வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம்: சித்திரைக் கொண்டாட்டம் 2005
ஏப்ரல் 23, 2005 அன்று மாலை சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் சித்திரைக் கொண்டாட்டம் 2005 என்ற கலைநிகழ்ச்சி மூலம் பார்த்திப ஆண்டை வரவேற்றது. இது சான் ஓசே சி.இ.டி. கலையரங்கில் நடைபெற்றது. இந்த நாட்டில் வேரூன்றும் நாளைய தலை முறையை எண்ணி உருவாகும் 'தமிழ்ப் பண்பாட்டு மையம்' அமைப்புக்கு நிதி திரட்டிய நிகழ்ச்சி இது. இளைய தலை முறையினரையும் கவரும் வண்ணமாகத் தமிழ்த் திரையிசை, அதை ஒட்டிய நடனங்கள், இரண்டையும் பிணைக்கும் இழையாக ஒரு நகைச்சுவைத் தொடர் நாடகம் என்று மகிழ்ச்சிக் கதம்பமாக நிகழ்ச்சி அமைந்திருந்தது.

கலி·போர்னியா தமிழ்க் கழகப் பள்ளிச் சிறுவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. இடையிடையே 'உங்களுக்குத் தெரியுமா?' என்ற தலைப்பில் மன்றத்தின் வரலாற்றையும் சாதனைகளையும் ஒளிப்படமாகத் திரையிட்டது சுவையாக இருந்தது.

தமிழ் மன்ற நிகழ்ச்சிகளில் விடாமல் பங்கேற்று வந்திருக்கும் மெல்லிசைப் பாடகர் பிரபுவின் 9 வயது மகள் ஸ்ருதி முதல் பாடலிலேயே கைதட்டலை அள்ளிச் சென்றாள். பிரபுவும் தன் விசிறிகளை ஏமாற்றவில்லை. கனடாவிலிருந்து வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விசையிசைக் கலைஞர் (கீ போர்டு) அரவிந்த் முருகேசன் பல முன்னணித் தமிழ்த்திரைப் பாடகர்களுடன் வாசித்துப் புகழ் பெற்றவர். ஜெயஸ்ரீ, மீரா, ஸ்ரீதேவி ஆகியோரின் குரல் வளம் ரசிகர்களைக் கவர்ந்தது.

ராஜாமணி பல விறுவிறுப்பான பாடல்களைப் பாடியது மட்டுமல்லாமல், குழு நடனங்களை இயக்கி, ஆடவும் செய்தார். வளைகுடாப் பகுதியில் மேடை நடனங்களைக் கண் கவரும் கலையாகப் பரப்புவதில் வெற்றி கண்டிருக்கும் தில்லானா நடனக்குழு, சன்ஹிதி நாட்டியக் குழுவின் முத்திரை இந்த நடனங்களில் தெரிந்தது. ஸ்ரீலு, பிரியா, ரூபா போன்ற நட்சத்திரக் கலைஞர்கள் இந்த நடனங்களுக்கு மெருகேற்றினார்கள்.

பாடல்களையும், நடனங்களையும் பிணைத்துச் சொல்லிய தொடர் நாடகத்தின் நையாண்டி கலகலப்பூட்டியது. அண்மையில் வந்த வெற்றிப் படங்களான 'காதல்', 'ஆட்டோகிராஃப்' படங்களைக் கலந்து, தமிழ்த் திரைப்படங்களையும், தொலைக்காட்சித் தொடர்களையும் கிண்டல் செய்த மசாலா நாடகம், அவ்வப்போது முன்னரே ஒளிப்பதிவு செய்த திரைப்படத்துடன் கலந்து மலைப்பூட்டியது. திரைப்படத்தைத் தொகுத்த ஸ்ரீதரன் மைனரும், அவரோடு நாடகத்தை எழுதிய இயக்கிய ராஜாமணியும், கருணாகரனும் ஒரு புதிய சிகரத்தைத் தொட்டு விட்டார்கள். ஒரே காட்சியில் சொர்ணாக்காவாகத் தோன்றிக் கலக்கிய உமாமகேஸ்வரி வளைகுடாப் பகுதியின் புதிய நகைச்சுவை நட்சத்திரம்.

சித்திரைக் கொண்டாட்டம் மீண்டும் எப்போது வரும் என்று ஏங்க வைக்கும் முத்திரைக் கொண்டாட்டம் என்றால் தப்பில்லை.

செங்கணான்

© TamilOnline.com