காதில் விழுந்தது......
இந்தியா அதிவேக வளர்ச்சிப் பாதையில் வெற்றிநடை போடுகிறது என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வரும் செய்தி. 1980-லிருந்து வளர்ச்சி தொடர்ந்து விரைந்து வருகிறது. இந்தச் சாதனை 60 ஆண்டு கால மக்களாட்சி நெறிமுறை மற்றும் மரபுகளோடு ஒன்றி வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக விடுதலை பெற்ற நாட்டில் மக்களாட்சிக் கோட்பாடுகளை நிலைநிறுத்துவதில் ஒரு குறிப்பிட்ட தொடக்க காலச் செலவுகள் இருந்திருக்கக் கூடும். ஆனால், ஒரு சமுதாயத்துக்கு மக்களாட்சி ஒன்றே நியாயமான, நிலைத்திருக்கக் கூடிய அடித்தளம். இந்தியா இந்தத் தொடக்க காலச் செலவுகளுக்குப் பின்னர் இப்போது நல்ல பங்கு வீதத்தை ஈட்டுவது போல் தோன்றுகிறது.

இந்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், ஆசியன் வால் ஸ்ட்ரீட் ஜர்னல், 3/4/05

*****


வரி கட்டாவிட்டால் அரசு முரசு கொட்டும்

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராஜமுந்திரி நகரத்தில், பல முறை வேண்டிக் கேட்ட பின்பும் வீட்டு வரி செலுத்தாதவர்களால் 5 கோடி ரூபாய் நிலுவையில் இருந்தது. வட்டி, தண்டம் இவற்றைக் கட்ட வேண்டாம் என்று சலுகைகள் அளித்த பின்னாலும், வீட்டு வரி வந்து சேர்ந்த பாடில்லை. இவர்களை வழிக்குக் கொண்டு வர நகராட்சி ஒரு புதுமையான வழியைக் கண்டு பிடித்தது. வரி செலுத்தாதவர்கள் வீடுகளுக்கு முன்பு தாரை, தப்பட்டை, பறை என்று இடை விடாமல் முரசு கொட்டப் பல ஆட்களை அனுப்பியது நகராட்சி. வரி கட்டும்வரை முரசு கொட்டுவோம் என்கிறது அரசு. வேறு எதற்கும் மசியாதவர்கள் இதற்குப் பயந்து வரி கட்டத் தொடங்கியிருக்கிறார்கள். ஒரு வாரம் பறையடித்த பின்னால் 18% வரியை வசுலித்திருக்கிறது அரசு.

எம் எஸ் என் பி சி

*****


உலகமயமாக்கல் பல நாடுகளின் வருங்காலத்தை மாற்றியிருக்கலாம், ஆனால் நிரந்தரமா என்றால் சொல் வதற்கில்லை என்கிறார் நியால் ·பெர்கூசன். நாளைக்கே கூட உலக மயமாக்கல் மாயமாக மறையலாம். 1870 முதல் முதலாம் உலகப் போர் வரை உலகப் பொருளாதாரம் இன்று இருப்பது போல் இருந்திருக்கிறது. மூலதனம், உழைப்பாளிகள், சரக்கு இவை உலகெங்கும் சரளமாகப் பெயர்ந்து கொண்டிருந்தன. 1914 முதல் 1918 வரை நடந்த கொடூரமான யுத்தம் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. போர் முடிந்த பின்பு உலகப் பொருளாதாரத்தை உசுப்பிவிடும் முயற்சிகள் தோல்வியுற்றன. 1930-களின் பொருளா தாரப் பெரு வீழ்ச்சியும், தொடர்ந்து வந்த இரண்டாவது உலகப் போரும் உலகமயமாக்கலைச் சுக்குநூறாக்கின. அது போல நம்மையும் சரிக்கக்கூடிய நிகழ்ச்சி எங்கே எப்போது நடக்கும் என்பதுதான் கேள்விக்குறி.

நியூயார்க் டைம்ஸ்

*****


நையாண்டிப் பேர்வழி பில் மாஹர் செப்டம்பர் 11க்குப் பிறகு அதைப்பற்றிப் பொருந்தாத நக்கலடித்ததைத் தொடர்ந்து வெள்ளை மாளிகைத் தகவலர் ஆரி ·பிளைஸ்சர் எல்லா அமெரிக்கர்களும் "வார்த்தையை அளந்து பேச வேண்டும்" என்று எச்சரித்தார். உலகத்துடனான அமெரிக்க உறவின் வரலாற்றில் எப்படி செப்டம்பர் 11 தீராத் தழும்பாகியதோ அதே போல செப்டம்பர் 2001 இறுதி வாரம் அமெரிக்கக் கலாச்சார வரலாற்றில் ஒரு தழும்பாகியிருக்கிறது என்பதை உணரத் தொடங்கியுள்ளேன். வெளி நாடுகளில் மக்கள் "உரிமை"களுக்காகப் போராடுகிறோம் என்று அமெரிக்கர்களிடம் பறை சாற்றிக் கொண்டே உள்நாட்டில் அமெரிக்கர்களின் கலாச்சார உரிமைகளைப் பறிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன.

