ஜெமினி கணேசன் மறைந்தார்
தமிழ்த் திரைப்பட உலகின் 'காதல் மன்னன்' என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட திரைப்பட நடிகர் ஜெமினி கணேசன் மூச்சுத் திணறல் காரணமாக மார்ச் 21, 2005 அன்று இரவு சுமார் 1:15 மணிக்குச் சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 84. இவருக்கு ஏழு மகள்களும் ஒரு மகனும் இருக்கிறார்கள்.

1920ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் தேதி அன்று வழக்கறிஞர் ஜெனரலாக இருந்த நாகராஜ ஐயரின் மகனாகப் புதுக்கோட்டையில் பிறந்தார் ராமசாமி கணேசன். பட்டப்படிப்பை முடித்த பின் சென்னை தாம்பரத்திலுள்ள கிறித்தவக் கல்லூரியில் விரிவுரையாளராகச் சிறிது காலம் பணியாற்றினார்.

சிறுவயதிலேயே சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஜெமினி கணேசனுக்கு இருந்தது. தற்செயலாக ஜெமினி ஸ்டூடியோவின் ஒளிப்பதிவாளர் ராம்நாத்தின் அறிமுகம் இவருக்கு ஏற்பட, 1940-ல் ஜெமினி ஸ்டூடியோவில் வேலைக்குச் சேர்ந்தார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் இவர் காமிரா சோதனைக்குத் தோன்றி, அதில் தேர்ச்சி பெறாமல் போகவே இவரது ஆசை அப்போதைக்குக் கை நழுவிப் போனது. ஆனால் ஜெமினி ஸ்டூடியோவில் பணியாற்றுகிற சமயத்தில் தான் இவரது பெயர் ஜெமினி கணேசன் ஆனது.

இந்தக் காலக்கட்டத்தில் 'மிஸ் மாலினி' படத்தின் எழுத்தாளருக்கு உதவியாளராகப் பணியில் அமர்ந்தார். இதைத் தொடர்ந்து 'சக்ரதாரி' படத்தில் முதன்முதலாகக் கிருஷ்ணன் வேடத்தில் நடிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. தொடர்ந்து 'மூன்று பிள்ளைகள்' படத்தில் துணை நடிகராக நடித்தார். முதன் முதலாக 'மனம் போல் மாங்கல்யம்' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஜெமினி ஒப்பந்தம் ஆனார். 1953-ல் இப்படம் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து 'கணவேனே கண்கண்ட தெய்வம்', 'மிஸ்ஸியம்மா', 'மாதர் குல மாணிக்கம்', 'கல்யாணப் பரிசு', 'களத்தூர் கண்ணம்மா', 'தேன் நிலவு', 'கொஞ்சும் சலங்கை', 'சுமைதாங்கி', 'கற்பகம்', 'பணமா பாசமா', 'பூவா தலையா' போன் றவை அவர் நடித்த வெற்றிப் படங்களில் சில. அவரது சொந்தத் தயாரிப்பில் உருவாகி அவரே பல வேடங்களில் நடித்த 'நான் அவனில்லை' படம் சிறப்பாகப் பேசப்பட்டது.

அன்றைய தமிழ்த் திரைப்பட உலகின் ஜாம்பவான்களான எம்.ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசனுக்கு இணையாக ஜெமினி கணேசன் பிரபலமாகத் தொடங்கினார். அன்றைய கதாநாயகிகள் சாவித்திரி, சரோஜாதேவி, செளகார் ஜானகி, அஞ்சலி தேவி, காஞ்சனா, தேவிகா, கே.ஆர். விஜயா, ஜெயலலிதா என்று இவரின் படநாயகிகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

ஜெமினி கணேசன் பல திருமணங்கள் செய்தவர். இவரின் முதல் மனைவி அலுமேலு என்கிற பாப்ஜி. இவருக்கு 5 மகள்கள். தற்போது உடல்நலம் சிறிது குன்றிக்காணப்படுகிறார். ஜெமினியின் இரண்டாவது மனைவி பிரபல திரைப்பட நடிகை சாவித்திரி. ஜெமினி - சாவித்திரிக்கு சதிஷ் என்ற மகனும், சாமுண்டிஸ்வரி என்ற மகளும் பிறந்தனர். பழம்பெரும் நடிகை புஷ்பவல்லியை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். ஹிந்தித் திரைப்பட உலகின் கனவுக் கன்னியாகத் திகழும் பிரபல நடிகை ரேகாவும் ஜெமினியின் மகள்தான். ஜெமினியின் மகள் கமலா செல்வராஜ் பிரபல மகப்பேறு மருத்துவராக திகழ்கிறார். மற்றொரு மகள் டாக்டர் ஜெயா ஸ்ரீதர். இவர் எய்ட்ஸ் பற்றிய தொடர் கட்டுரை ஒன்றை ஏழு வருடங்களுக்கு முன்பு ஜுனியர் விகடனில் 'எரிமலை வெடிக்கும்' என்கிற தலைப்பில் எழுதினார்.

1947ம் ஆண்டு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய ஜெமினி கணேசன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இன்றைய கதாநாயகர்களுடன் நடித்த அனுபவமும் இவருக்கு உண்டு. உன்னால் முடியும் தம்பி, பொன்மனச் செல்வன், தொடரும், அவ்வை சண்முகி, மேட்டுக் குடி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவர் நடிப்பில் கடைசியாக உருவான படம் அடிதடி. சில சின்னத் திரைத் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.

© TamilOnline.com