருக்கிறாய். நீ இதையே செய். நான் உனக்கு உதவுகிறேன். நான் உன்கூடவேதான் இருக்கிறேன். வாழ்க்கை முழுவதும் நான் வழிகாட்டுகிறேன். உனக்காக நான் இருக்கிறேன். உன்னால் என்ன முடியுமோ அதை மட்டும் செய்தால் போதும்," என்பது.

அதன்பின் நான் அனிமல் கம்யூனிகேஷன் பற்றித் தீவிரமாகத் தேடத் தொடங்கினேன். ஒவ்வொரு நாளும் நான் விடியற்காலை மூன்று மணிக்கு எழுந்து விடுவேன். அதுவும் யாரோ எழுப்பிவிட்ட மாதிரி எழுவேன். எவ்வளவு களைப்பாக இரவு படுத்திருந்தாலும் மிகவும் ஃப்ரெஷ் ஆக எழுந்து கொள்வேன். மிருகங்களுடன் பேசுவது எந்த அளவுக்கு உண்மை, இதை யாரெல்லாம் செய்கிறார்கள், யாரிடம் கற்றுக் கொள்ளலாம் என்றெல்லாம் தினந்தோறும் இணையத்தில் தேடினேன். "I was the one who made her do this; I pulled her into this" என்று ஜின் பின்னால் ஒரு அனிமல் கம்யூனிகேட்டரிடம் சொல்லியிருக்கிறான். அவன் சொன்னது புரிகிறது. ஏனென்றால், நிறைய இடங்களில் என்னால் புள்ளிகளை இணைத்துப் பார்க்கமுடிகிறது. அப்படித்தான் இதற்கு வந்தேன்.

இதன் பிறகு நான் இதற்கான ஆன்லைன் வகுப்பில் சேர்ந்தேன். ஆஃப்லைனிலும் படித்தேன். இந்தியாவில் இது தொடர்பாக மிகவும் புகழ்பெற்ற மஞ்சிரி லாட்டியிடம் (Manjiri Latey) கோர்ஸ் படித்தேன். அது போல வெளிநாட்டில் இருக்கும் சில பயிற்சியாளர்களிடமும் பயிற்சி எடுத்துக் கொண்டேன். Natalie Lucia medium, Anna Breytenbach, Claire Bloomfield போன்ற அனுபவம் வாய்ந்த பலரிடம் கற்றுக் கொண்டேன். இப்போது நானே அனுபவத்தில் முன்னேறி வருகிறேன்.



கே: ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால், மிருகங்களுடன் தொடர்பு கொள்வது என்பது அறிவியல்பூர்வமானதா?
ப: இது தொடர்பாக நிறைய ஆய்வுகள் நடக்கின்றன. நிறைய ரிசர்ச் முடிவுகள் ஏற்கனவே வந்திருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை இது ஒருவரது நம்பிக்கை சார்ந்த விஷயம் என்றுதான் சொல்வேன். கடவுள் நம்பிக்கை மாதிரிதான் இதுவும். நாம் ஃபீல் பண்ணுவதில்தான் இருக்கிறது. மற்றபடி இதனை நம்புவதா வேண்டாமா என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். எல்லாவற்றையும் விஞ்ஞானத்தால் நிரூபிக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஏனென்றால் இந்த உலகம் மிகப் பிரமாண்டமானது. இயற்கை என்பது மிக மிகப் பரந்து விரிந்தது. அறிவியல் என்பது அதில் ஒரு துளிதான். ஒன்று இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பதாலேயே அது பொய்யாக இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. மற்றபடி இதை ஒருவர் அனுபவித்துப் பார்த்தால்தான் இதன் ஆழம் புரியும் என்று நான் நினைக்கிறேன்.

