மன உளைச்சல்
காலையில் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவே வேண்டாம் என்று தோன்றுகிறதா? எதைப் பார்த்தாலும் கோபம், வெறுப்பு, சாப்பாடு பிடிக்கவில்லை, வாழ்ந்து என்னத்தைச் சாதிக்கப் போகிறோம் என்று ஓர் எண்ணம் - இப்படியாக மனம் உங்களை அதல பாதாளத்திற்கே இழுத்துச் செல்கிறதா? வேலையே செய்யாத போதும் சோர்வு உங்களை அழுத்துகிறதா? பயப்பட வேண்டாம். இது உங்களுக்கு மட்டுமே ஏற்படும் பிரச்சினை அல்ல.

ஆங்கிலத்தில் 'Depression' என்று சொல்லப்படும் மன உளைச்சல் மிகவும் பரவலாகக் காணப்படும் நோயாகும். நீரிழிவு, இரத்த அழுத்தம் போல இதுவும் ஒரு சாதாரண நோயே. அதிக அளவில் இந்த நோய் தாக்குவதற்குப் பல சாத்தியக்கூறுகள் மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் ஆண்களில் 12 சதவீதத்தினருக்கும் பெண்களில் 25 சதவீதத்தினருக்கும் தம் வாழ்நாளில் இந்த நோய் தாக்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக மருத்துவக் கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. மன உளைச்சல் என்பது மனம் மற்றும் உடல் சார்ந்த அறிகுறிகளை உடையது. அவ்வப்போது ஏற்படும் சோக உணர்வு, மற்றும் நெருங்கியோரின் மரணம் ஏற்படுத்தும் தற்காலிக வருத்த உணர்விலிருந்து இவற்றிலிருந்து மாறுபட்டது மன உளைச்சல்.

இந்த நோய்க்கான காரணங்கள் பல தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மிகக் கடினமான இரசாயன மாற்றங்களால் உடலில் உள்ள Serotonin, Norepinethrine மற்றும் Dopamine என்ற இரசாயனங்களின் அளவுகள் வேறுபடுவதால் இந்த நோய் உருவாகலாம் என்று கணிக்கப்படுகிறது.

நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் (Risk Factors)

1. ஆண்களைவிடப் பெண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது.
2. மன உளைச்சல் ஏற்பட்ட முதல்படி குடும்ப வரலாறு (பெற்றோர், உடன் பிறந்தவர், குழந்தைகள்)
3. முன் அனுபவம் (இதற்கு முன்னால் ஒரு முறை மன உளைச்சல் ஏற்பட்டிருந்தால்).

சமூகத்தில் நெருக்கமான உறவுகள் இல்லாமை, கடினமான, கசப்பான அனுபவங்கள், குடி மற்றும் போதை மருந்துப் பழக்கம், முதல் படியல்லாத உறவினருக்கு மன உளைச்சல் ஆகியவையும் இந்த நோய்க்கான சாத்தியத்தை அதிகரிக்கலாம்.

நோயின் அறிகுறிகள்

குறிப்பாக அளவுக்கு மீறிய சோகம் தலையான அறிகுறியாகும். இந்த நோய் பலதரப்பட்ட முறையில் ஒருவரைத் தாக்கலாம். கீழ் கொடுக்கப்பட்ட 9 அறிகுறிகளில் குறைந்தது 5 அறிகுறிகள் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஒருவரைத் தாக்குமேயானால் அவருக்கு இந்த நோய் இருப்பதாக எண்ணலாம்.

1. நாள் முழுதும் சோகம், குறிப்பாகக் காலை வேளைகளில் இடைவிடாது சோகம்
2. எந்த விஷயத்திலும் ஈடுபாடு இல்லாத நிலை
3. கணிசமான அளவில் உடல் எடை குறைதல் அல்லது கூடுதல்
4. தூக்கமின்மை அல்லது அளவுக்கு அதிக மான தூக்கம்.
5. மனம் பரபரத்துச் செயல்படுதல் அல்லது மிகமிக மெதுவாகச் செயல்படுதல்
6. அளவுக்கு அதிகமான களைப்பு மற்றும் சோர்வு
7. தன்னைப் பற்றிக் குறைவாக மதிப்பிடுதல்
8. ஒரு காரியத்திலும் கவனம் செலுத்த இயலாமை / முடிவு செய்ய முடியாது தவித்தல்
9. தற்கொலை அல்லது மரணம் பற்றி அவ்வப்போது எண்ணங்கள்.