நியூ யார்க் டைம்ஸ் கட்டுரையாளர், ·பிரான்க் ரிச், ஆசியன் ஏஜ், 3/20/05

*****


நாங்கள் மக்களின் வரிப்பணத்தைக் கொட்டி மைக்ரோசா·ப்டின் ஆதிக்கத்தை வலுப்படுத்த மாட்டோம். மைக்ரோசா·ப்டுக்குப் போட்டி இருக்க வேண்டும் என்பதில் அரசுக்குப் பொறுப்பு இருக்கிறது. அதனால்தான் மாற்று மென்பொருள்கள் பிழைக்க வகை செய்ய வேண்டும்.

பிரேசில் தேசியப் பல்கலைத் தலைவர் செர்ஜியோ அமடியூ, மைக்ரோசா·ப்ட் விண்டோஸ¤க்குப் பதிலாகத் திறவூற்று மென்பொருள்களை (open source software) ஆதரிக்க பிரேசில் முடிவெடுத்தது குறித்து.

*****


டிசம்பர் சுனாமி தொடர்பான வெகுசில நல்ல செய்திகளில் ஒன்று கலி·போர்னியாவின் ஆசியர்களின் வியக்கத்தக்க பதில் நடவடிக்கை. 64% ஆசியக் கலி·போர்னியர்கள் சுனாமி நிவாரண முயற்சிகளுக்கு அளித்த நிதி $200 மில்லியனை எட்டியிருக்கிறது. (www.ncmonline.com பார்க்க.) இது அமெரிக்காவெங்கும் திரட்டிய $1.2 பில்லியன் நிதியில் ஆறில் ஒரு பங்கு. 33% அமெரிக்கர் கள் மட்டுமே சுனாமி நிவாரண நிதிக்குப் பணம் கொடுத்திருக்கிறார்கள். மூன்றில் இரண்டு ஆசியக் கலி·போர்னியர்கள் நிதியளித்திருந்தாலும், அவர்களில் 8%க்கு மட்டுமே சுனாமியால் ஏதேனும் ஒருவிதத்தில் பாதிக்கப் பட்டவர்களைத் தனிப்பட்ட முறையில் தெரிந்திருந்தது. சுனாமியால் பாதிக்கப் பட்ட ஆசிய நாடுகளுடன் தொடர்பு உள்ளவர்கள் அளவுக்கு தொடர்பற்ற ஆசியக் கலி·போர்னியர்களும் நிதியளித்திருக்கிறார்கள். ஆசியக் கலி·போர்னியர்களின் இந்த ஒற்றுமை தொடர வேண்டும்.

சான் ·பிரான்சிஸ்கோ கிரானிக்கிள் தலையங்கம், 3/4/05

*****


வேலை போவது, காரை இடிப்பது போன்ற அதிர்ச்சி நிகழ்ச்சிகளை வேறு வழியில்லாமல் தாங்கித்தான் தீர வேண்டும். ஆனால், வேகமாக நகரும் வண்டிகளுக்கு நடுவே மெதுவாக வண்டி ஓட்டுபவர், அங்காடியில் பொருள் வாங்கும் வரிசையில் ஐம்பது சலுகைச் சீட்டுகளைக் கொண்டு வருபவர், சாப்பாட்டு நேரத்தில் அழைக்கும் தொலைவணிகர் என்பவை போன்று ஒவ்வொரு நாளும் நம்மை உறுத்தும் ஆயிரக்கணக்கான சின்னச்சின்ன எரிச்சல்களை எப்படித் தாங்குகிறார்கள் மக்கள்? வார இதழ்களிலிருந்து உதிரும் சந்தா அட்டைகளைத் தொகுத்து பெயர், முகவரி விவரங்களைக் கொடுக்காமல் மொட்டையாக அஞ்சல் பெட்டியில் போடுகிறார் ஒருவர். புதிய சந்தாதாரருக்குப் பதிலாக, வார இதழுக்கு அஞ்சல் தலைச் செலவுதான் எஞ்சுகிறது. இப்படித்தான் மக்கள் சமாளிக்கிறார்கள் என்கிறார் "நோஞ்சான்களின் ஆயுதங்கள்" என்ற புத்தகத்தின் ஆசிரியரும் யேல் பல்கலைப் பேராசிரியருமான ஜேம்ஸ் சி ஸ்காட்.

நியூ யார்க் டைம்ஸ்

*****


இளம்பெண்ணைக் காதலித்து ஏமாற்றிய வாலிபர் கைது

திருமணம் செய்து கொள்வதாக இளம்பெண்ணைக் காதலித்து ஏமாற்றியதாக வாலிபர் கைது செய்யப் பட்டார். செங்குன்றத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கொடுத்த புகார் மனுவில், தன்னை "2 வருடங்களாகக் காதலித்த 21 வயது இளைஞர் தன்னைக் கண்டிப்பாகத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார். இதை நான் நம்பினேன். ஆனால், அவருக்கும் அவரது உறவுகாரப் பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த நான் என்னைத் திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி வேறொரு பெண்ணுடன் நிச்சயம் செய்துள்ளாயே என்று கேட்டதற்கு, என்னைக் காதலிக்கவே இல்லை என்று ஏமாற்றுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். செங்குன்றம் காவல்துறை அந்த வாலிபரைக் கைது செய்து நீதி மன்றத்தில் கொண்டு நிறுத்தியுள்ளனர்.

தினத்தந்தி, 3/23/05

*****


நெடுஞ்செவியன்

© TamilOnline.com