கே: விலங்குகளை நேரடியாகச் சந்தித்துத்தான் தொடர்பு கொள்வீர்களா அல்லது அவற்றின் படங்களைக் கொண்டே கூடத் தொடர்பு கொள்ள முடியுமா?
ப: நேரில் பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஃபோட்டோகூட வேண்டியதில்லை. வீடியோ காலில் பார்க்க வேண்டிய தேவையில்லை. ஃபோட்டோ வைத்தும் பேசலாம், இல்லாமலும் பேசலாம். இது எப்படி என்றால், 'உங்களை எனக்குத் தெரியாது. வேறு ஒருவர் சொன்னார் உங்களைப்பற்றி' என்று சொல்லி ஒருவருடன் பேசுவது போன்றதுதான். பார்க்காமலேயே ஒருவருடன் ஃபோனில் பேசுவது போன்றது. அதாவது நீங்கள் உங்கள் விலங்கிடம் என்னைப் பேசச் சொல்கிறீர்கள் என்றால், நான் உங்கள் விலங்கிற்கு ஃபோன் செய்து பேசுவது போலத்தான் இந்தத் தொடர்பு கொள்ளுதலும். இது கஷ்டமான விஷயமே அல்ல.

மறக்க முடியாத அனுபவங்கள்
ஒரு பெண் மிக ஆசையாக வளர்த்து வந்த நாய் இறந்துவிட்டது. அது எப்படி இறந்தது என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை. காரணம், அந்த நேரத்தில் அவர்கள் வீட்டில் இல்லை. அதனால் அவர்கள் மிகவும் குற்ற உணர்ச்சியுடன் இருந்தார்கள். என்னைத் தொடர்பு கொண்டார்கள். நாய் இறந்துவிட்டது என்று மட்டும் சொன்னார்கள். அது எப்படி இறந்தது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். வேறெந்த விவரமும் எனக்குச் சொல்லவில்லை.

அந்த நாயுடன் பேசும்போது அவர்கள் குடும்பம், அங்கு நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் பற்றி சின்னச் சின்ன விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. மேலும் அந்தப் பெண்ணின் தனிப்பட்ட சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. தான் இறந்தது எப்படி என்பதையும் அந்த நாய் பகிர்ந்துகொண்டது. அன்று மழை வந்திருந்தது, அப்போது என்ன நடந்தது, எப்படி மரணம் ஏற்பட்டது என்பதையும் அது சொன்னது.

அதை அந்தப் பெண்ணிடம் சொன்னபோது அவர்களுக்கு ஒரே அதிர்ச்சி. "ஆமாம். அன்று மழை பெய்தது" என்று ஒப்புக் கொண்டவர்கள் அழ ஆரம்பித்து விட்டார்கள். இந்த விஷயம் எதுவுமே அவர்கள் எனக்குச் சொல்லவில்லை. நான் கற்பனையில் சொல்லியிருக்கலாமே என்றுகூடச் சிலருக்குச் சந்தேகம் வரலாம். ஆனால், அவர்களுக்குச் சந்தேகம் வரவில்லை. ஏனென்றால், அவர்கள் மட்டுமே அறிந்திருந்த, அவர்கள் குடும்பம் சார்ந்த பல தனிப்பட்ட விஷயங்களையும் நான் சரியாகச் சொன்னதால்தான். 'தங்களால்தான் நாய் இறந்தது' என்ற குற்ற உணர்ச்சியில் இருந்தும் அவர்கள் விடுபட்டார்கள். இப்படி நிறையச் சம்பவங்களைச் சொல்லலாம்.

நாய், பூனை தொலைந்து போய்க் கிடைத்தது, நன்றாக இருந்த நாய் திடீரென மாறுபட்டு நடந்து கொள்வதற்கான காரணம் என்று நிறைய அனுபவங்களைச் சொல்லலாம். இப்படித் தினந்தோறும் பல அனுபவங்களை நான் சந்திக்கிறேன். ஏன், எனக்கே இதன்மூலம் நிறைய படிப்பினைகள் கிடைத்திருக்கின்றன. பிற குடும்பங்களுக்கு அவர்கள் வளர்ப்புப் பிராணிகளால் சொல்லப்படும் விஷயங்கள் சில என் வாழ்விலும் மிகவும் உதவியுள்ளன.