இந்த அறிகுறிகளில் ஐந்துக்கு மேல் அன்றாடம் தொடர்ந்து 2 வாரங்களுக்கு இருக்குமேயானால் உடனடியாக மருத்துவரை நாடுவது நல்லது. இந்த அறிகுறிகளில் 2 அறிகுறிகளாவது தொடர்ந்து ஏற்பட்டு அதனுடன் சில உடல் உபாதைகள் காரணமின்றி இருக்குமேயானால் Minor depression அல்லது Atypical Depression என்ற நோய் இருக்கலாம். இந்த Minor depression நோய் Major Depression நோயைவிடவும் பரவலானாதாகும்.

சிறிய மன உளைச்சல் என்பதால் இது எளிதான நோய் என்று மதிப்பிடமுடியாது. இந்த நோயின் தீவிரம் அதிகமானால் நடைமுறை வாழ்க்கை பாதிக்கப்படும். அதைப் பொறுத்து தீவிரம் கணிக்கப்பட்டு மருந்துகள் அளிக்கப்படும். இரண்டு வருடங்களுக்குத் தொடர்ந்து சோக உணர்வு குறைவான அளவில் தாக்குவதால் ஏற்படும் மன உளைச்சல் வகை Dysthymia என்று சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட கால கட்டத்தில் வருடா வருடம் தாக்கும் ஒரு வகை மன உளைச்சக்கு Seasonal Affective Disorder என்று பெயரிடப்பட்டுள்ளது.

சோகமான சூழ்நிலை காரணமாக ஏற்படும் மன வருத்தம் சில நேரங்களில் கூடுதலாகி மன உளைச்சலை உண்டு பண்ணலாம். நெருங்கியவரின் மரணம் ஏற்படுத்தும் சோகம் ஒவ்வொருவரையும் வெவ்வேறு விதமான முறையில் தாக்கலாம். குறிப்பாக முதிய ஆடவர் தமது மனைவியை இழக்க நேரிட்டால் தற்கொலை முயற்சி செய்து கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளன. மன உளைச்சலில் இன்னுமொரு வகை 'Manic Depression' என்று சொல்லப்படும் வகை யாகும். இந்த வகையில் உள்ளக் கிளர்ச்சியும், உள்ளத் தளர்ச்சியும் மாறி மாறி ஏற்படும்.

மேற்கூறிய அறிகுறிகள் மட்டுமின்றி உடல் உபாதைகள் பலவும் இதனால் ஏற்படலாம். அடிக்கடி தலைவலி, மூட்டு வலி, முதுகு வலி, சோர்வு, களைப்பு, கை கால் குடைச்சல் போன்ற அறிகுறிகளுக்கு மருத்துவரீதியாகக் காரணம் தெரியாதபோது மன உளைச்சல் ஒரு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் தீர்மானிக்கலாம். ஆதலால் இது போன்ற உபாதைகள் ஏற்படுபவர்கள் அவ்வப்போது தங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிப்பது நல்லது. நோயினால் உடல் தள்ளாமை ஏற்படும்போது மனச் சோர்வும் அதிகரிக்கலாம். புற்று நோய் போன்ற கடுமையான வியாதிகள் தாக்கும்போதும் மனச் சோர்வு ஏற்படலாம். Fibromyalgia என்று சொல்லப்படும் ஒரு வித மூட்டு வலி நோய் இருப்பவர்களுக்கு மனச்சோர்வு அதிகமாக ஏற்படலாம்.

பதின்ம வயதினரையும் மனச்சோர்வு அதிகமாக தாக்குகிறது. தலைமுறை இடைவெளியினாலும், இரசாயன மாற்றங்களினாலும் இந்த நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. பதின்ம வயது மகனோ மகளோ யாரிடமும் பேச விரும்பாமல் எப்போதும் தங்களின் அறையிலேயே அடைபட விரும்பினாலோ, நண்பர்களின் போக்குவரத்தையும் தடை விதித்தால் உடனடியாக மருத்துவரை நாடுவது நல்லது. சிறு குழந்தைகளையும் இந்த நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவரவர்கள் வயதிற்குத் தகுந்த நடவடிக்கை களில் மாறுதல் ஏற்பட்டால் மருத்துவரை நாடுவது நல்லது.

