அரங்கேற்றம்: ஸ்ரீநிதி விஸ்வநாதன்
ஆகஸ்ட் 14, 2021, சனிக்கிழமை அன்று மாலை செல்வி ஸ்ரீநிதி விஸ்வநாதனின் பரதநாட்டிய அரங்கேற்றம் டப்ளின் உயர்நிலைப் பள்ளியில் உள்ள 'Center for performing Arts and Education' அரங்கில் நடந்தேறியது. நிகழ்ச்சி உலகெங்கும் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது. நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் உற்சாகத்துடன், முகமூடி அணிந்து பாதுகாப்புடன் கண்டு களித்தனர்.

குரு திருமதி தீபா ராஜாமணியின் (கலை இயக்குனர், ஸ்ரீலயா ஸ்கூல் ஆஃப் டான்ஸ், பிளெசண்டன், கலிஃபோர்னியா) ஆசியுடன் ஸ்ரீநிதி நிகழ்ச்சியை கணபதி பூஜை மற்றும் சலங்கை பூஜையுடன் தொடங்கினார். கடவுள் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கிற்று. குரு திருமதி தீபா ராஜாமணி (நட்டுவாங்கம்), திருமதி உத்ரா ராஜாமணி (வாய்ப்பாட்டு), திரு தலைஞாயிறு ஹரிஷ் குமார் (மிருதங்கம்), திரு விக்ரம் ரகுகுமார் (வயலின்) மற்றும் திரு பிரசன்னா ராஜன் (புல்லாங்குழல்) ஆகியோரின் துணை பெரிய பக்கபலம்.

விறுவிறுப்பாக விஜயவசந்தம் ராக புஷ்பாஞ்சலியில் ஆரம்பித்து ஆதி தாளத்திலிருந்து கண்ட சாபு தாளத்திற்கு மாறி "ஸ்ரீவிக்நராஜம் பஜே" என்ற கம்பீரநாட்டை ராகப் பாடலுக்கு அதே விறுவிறுப்புடன் தொடர்ந்தது. அடுத்து, ரசிகப்ரியா ராகத்தில் அமைந்த ஜதீஸ்வரமும், வஸந்தா ராகத்தில் அமைந்த, தஞ்சை பெரிய கோவிலில் கொலு வீற்றிருக்கும் அம்மனைப் பாடும் "பிருஹதம்பிகாயை" என்னும் பதமும் மனதைக் கவர்ந்தன. நிகழ்ச்சியின் நடுநாயகமாக ராமாயணக் கதையைக் கூறும் "பாவயாமி ரகுராமம்" பாடலை வர்ணமாக அமைத்து அபிநயம் மிளிர முழு ராமாயணத்தையும் கண்முன்னே கொண்டு நிறுத்தினார் ஸ்ரீநிதி.

இடைவேளைக்குப்பின் திருநாவுக்கரசரின் "குனித்த புருவமும்" என்ற தேவாரப்பாடலை விருத்தமாக ஆடினாள். அதைத் தொடர்ந்து, பூர்வி கல்யாணியில் "நடமாடும் நாதனடி" என்ற கோபாலகிருஷ்ண பாரதியின் பாடலுக்கு நடராஜ தாண்டவத்தைக் கண்முன் நிறுத்தினாள். அடுத்து, ராகமாலிகையில் அமைந்த "துர்கா லஷ்மி சரஸ்வதி" வந்தனத்தில் அன்னையின் அளவில்லாக் கருணையையும், நளினத்தையும் காட்டி தாண்டவத்துக்கும், லாஸ்யத்துக்கும் இடையிலான வேறுபாட்டை எடுத்துக்காட்டினாள். பிரபலமான "மாடு மேய்க்கும் கண்ணே" என்ற செஞ்சுருட்ப் பாடலில் குட்டிக் கண்ணன் யசோதையுடன் நடத்தும் விஷமத்தனத்தைச் சித்திரித்தது, பார்வையாளர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டது. கமாஸ் ராகத்தில் முருகனைப் பாடும் தில்லானாவில் வேகமாக பின்னிப்பிணைந்த ஜதிகளின் தொகுப்பை அனாயசமாக ஆடி, சுருட்டியில் அமைந்த திருப்புகழுடன் மங்களமாக ஸ்ரீநிதி அரங்கேற்றத்தை நிறைவு செய்தாள்.

உற்சாகத்துடனும் வேகம் குறையாமலும் ஸ்ரீநிதி பரதநாட்டியம் மார்கத்தை செவ்வனே ஆடி முடித்தபோது பார்வையாளர்கள் எழுந்து நின்று ஆரவாரம் செய்து பாராட்டினர். ஸ்ரீநிதியின் சகோதரி அதிதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, மஹதி கலைஞர்களை அறிமுகம் செய்தாள்.

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com