பா. ஜனனி


கே: மிருகங்களுடன் எப்படி நீங்கள் தொடர்பு கொள்கிறீர்கள், அவற்றின் மனதில் உள்ளதை எப்படி நீங்கள் அறிகிறீர்கள்? அதற்கு எவ்வளவு நேரம் அல்லது நாட்கள் எடுக்கும்?
ப: இது முழுக்க முழுக்க Telepathyயால் நடக்கிறது. டெலி என்றால் தொலைவு. பதி என்பது கிரேக்க மொழியிலிருந்து வந்தது. பதாஸ் என்று சொல்வார்கள். தொலைதூரத்தில் உள்ளவர்கள் தங்களுக்குள் தங்களுடைய உணர்வுகளை எண்ணங்களை எல்லாவற்றையும் பரிமாறிக் கொள்வதுதான் டெலிபதி. அது இயற்கை அல்லது மிருகம் எங்கிருந்தாலும் இதன் வழியே தொடர்புகொள்ள முடியும்.

ஒரு விலங்கு எனக்கு அனுப்பும் செய்தி என்னிடம் ஏதோ ஒரு புலன் மூலம் எனக்கு வந்து சேரும். ஒன்று அதை நான் பார்ப்பேன் அல்லது அது தொடர்பாகக் கேட்பேன். இல்லை, எனக்கு அது ஃபீல் ஆகும். அல்லது உள்ளுணர்வாகவும் வரும். இதற்கு நாள் கணக்கில் எல்லாம் ஆகாது. நேரக்கணக்குதான். ஆனால், நாம் எத்தனை கேள்விகள் கேட்கிறோமோ அதைப் பொறுத்து நேரம் எடுக்கும். நாம் எப்போது தயாராக இருக்கிறோமோ அப்போது அவற்றுடன் தொடர்பு கொள்ளலாம். அதேசமயம் கம்யூனிகேட்டரின் மனநிலை, உடல்நிலையைப் பொறுத்து தாமதமும் ஏற்படலாம். ஆனால், இதெல்லாம் நமக்குத்தான். மிருகங்களைப் பொறுத்தவரை அவை எப்போதும் நம்மோடு பேசத் தயாராக உள்ளன.

கே: நீங்கள் முதன் முதலில் தொடர்புகொண்ட அனிமல் கம்யூனிகேஷன் அனுபவம் பற்றிச் சொல்ல இயலுமா?
ப: நான் முதன்முதலில் பேசியது ஒரு நாயிடம். அதன் பெயர் ஊனோ. எனக்கு அனிமல் கம்யூனிகேஷன் சொல்லிக் கொடுத்த மஞ்சிரி லாட்டியின் நாய் அது. அவனுடைய படத்தைப் பார்க்கவில்லை. பெயர்மட்டும் தான் தெரியும். வேறு எதுவுமே தெரியாது. அந்த அனுபவம் அழகாக இருந்தது. அவன் சொன்ன தகவல்கள் பலவும் சரியாக இருந்தன. இதை இவ்வளவு எளிதாகச் செய்யமுடியும் என்பது அதுவரை எனக்குத் தெரியாது. அந்த அனுபவத்தை வார்த்தையால் விவரிப்பது குறைவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அன்றைக்கு, முதன்முதலில் பேசிய அந்த நாளில் அவ்வளவு பரபரப்பு, அவ்வளவு திருப்தி, அவ்வளவு சந்தோஷம், மனநிறைவு. 'இது நிஜமாகவே சாத்தியம்; நாமும் இதைச் செய்கிறோம். நம்மாலும் இதனைச் செய்ய முடிகிறது' என்று எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

அன்றே ஊனோவை அடுத்து மற்றொரு காட்டு விலங்குடன் பேசினேன். தென் அமெரிக்காவில் இருக்கும் 'லாமா' என்ற மிருகத்துடன் பேசினேன். லாமாவிடம் இருந்து கிடைத்த விவரங்களும் அருமையாக இருந்தன. அதை எல்லாம் வார்த்தையில் எப்படி விவரிப்பது என்று எனக்குத் தெரியவில்லை.



