பேனாக்களைச் சாதனைச் சின்னங்களாக...
புதுப்புது எண்ணங்கள் நொடிப்பொழுதில் வந்து கொண்டே இருக்கும்போது அவற்றை எழுத ஒன்றிரண்டு பேனாக்கள் போதா. அதனால்தான் வண்ண வண்ண மைகளில் என் உள்ளத்தில் மட்டுமல்ல ஏடுகளிலும் தீட்டி வைத்து இருக்கிறேன். எனக்கும் என் எழுத்துக்கும் உள்ள உறவை இவை போற்றுவதால் பல பேனாக்களைச் சாதனைச் சின்னங்களாக சட்டைப் பையில் அணிகிறேன்.

பி.பி. ஸ்ரீனிவாஸ், பிரபல பின்னணிப் பாடகர், பத்திரிகைப் பேட்டி ஒன்றில்...

*****


திரைப்படம் என்பது ஒரு கலை; சில திரைப்படங்களுக்கு ஆங்கிலப் பெயர் வைப்பதால் தமிழ் அழிந்துவிடாது. அதுமட்டுமல்லாமல் அது கலை சம்மந்தப்பட்டது, அரசியல் அல்ல. தமிழில் பெயர் வைக்க முயற்சிப்பது நல்லதுதான். அதற்காக அதை எதிர்த்துப் போராடுவது சட்டத்துக்குப் புறம்பானது. நல்லதல்ல.

நானும் நடிகர் சங்க ஆயுள்கால உறுப்பினர்தான். சினிமாவால் தமிழ் அழிந்துவிடும் என்பதை ஏற்கமுடியாது. தமிழ் அவ்வளவு பலவீனமான மொழியல்ல. தமிழ்தான் உலகத்தின் முதல்மொழி. 400 ஆண்டுகள் இஸ்லாமிய ஆதிக்கம் தொடர்ந்து ஆங்கில ஆதிக்கம், தெலுங்கர் ஆதிக்கம், மற்றும் பிறமொழிகளின் ஆதிக்கங்களில் இருந்த பின்னும் தமிழ் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர், பத்திரிகையாளர்கள் சந்திப்பில்...

*****


உங்கள் மூலமாக நான் சம்பாதித்ததை உங்களுக்காகவே செலவிட விரும்புகிறேன். கார்கில், குஜராத்துக்கு நான் நிவாரண நிதி அளித்தபோது ஓட்டுக்காக இப்படிச் செய்வதாகச் சொன்னார்கள். எனக்கு ஓட்டுப் போட வேண்டியது கார்கில், குஜராத்தில் இருப்பவர்களல்ல; தமிழக மக்கள்தான்.

சேவை செய்வது எனது ரத்தத்தில் ஊறிவிட்டது. எனக்கு அரசியலில் யாரும் எதிரி கிடையாது. ஆனால் சிலர் தமிழைப் பற்றிப் பேசாதே என்கிறார்கள். ஏன் பேசக்கூடாது? ஹிந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடியவன் நான். தமிழ் பற்றிப் பேசுபவர்கள், வடமொழி பேசுபவர்களுடன் அரசியல் லாபத்துக்காகக் கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள். மக்களுக்காகச் சேவை செய்யத் தக்க தருணத்தில் நான் வருவேன். அதற்குரிய காலம் வரும்.

விஜயகாந்த், தமிழ்நாடு விஜயகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் நடத்திய இலவச மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்துப் பேசியது...

*****


வளர்ந்த நாடுகளிலும் பாலின பேதம் நிலவுகிறது. தற்போது உலக நாடுகளில் இந்தியாவைப் பற்றிய அபிப்ராயம் சற்று உயர்ந்துள்ளது. இந்தியாவை எந்த நாடும் ஏழை நாடாகப் பார்ப்பதில்லை. அந்த நிலையை இந்தியா கடந்துவிட்டது. பிற நாடுகளில் இந்தியர்கள் மிகவும் கெளரவமாக நடத்தப்படுகின்றனர். இந்தியாவின் பிம்பம் தற்போது கூடியுள்ளது.

கிரண்பேடி, ஐ.பி.எஸ், மகளிர் தினத்தையொட்டிச் சென்னையில் பேசியது...

*****


கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் தேர்தலில் போட்டியிட்டால் அவர்களைத் தகுதி இழப்புச் செய்ய வேண்டும். இதற்கான பரிந்துரைகள் குறித்து அரசுக்கு மீண்டும் எடுத்துரைப்போம். குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடை செய்ய அரசியல் கருத்தொற்றுமை ஏற்படுத்திச் சட்டம் இயற்ற வேண்டும். இதற்குச் சரியான வழியில் சட்டம் இயற்றப்படாவிடில் மீண்டும் மீண்டும் இத்தவறுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். எனவே தேர்தல் கமிஷனின் பரிந்துரைகளை அரசு விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களும், கிரிமினல் ஆதரவு பெற்றவர்களும் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க அரசியல் உறுதிப்பாடு இன்மையே காரணம்.

டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, தலைமைத் தேர்தர் ஆணையர், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்...

*****


உலகில் சுற்றுலாச் சேவை செய்வோருக்கான சங்கம் ஒன்று ஸ்பெயினில் உள்ளது. இங்கு நடைபெறும் கூட்டத்திற்குக் கோட்டு, சூட்டு மாட்டிக் கொண்டுதான் உள்ளே செல்ல முடியும். நான் வேட்டி சட்டையில் சென்றதால் உள்ளே விட மறுத்தார்கள். பிறகு அவர்களாகவே என் பிடிவாதத்தை, என் தேசிய உணர்வை மதித்து, உணர்ந்து, என்னை அனுமதித்த சம்பவம் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று.

வி.கே.டி. பாலன், மதுரா டிராவல்ஸ், மாதப் பத்திரிகை ஒன்றின் பேட்டியில்...

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com