மன உளைச்சல் நோய் என்று மருத்துவர்களால் தீர்மானிக்கப்பட்டால் அதற்கான தீர்வு முறைகள் பலதரப் பட்டவை. குறிப்பாக நோயாளிகள் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இது ஒரு தீர்க்க முடியாத மன நோய் அல்ல என்பதேயாகும். முற்காலத்தில் மனம் பற்றிய நோய் ஏற்பட்டாலே அந்த நபரைப் பைத்தியம் என்று முத்திரை குத்தி அவர்களை ஒதுக்கும் வழக்கம் இருந்தது. தற்போது உள்ள மருத்துவ வளர்ச்சியில் மன உளைச்சல் ஒரு சாதாரண நோயாகக் கருதப்படுகிறது. இதற்குத் தகுந்த நிவாரணம் அளிக்கப்பட்டால் நோயாளிகள் முற்றிலும் குணமாகும் வாய்ப்புகள் உள்ளன. பொது மருத்துவர்களே (General Internist) இதற்கான மருந்துகளைக் கொண்டு குணப்படுத்தலாம். அவர்களால் குணப்படுத்த முடியாதபோது மனநல நிபுணரை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

Psychotherapy என்று சொல்லப்படும் Counselling மூலமும் இந்த நோயைக் குணப்படுத்தலாம். SSRI என்று சொல்லப்படும் மருந்துகள் (Antidepressants) இதற்காகப் பரவலாக உபயோகிக்கப்படுகின்றன. இவற்றைத் தவிர வேறு சில உளச்சோர்வு அகற்றும் மருந்துகளும் உள்ளன. நோயாளியின் அறிகுறிகளைப் பொறுத்து மருந்துகள் அளிக்கப்படும். மருந்துகளின் பின்விளைவுகளைப் பற்றி மருந்து உட்கொள்ளுவதற்கு முன்பாக மருத்துவரைக் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக உறக்கச் சுழலை (sleep cycle) இந்த மருந்துகள் தாக்கலாம். சில மருந்துகள் உடலுறவுச் செயல்பாட்டை வேறுபடுத்தலாம். இந்த மருந்துகள் வேலை செய்வதற்குக் குறைந்தது 2-3 வாரங்கள் ஆகலாம். ஆகையால் தொடர்ந்து 1 அல்லது 2 மாதங்கள் உட்கொண்ட பின்னரே மருந்துகளின் செயல்பாட்டைக் கணிக்க முடியும். 6 மாதங்களுக்கு பின்னர் மருத்துவரின் ஆலோசனையின்படி மருந்துகளை நிறுத்தவோ தொடரவோ செய்யலாம். சில சமயங்களில் counselling மற்றும் group therapy மூலமாகவும், சில நேரங்களில் மருந்துகள் மூலமாகவும் சில சமயங்களில் இரண்டையும் சேர்த்தும் மருத்துவர் இந்த நோயைக் குணப்படுத்துவர்.

காலில் கட்டிய சக்கரத்தில் அடுத்த வீட்டு நபரின் முகத்தைக் கூடக் கண்டறியாத இந்த அவசர உலகில் மனநிலையைக் கட்டுக் கோப்பாய் வைத்திருக்கச் சில பழக்கங்கள் உதவுகின்றன. அவற்றில் சில:

1. உடற்பயிற்சி செய்தல்
2. சரியான உணவுப் பழக்கத்தை மேற்கொள்ளுதல்
3. குடி மற்றும் போதைப் பழக்கங்களை அறவே ஒதுக்குதல்
4. பகலில் சூரிய வெளிச்சத்தை அனுபவித்தல். (குளிர் காலத்தில் மன உளைச்சல் நோயை அதிகம் காணலாம்)
5. யோகம் அல்லது தியானம் செய்தல்
6. நல்ல நண்பர்களின் சேர்க்கை
7. தேவைப்படும்போது குடும்ப உறவினரை நாடுதல்
8. தன்னம்பிக்கையை வளர்க்கும் நேர்மறை எண்ணங்கள் (Positive thinking)
9. நல்ல புத்தகங்களைப் படித்தல்

மனதை ஒருமுகப்படுத்தி இலகுவாக்குவதால் மன உபாதைகள் நடைமுறையை பாதிக்கமால் தடுக்கலாம். உடலோடு சேர்த்து மனத்தையும் கவனித்து கொள்ளுங்கள்.

மரு வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com