கே: மிருகங்களுடன் பேசுவது என்பது சாத்தியம் என்றால் செடி, கொடிகளுடன் பேசுவதும்கூடச் சாத்தியம்தான் அல்லவா?
ப: ஆம். நிச்சயம் பேசலாம். செடி, கொடி, பறவைகள், பூச்சிகள் என்று எல்லாவற்றுடனும் பேசலாம். இதைச் செய்யும் எங்களை அனிமல் கம்யூனிகேட்டர் என்று பொதுவாக அழைத்தாலும் உண்மையில் தொலயுணர்வு இயற்கை மற்றும் அனிமல் கம்யூனிகேட்டர்களான நாங்கள் நீர்நிலைகள் உள்பட எல்லாவற்றுடனும் பேசமுடியும். வீட்டில் இருக்கும் செடி, கொடிகளை வளர்ப்பவர்கள் சிலர் அதனுடன் பேசுவார்கள், அதையேதான் நாங்களும் செய்கிறோம். அவர்கள் அதுபற்றித் தெரியாமல் பேசிக் கொண்டிருப்பார்கள். நாங்கள் தெரிந்துகொண்டு பேசுகிறோம். அவ்வளவுதான்.

கே: உங்களைப் போன்ற அனிமல் கம்யூனிகேஷன் படித்தவர்கள், வனங்களை விட்டுவிட்டுக் குடியிருப்புகளில் சுற்றித் திரியும் விலங்குகள், யாருக்கும் அடங்க மறுக்கும் யானை போன்றவற்றின் மனதை அறிந்து வனத்துறைக்கும், அரசுக்கும் எளிதில் உதவமுடியும் அல்லவா?
ப: செய்யமுடியும். ஆனால், இது நம்பிக்கை சார்ந்த விஷயம். எத்தனை அதிகாரிகள் இதனை நம்புகிறார்கள், எங்களது உதவியை ஏற்கத் தயாராய் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது அது. ஆனால், வெளிநாடுகளில் நிறைய இப்படி உதவியை நாடுகிறார்கள். காவல்துறை, FBI இவர்களுக்கெல்லாம் கூட உதவுகிறார்கள். வழக்குகளை துப்பறிவதில் உதவுகிறார்கள்.

அதே சமயம் இந்தக் காட்டு விலங்குகள் விஷயத்தில் நாம் நினைப்பது மட்டும்தான் output ஆக இருக்கும், இருக்கவேண்டும் என்று நினைப்பது சாத்தியம் இல்லை. அதாவது நமக்கு எப்படி விருப்பு வெறுப்புகள், choices, charcters, personalities இருக்கிறதோ அதேபோலத்தான் விலங்குகளுக்கும். ஊருக்குள் வந்து நாசம் செய்யும் ஒரு விலங்கிடம் சென்று 'நீ காட்டுக்குள் போ' என்று சொன்னாலோ, அதிகாரம் செய்தாலோ அது கேட்கும், அதன்படி செய்யும் என்று சொல்ல முடியாது.

நம்முடைய நோக்கம் உண்மையானதாக, தூய்மையானதாக இருந்து, அதில் வேண்டுதலும் பணிவும் அன்பும் இருந்தால், நாம் சொல்வதை அவ்விலங்கு கேட்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அது விலங்குதானே என்று நினைத்து நாம் ஆர்டர் போட முடியாது. அப்படிப் போட்டாலும் அவை கேட்காது. ஒத்துழைக்காது.



கே: காணாமல் போகும் செல்லப் பிராணிகளை உங்களால் கண்டறிந்து சொல்ல முடியுமல்லவா?
ப: ஆம். நிச்சயமாக. ஆனால், நான் முன்பே சொன்ன மாதிரி, விலங்குகள் என்றாலும் அவற்றிற்கும் விருப்பு, வெறுப்புகள் உண்டு. பொதுவாக விலங்குகள் தாமாகத் தொலைந்து போவதில்லை. சில விலங்குகள் மட்டும், இரவு நேரங்களில், தாங்களாக விருப்பப்பட்டு வீட்டைவிட்டுப் போய் விடுவார்கள். அப்படிச் சென்ற விலங்குகள், அந்த வீட்டுக்குத் திரும்பி வர விருப்பம் இல்லை என்றால் அவற்றை நாம் வலுக்கட்டாயமாகக் கூட்டிக் கொண்டு வர முடியாது.

