துவங்கியது சொத்துக் குவிப்பு வழக்கு
ஜெயலலிதா 1991-96ல் முதல்வர் பதவியில் இருந்தபோது வருவாய்க்கு அதிகமாக 66 கோடியே 65 லட்சம் ரூபாய் அளவிற்குச் சொத்து குவித்தாக தொடுக்கப்பட்ட வழக்கு சென்னையில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பல்வேறு காரணங்களால் வழக்கின் விசாரணையில் தாமதம் ஏற்பட்டது.

இவ்வழக்கைத் தமிழகத்தில் நடத்தினால் நியாயமான விசாரணை நடைபெற வாய்ப் பில்லை என்றும் எனவே இவ்வழக்கைத் தமிழகத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் தி.மு.க. பொதுச்செயலர் க. அன்பழகன் உச்சநீதி மன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். உச்சநீதி மன்றமும் இவ்வழக்கை பெங்களூர் நீதி மன்றத்திற்குக் 2003-ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி மாற்றியது.

முதலாவதாக இவ்வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோரை மார்ச் 14-ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி நீதிபதி பச்சாப்புரே சம்மன் அனுப்பியிருந்தார்.

ஆனால் இவ்வழக்கில் ஜெயலலிதா, சசிகலா மற்றும் இளவரசி நேரில் ஆஜராக வில்லை. இவர்களது வழக்கறிஞர் என். ஜோதி அவர்களுக்காக வாதாடினார். தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடப்பதாலும், மேலும் மார்ச் 14-ம் தேதியன்று காவல் துறையின் மானியத்திற்கான விவாதம் நடைபெறுவதாலும் ஜெயலலிதா நேரில் ஆஜராகவில்லை என்று அவரது வழக்கறிஞர் கூறினார். இதனை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.

இதற்கிடையில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, தினகரன் மீதான லண்டன் ஹோட்டல் வழக்கு ஆகியவற்றை ஒரே வழக்காக மாற்ற வேண்டும் என்ற மனு ஒன்றை ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரனையும் மற்றொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com