தென்றல் பேசுகிறது...
கொரோனாவைப் பற்றிப் பேசுவதை எப்போது நிறுத்தப் போகிறோம் என்றாகிவிட்டது. ஆனால், ஒரு நாளைக்கு அமெரிக்காவில் 1800 கொரோனா மரணங்கள் நிகழ்கின்றன, இதுதான் உலகில் எந்த நாட்டையும்விட அதிகம், அதுவும் அக்டோபர் 1ம் தேதிவரை மொத்தம் 700,000 பேர் கொரோனாவால் மரணமடைந்துவிட்டனர் என்பதையெல்லாம் யோசிக்கும்போது, நாம் இதைப்பற்றிப் பேசியே ஆகவேண்டியதாக இருக்கிறது. இது "தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவரின் பெருந்தொற்று" (Pandemic of the Unvaccinated) என்று சொல்லும்படியாக இருக்கிறது. தனிமனித சுதந்திரம் இன்ன பிற அபத்தமான காரணங்களுக்காகத் தடுப்பூசியைத் தவிர்ப்போரும் எதிர்ப்போரும் நிச்சயம் தமது பைத்தியக்காரத்தனமான மனச்சாய்வுகளை விட்டுத் தடுப்பூசி போட்டுக்கொண்டாக வேண்டிய தருணம் இது. பிடிவாதங்களைவிட உயிரின் மதிப்பு அதிகம் என்பதை அவர்கள் உணரவேண்டும். இதை யோசியுங்கள்: தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்குக் கோவிட் தொற்று ஏற்பட்டால் அதனால் ஏற்படும் சிக்கல்களும் மரணமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவரை விட மிகக் குறைவுதான். அரசுத் துறைகள், தன்னார்வ இயக்கங்கள், நலம்விரும்பிகள் என அனைவரும் இதைத் தீவிரமாகப் பரப்புரை செய்யவேண்டும். நமக்கு வேண்டியது ஓர் உயிர்த்துடிப்புள்ள, வளமான அமெரிக்கா, இனியும் தாமதித்தல் ஆகாது.

★★★★★


அமெரிக்காவில் பணவீக்கமும் அதன் விளைவான விலைவாசி உயர்வும் 30 ஆண்டு காணாத உயரத்துக்கு எகிறியுள்ளன. தவறான இறக்குமதிக் கொள்கை, சுங்கவரி உயர்வு, கச்சாப் பொருட்கள் தட்டுப்பாடு, நடைமுறைக்கு ஒவ்வாத குடிவரவுக் கொள்கையின் காரணமாகத் தொழிலாளர் தட்டுப்பாடு என்று நாம் இதற்கான காரணங்களை இங்கே முன்னரே பேசியுள்ளோம். ட்ரம்ப் தொடங்கிவைத்த இந்த அவலநிலையை பைடன் நிர்வாகமும் திருத்தியமைக்காதது நாட்டை இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. உள்கட்டமைப்பு மசோதாவும் பிற சீர்திருத்தங்களும் நகராமல் உறைந்து நிற்கின்றன. மத்தியதரக் குடும்பங்களும் விலைவாசி உயர்வால் திணறுகின்றன என்னும்போது கீழ்மட்டத்தில் உள்ளவரைப்பற்றிப் பேசவே முடியாது. இந்த நிலை நீடித்தால் சமுதாயக் கொந்தளிப்புகளைத் தவிர்க்கமுடியாத கொதிநிலைக்குக் கொண்டுபோய் விடும் சாத்தியக்கூறு உண்டு. உடனடி நிவாரணத்தையும் நீண்டகால நலனையும் தரும் சில துணிச்சலான சீர்திருத்தங்களை விரைந்து பைடன் அரசு செய்தாகவேண்டும்.

★★★★★


'அனிமல் கம்யூனிகேட்டர்' ஜனனி, இந்த அதிசயப் பிரபஞ்சத்தின் புதியதொரு சாளரத்தை உங்களுக்குத் திறந்துவிடக் கூடும். ரா. வீழிநாதன், ம. சிங்காரவேலு செட்டியார், முல்லை முத்தையா போன்றோரும் வியத்தகு முன்னோடிகள்தாம். அழகான சிறுகதைகள், அடர்த்தியான கவிதைகள் எல்லாம் உண்டு. அன்போடும் கவனமாகவும் கோக்கப்பட்ட இந்த வாசமிகு தென்றல் கதம்பம் உங்களை மகிழ்வித்து ஞானம் பெருக்கட்டும்.

வாசகர்களுக்கு காந்தி ஜயந்தி, நவராத்திரி, மீலாடி நபி நல்வாழ்த்துகள்.

தென்றல்
அக்டோபர் 2021

© TamilOnline.com