ஆனால், ஏதோ காரணத்தினால் வழி தவறிப் போய்விட்டார் என்றால் அல்லது சில காலத்திற்கு மட்டுமே வெளியே இருந்து மீண்டும் தன் வீட்டிற்குத் திரும்பி வரும் ஆர்வம் இருக்கும் விலங்கு என்றால் அதைக் கண்டு பிடித்துக் கொடுக்கிறோம். இதை மட்டுமே தொழிலாகச் செய்யும் அனிமல் கம்யூனிகேட்டர்கள் இருக்கிறார்கள். அவரும் அவற்றுடன் பேசி, திரும்பி வரச் சம்மதம் என்றால்தான் செய்வார்கள். இல்லாவிட்டால் சாத்தியமில்லை.

கே: உங்களது இந்த முயற்சிகளுக்கு செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்களிடையே எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறது?
ப: நல்ல வரவேற்பு இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் இப்போதுதான் இதுபற்றி விழிப்புணர்ச்சி ஏற்பட்டு வருகிறது. வட இந்தியாவில் நிறைய அனிமல் கம்யூனிகேட்டர்கள் இருக்கிறார்கள். என்னுடைய வழிகாட்டிகள் எல்லாம் 15 வருடங்களாக இதைச் செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் நான்தான் முதல் அனிமல் கம்யூனிகேட்டர். அதனால் மக்களுக்கு இன்னும் ஏற்றுக்கொள்ளத் தயக்கம் இருக்கிறது. ஆனால் இதைப் பரீட்சித்துப் பார்க்கத் தயாராகப் பலர் இருக்கிறார்கள். அந்த ஆர்வத்தில் வரும் பலருக்கும் இது திருப்தியைக் கொடுத்திருக்கிறது. அவர்களுக்கும் பல்வேறு கதவுகளை இது திறக்கிறது, அது குடும்ப உறவுகள் ஆக இருக்கலாம், மிருகத்தோடான தொடர்பாக இருக்கலாம். எனவே இதை மேலும் பலர் விரும்பி வருவதைப் பார்க்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை பலர் இதைச் சோதித்துப் பார்த்து உண்மையாகவே எங்கள் வாழ்க்கை மாறியிருக்கிறது, அந்தப் பிராணியுடன் எங்கள் உறவு மாறியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன். இது பைத்தியக்காரத்தனம் என்று சொல்பவர்களும் இருப்பார்கள். இதைப் புரிந்துகொண்டு, முயற்சி செய்ய விரும்புவோரை நான் ஊக்குவிக்கிறேன். யாரையும் கட்டாயப் படுத்தவில்லை. அது என் வேலையல்ல. யாருக்கு நம்பிக்கை இருக்கிறதோ, யாருக்கு இதன் மூலம் சில உண்மைகளை, நிகழ்வுகளை அறியும் ஆர்வம் இருக்கிறதோ அவர்களைத்தான் இது போய்ச்சேரும் என நான் நினைக்கிறேன். "மிருகம்தான் மனிதனைத் தேர்ந்தெடுக்கிறது" என்று நான் நினைக்கிறேன். நீங்கள் ஒரு நாயை வைத்திருந்தாலும், இதை விலைக்கு வாங்கினேன் என்று சொன்னாலும், நீங்கள் அதைத் தேர்ந்தெடுக்கவில்லை. அதுதான் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. அந்தப் பிராணி உங்களிடம் வர முடிவு செய்ததால்தான் உங்களிடம் வந்திருக்கிறது. இதுதான் உண்மை.

ஒரு வேண்டுகோள்
என் சொந்த ஊரில் நான் ஒரு தியேட்டர் நடத்துகிறேன். என்னுடைய அண்ணன் கார்மென்ட் (ஆயத்த ஆடை) தொழிற்சாலை நடத்துகிறார். நான் இந்த அனிமல் கம்யூனிகேட்டர் பணியை ஒரு தொழிலாகச் செய்யவில்லை. குறைந்தபட்சக் கட்டணமே வாங்குகிறேன். காரணம் இலவசமாக எதைச் செய்தாலும் அதற்கு மதிப்பு இருப்பதில்லை. பலருக்கு மதிப்புப் புரிவதும் இல்லை. இதை வைத்துத்தான் வாழவேண்டும் என்ற நிலையில் நான் இல்லை. இதில் வரும் வருமானத்தை விலங்குகள் நலனுக்குத்தான் செலவழிக்கிறேன்.

