தேர்தல் வன்முறைகள்
சமீபத்தில் தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 620 இடங்களுக்கான தேர்தலில் நடந்த வன்முறைகளும், கலாட்டாக்களும் பொதுமக்கள் மத்தியில் இருகழகங்களின் மேல் அதிருப்தியும், அவநம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளன. இத்தேர்தலில் ஆளும் அ.தி.மு.க. அதிக இடங்களைக் கைப் பற்றியுள்ளது. வன்முறை அதிகம் நடைபெற்ற சென்னையில் 110, 131 வார்டுகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. சென்னை மற்றும் மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சித் தேர்தலில் நடந்த வன்முறையைக் கண்டித்து அந்தப் பகுதிகளில் தேர்தலை தி.மு.க. கூட்டணி கட்சிகள் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாகச் சென்னை ஆயிரம்விளக்குத் தொகுதியில் உள்ள 110வது வார்டு தேர்தலில் ஒட்டுப்பதிவு தொடங்கிய ஒருமணி நேரத்திற்குள் பிரச்சினை ஆரம்பமாயிற்று. அடுத்தடுத்து இருதரப்பிலும் சாலைமறியல், ஒருவரை தாக்குதல் போன்ற அருவருப்பான காட்சிகள் அரங்கேறின. தி.மு.க.வின் முக்கியத் தலைவர்களான மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி போன்றவர்கள் ஆளும் அ.தி.மு.க.வின் "தேர்தல் அராஜகத்தை"க் கண்டித்துப் போராட்டம் நடத்த, இவர்களுக்குப் போட்டியாக அ.தி.மு.க. அமைச்சர்கள் வளர்மதி, பொன்னையன் போன்றோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். காவல்துறை இருதரப்பினரையும் கைது செய்தது.

சென்னை மாநகராட்சி இடைத்தேர்தலில் ஓட்டுச்சாவடி அதிகாரிகளாக அ.தி.மு.க. சார்புடைய தொழிற்சங்கத்தைச் சேர்ந்த வீட்டுவசதி வாரிய ஊழியர்கள் நியமிக்கப் பட்டுள்ளதாகவும், அவர்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. வேட்பாளர் ராமமூர்த்தி சார்பில் தாக்கல் செய்த மனுவை, நீதிபதிகள் கற்பகவிநாயகம், நாகப்பன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. விசாரணையின் முடிவில் 17 பேரை நீக்குவதற்கு நீதிபதிகள் உத்தர விட்டது மட்டுமல்லாமல் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் தேர்தலைச் சுமுகமாக நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால் தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் சாலை மறியல்களும், கல்வீச்சுகளும் நடந்தேறின. அமைச்சர்களே நேரடியாகச் சாலைமறியலில் ஈடுபட்டதையடுத்துச் சென்னை நகரப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. தேர்தலின் போது நடந்த விவரங்களைத் தி.மு.க. வேட்பாளர்கள் மனுக்களாகத் தாக்கல் செய்தனர். அந்த மனுவின் மீதான விசாரணையின் போது ''சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய அமைச்சர்களே சாலைமறியலில் ஈடுபடு வதை" சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்ததோடு, "அமைச்சர்களின் நடவடிக்கை யினால் அரசுக்கு நல்ல பெயர் வருமா?" என்று கேள்வியும் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் நடத்திய சாலைமறியல் போராட்டத்தினால் அன்று காலை சுமார் 3 மணிநேரம் மக்கள் கொளுத்தும் வெயிலில் சாலைகளில் எந்தப் பக்கமும் செல்லமுடியாமல் தவித்தனர். அலுவலகத்திற்குக் குறித்த நேரத்திற்குச் செல்ல முடியாமல் அல்லல்பட்டதில் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளின்மேல் கோபமும், எரிச்சலும், அவநம்பிக்கை யும்தான் ஏற்பட்டது என்றால் அது மிகையல்ல.

புதிய வீராண விரிவாக்கத் திட்டம் வாபஸ்!

சென்னை நகரின் குடிநீர்ப் பிரச்சினையை சமாளிப்பதற்காக அ.தி.மு.க. அரசு 2001ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் மறுபடியும் பதவியேற்றதையடுத்து புதிய வீராணம் திட்டம் கையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் அப்பகுதியில் நிலத்தடி நீர் குறைந்து போகும் என்றும், வீராணம் ஏரியில் விவசாயத்திற்கே உரிய தண்ணீர் இல்லாத நிலையில் சென்னைக்குக் குடிநீர் வழங்க முடியாது என்றும் பல்வேறு எதிர்க்கட்சிகளும், அப்பகுதிவாழ் விவசாயிகளும் ஆட்சேபணை தெரிவித்தனர். தமிழக அரசு இத்திட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்தது. நெய்வேலி நீர்ப்படுகையில் போடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளின் மூலம் தினசரி 75 மில்லியன் லிட்டர் நீர் சென்னைக்கு எடுத்து வரப்பட்டது. இதற்கிடையில் சென்ற ஆண்டு பெய்த கனமழையால் வீராணம் ஏரி நிரம்பியதையடுத்து, சென்னைக்குக் குழாய் மூலம் தண்ணீர் வந்தது.

இதற்கிடையில் சென்னையின் தேவைகளுக்கு இத்திட்டம் மட்டும் போதாது என்று முடிவெடுத்தது தமிழக அரசு. ஏரிகள், கிருஷ்ணா நதி நீர், புதிய வீராணம் ஆகியவற்றுடன் கடல்நீர் மூலமும் நீர் வழங்க முடிவு செய்தது. புதிய வீராணம் விரிவாக்கத் திட்டத்தின் மூலம் கொள்ளிடம் ஆற்றுப்பாசனப் பகுதியிலிருந்து தண்ணீர் எடுத்து வீராணத் திட்டத்துடன் இணைத்து அளிக்க முடிவு செய்தது. ஆனால் இத்திட்டத்தை அப்பகுதி விவசாயிகளும், மக்களும் கடுமையாக எதிர்த்தது மட்டுமல்லாமல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளையும் தொடுத்தனர். ஆனால் உயர்நீதி மன்றம் இவ்வழக்குகளைத் தள்ளுபடி செய்ததோடு தமிழக அரசு இத்திட்டத்தை நிறைவேற்றலாம் என தீர்ப்பளித்தது.

இத்திட்டத்தை எதிர்த்து அப்பகுதி விவசாயிகளும், மக்களும் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டு வதாக அறிவித்தும் அப்பகுதி மக்களிடையே எதிர்ப்பு குறையாத நிலையில் திடீரென்று அரசு இத்திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, ''விவசாயிகள் கவலையடைந்துள்ளதால் புதிய வீராணம் விரிவாக்கத் திட்டம் நிறைவேற்றத்தை நிறுத்தி வைக்க உத்தர விட்டுள்ளேன்...'' என்று அறிவித்ததையடுத்து இப்பிரச்சனை முற்றுப்பெற்றது.

புதிய வீராணம் விரிவாக்கத் திட்டம் இல்லாமலேயே சென்னை நகருக்கு கோடை யிலும் குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு இத்திட்டத்தைக் கைவிடுவதாக ஜெயலலிதா கூறினாலும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டுதான் இம்முடிவு எடுக்கப்பட்டதாகக் கருத்து ஒன்று நிலவுகிறது.

''இது மக்களின் சக்திக்கு கிடைத்த வெற்றி..'' என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com