ஒருவரைப் புன்னகைக்க வைக்க முடிந்தால், ஒருவரது வாழ்க்கையில் சின்னதாக ஒரு நல்ல மாற்றத்தை, முன்னேற்றத்தை என்னால் கொண்டுவர முடிந்தால் அதைவிடச் சிறந்தது எதுவும் எனக்கில்லை. That does make a lot of sense in my life. Someone is happy because of me.

நான் யாரையும் இதை நம்புங்கள் என்று கட்டாயப்படுத்தவில்லை. இது என்னுடைய நம்பிக்கை. நான் இதன் வழியைப் பின்பற்றுகிறேன். அது உங்கள் விருப்பம். உங்களுடைய சாய்ஸை நான் அவமதிக்கவில்லை. அதுபோல, நான் செய்வதை, என் விருப்பத்தை நீங்கள் அவமதிக்காதீர்கள். யாருடைய நம்பிக்கையையும் நான் மாற்ற முயலவில்லை.

சிலர் இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று கேட்பார்கள். எல்லாவற்றையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. சிலவற்றை நிரூபிக்கவும் முடியாது, அனுபவித்துத்தான் உணர வேண்டும்.

பா. ஜனனி


கே: இறந்து போன மிருகங்களுடனும் தொடர்புகொள்ள முடியும் என்கிறீர்கள். அது எப்படிச் சாத்தியம்? ஒருவேளை அவை மறுபிறவி எடுத்திருந்தால் அதை எப்படி உங்களால் உணரமுடியும்?
ப: ஒரு ஃபிஸிகல் பாடியில் இருக்கும் விலங்கிடம் நான் பேசினாலும் அதனைப் பார்க்காமல்தான் பேசுவேன். எங்கள் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடலும் ஆழ்மன (சப்-கான்ஷியஸ்) லெவலில்தான் நடக்கிறது. Soul to soul, direct mind to mind conversation நடக்கிறது. அந்த உயிருக்கும் அது குடியிருக்கும் உடம்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே, அது எந்த இடத்தில் இருந்தாலும் இதேதான். அது எங்கே இருந்தாலும் அந்த ஆன்மாவுடன் நாம் பேசமுடியும். ஒருவேளை அந்த ஆன்மா மறுபிறவி எடுத்திருந்தால், இந்தத் தொடர்புக்கு இடையூறாகுமா என்று கேட்டால் 'இல்லை' என்பதுதான் என் பதில். ஏனென்றால், சப்-கான்ஷியஸ் லெவலில் உரையாடல் நடப்பதால் எந்தவிதமான தொந்தரவும் பிரச்சனையும் தொடர்பின்போது இருக்காது. மேலும் அது மறுபிறவி எடுத்திருந்தால், எங்கே மறுபிறவி எடுத்திருக்கிறது, என்னவாக இருக்கிறது என்பதையும் சொல்லும்.

அதுபோல என்னுடைய சில செஷன்களில் சில பிராணிகள், மறுபிறவி எடுப்பேன் என்றும், அதே குடும்பத்திற்குத் திரும்ப வருவேன் என்றும் சொன்னதுண்டு. சொன்னதுபோலவே வந்ததும் உண்டு. சில, வேறிடத்தில் பிறந்திருக்கிறேன் என்றும் சொன்னதுண்டு. சில, "உங்களுடனான பயணம் முடிந்தது. இனி நான் இந்த வீட்டுக்கு வரமாட்டேன். ஆனால், நான் உங்களுக்கு வழி காட்டுவேன்" என்று சொன்ன பிராணிகளும் உண்டு. அப்படிச் செய்துகொண்டும் இருக்கின்றன.

என்னுடைய அனுபவத்தை எடுத்துக் கொண்டால் என்னுடைய நாய் 'ஜின்', என்னிடம் வருவதுதான் அவனுடைய நோக்கம் என்று நினைக்கிறான். அதனால் அவன் இன்னொரு பிறவி எடுக்கவில்லை. எனவே, என்னிடம் திரும்பி வருவதற்காகக் காத்திருக்கிறான். இதே மாதிரி ஒவ்வொரு பிராணிக்கும் சுயவிருப்பம் இருக்கும். கர்மா உள்பட வேறு பல விஷயங்களும் உண்டு. அவற்றின் ஆதாரத்தில் எங்கே போகவேண்டும், யாருடன் இருக்கவேண்டும், எவ்வளவு நாள் இருக்கவேண்டும் என்பதை அவை தீர்மானிக்கின்றன.

கே: இதே வகையில் இறந்துபோன மனிதர்களுடன் தொடர்பு கொள்வதும் சாத்தியம் தானா?
ப: ரொம்பவே சாத்தியம்தான். நிறையப் பேர் அதைச் செய்துகொண்டும் இருக்கிறார்கள். நாங்கள் செய்கிற வழிமுறைகள் ஒன்றாக இருக்கலாம். ஆனால், மனிதவுயிர்களோடு தொடர்பு கொள்வதை நான் தேர்ந்தெடுக்கவில்லை. அதில் எனக்கு விருப்பமில்லை என்பதுதான் காரணம். மற்றபடி அதுவும் சாத்தியமே! அதில் இன்னமும் பல பரிமாணங்கள் இருக்கலாம். எதுவானாலும் நம்முடைய உத்தேசம்தான் முக்கியம். நம்முடைய அடிப்படை நோக்கம் தெளிவாகவும் தூயதாகவும் இருந்தால் அதில் பயப்பட எதுவுமில்லை என்பதுதான் எனது நம்பிக்கை.

இயற்கையின் மொழி
ஃபேஸ்புக் பக்கம்
இன்ஸ்டாகிராம் பக்கம்


கே: உங்கள் குடும்பம் பற்றி, உங்கள் முயற்சிகளுக்கான அவர்களது ஆதரவு பற்றிச் சில வார்த்தைகள்
ப: என்னுடைய அனைத்து முயற்சிகளுக்கும் தூண் போன்று உறுதுணையாக இருப்பவர்கள் என் குடும்பத்தினர். என் அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி, கசின் சிஸ்டர்ஸ், நண்பர்கள், உறவினர்கள் என்று எல்லாருமே எனது முயற்சிகளைப் புரிந்துகொண்டு மிகவும் ஆதரவாக இருக்கின்றனர். குறிப்பிடத் தகுந்த ஒருவர் ஸ்வாதி மாயாஸ் அம்மா இவர் மிகப் புகழ் வாய்ந்தவர். எனது முயற்சிகளுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார். அதுபோல கோவையைச் சேர்ந்த பௌச்சௌ நிறுவனர் அஸ்வின். இவர்கள் பதனப்பொருள் (preservative) எதுவுமே போடாமல் நாய் உணவு தருபவர்கள். அதுபோல கொச்சியில் இருக்கும் என் தோழி ராஜேஸ்வரி. டாரோ (tarot) கார்ட் ரீடர் மற்றும் சைக்கிக் மல்லுகோல் பத்தன். என்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்கள் என்று பலர் என் பணியைப் புரிந்துகொண்டு ஒத்துழைப்பவர்களாக உள்ளனர்.

"அப்படிப்பட்ட நண்பர்களையும் குடும்பத்தையும் பெற நான் பாக்கியம் செய்திருக்கிறேன் என்று சொல்லி மகிழ்கிறார் ஜனனி. கூடவே, "எல்லாரிடமும், எல்லா உயிரினங்களிடமும், இயற்கையிடமும் நாம் அனைவரும் அன்பாக இருப்போம். அன்பைப் பகிர்வோம். இதைத்தான் அனைவருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நன்றி" என்கிறார். நாமும் பிரமிப்புடன் நன்றி கூறி விடைபெறுகிறோம்.

உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்

© TamilOnline.com