தொடர்பற்று... செயலிழந்து...
எங்கள் குடும்ப நண்பர் தன் மகன் திருமணத்திற்கு பெண் பார்த்து நாளும் குறித்துவிட்டார்கள். அவர்கள் எங்கள் தாய், தந்தை போலத்தான் இருந்தார்கள். நான் திருமணம் செய்து கொண்டு இந்த ஊருக்கு காலடி எடுத்து வைத்தது முதல் அவர்கள் வீட்டில்தான் இருப்பேன். நான் கர்ப்பமாக இருந்த போது வளைகாப்பு சடங்குகள் எல்லாம் அங்குதான். அந்த அளவுக்கு அவர்களிடம் ஒட்டுதல்.

இரண்டு வருடங்களுக்கு முன் என் கணவர் வேலை காரணமாக நாங்கள் வேறு ஊருக்கு மாற்றி வந்துவிட்டோ ம். இருந்தாலும், அவ்வப்போது ஆண்ட்டி, ஆங்கிளை-ஐ கூப்பிட்டு பேசுவேன். அந்தப் பையன் திருமணத்திற்கு இந்தியா போவதற்குகூட தயாராக இருந்தோம். இந்த மே மாதத்தில் ஒரு cruise பயணம் போய்விட்டு பத்து நாட்கள் நன்றாக என்ஜாய் பண்ணிவிட்டு நான், என் கணவர், குழந்தைகள் திரும்பி வந்த போது, அதிர்ச்சியான செய்தி. அந்தப் பையன் ஒரு விபத்தில் இறந்துவிட்டான் என்று. உடனே தொடர்பு கொண்டோ ம். வாய்ஸ் மெயில்தான் வருகிறது. எங்கள் பொது நண்பர்கள் மூலமாக போன் செய்தோம். அவர்கள் உடனே ஊரைவிட்டு இந்தியா கிளம்பி போய்விட்டார்கள். 'காரியம்' செய்வதற்கு என்று சொன்னார்கள். இந்த ஊரில் உள்ள உறவினர் நம்பரைக் கண்டுபிடித்து அவர்களிடம் தொடர்பு கொண்டோ ம். எங்கேயோ காசி, கயா என்று போய்விட்டார்கள் என்று சொன்னார்கள். ஆக மொத்தம் மூன்று மாதம் ஆகியும் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. மனசாட்சி மிகவும் உறுத்துகிறது. எவ்வளவோ உதவிகள் பெற்றிருக்கிறோம். அவர்களுக்கு வேண்டிய சமயத்தில் உதவி புரிய அல்லது ஆறுதலாக இருக்கக்கூட முடியாமல் போய்விட்டதே
என்று... அந்தப் பையன் என் கணவருக்கு ஒரு தம்பி போல. மிகவும் ஒட்டி இருப்பான். இப்படி சின்ன வயதில் போய்விட்டானே என்ற துக்கம் வேறு. ''வயதான காலத்தில் அவர்களைப் பார்த்துக் கொள்ள நாங்கள் இருக்கிறோம்'' என்று அவர்களைப் பார்த்து சொல்லி எங்களிடமே வைத்துக் கொள்ளகூட நாங்கள் விரும்புகிறோம். எப்படி வழி?

இப்படிக்கு...

அன்புள்ள சிநேகிதியே...

தகவல் தொடர்பு தொழில்நுட்பம் எவ்வளவுதான் விரிவடைந்து கொண்டிருந்தாலும், இது போன்று சம்பவங்கள் நேரும் போது தொடர்பற்று, செயலிழந்து போய்விடுகிறோம். நேரம், விதி என்ற வார்த்தைகளுக்கு சக்தி மிகுந்து போகிறது, இதுபோன்ற வேதனைகளை சந்திக்க நேரும் போது. வயதான காலத்தில் வயது வந்த ஒரே மகனை இழப்பது - இதைப் படிக்கும் ஒவ்வொரு வாசகர் உள்ளத்திலும் சில விநாடிகளாவது இதய வலியின் ஒலி தீர்க்கமாக கேட்கும். All of us are in a helpless, hopeless situation in these moments.

அவர்களுக்கு நீங்கள் விடுமுறையை கழிக்கப் போயிருப்பது தெரிந்திருந்தால், உங்களைப் புரிந்துக் கொண்டு இருப்பார்கள். நீங்கள் அருகில் இல்லாதது, அவர்களுக்கு இன்னொரு இழப்பாக தெரிந்திருக்கும். வாழ்க்கையில் கசப்பும். சோகமும் அனுபவிக்கும் போது, சிலர் மக்கள் வருகையை விரும்பமாட்டார்கள். எல்லாவற்றையும் விட்டுவிட்டு போக வேண்டும் என்ற ஒரு துடிப்பு இருக்கும். ஒரு இலக்கு இல்லாமல் சஞ்சாரம் செய்ய மனது தூண்டும். மனிதர்கள் சென்று, மனம் மரத்துப் போன பிறகு, கிளம்பி சென்ற இடத்திற்கு திரும்பி வந்தடைவார்கள். மனம் சந்தோஷத்தில் இல்லாவிட்டாலும், ஒரு நிதானத்திற்கு வருவர்.

நீங்களும், உங்கள் கணவரும் அவர்களுக்கு வேண்டியதை செய்ய வேண்டும் என்று நினைப்பது, ஒரு அருமையான எண்ணம். அதை செயவில் நீங்கள் ஆற்றினால் அது இன்னும் அருமை. உங்கள் முயற்சியை தொடருங்கள். ஒருநாள் அவர்களிடம் பேசவோ. சந்திக்கவோ கூடும். அப்போது உங்கள் திட்டத்தை எடுத்துச் சொல்லுங்கள். அவர்கள் உங்களுடன் தங்க விரும்புகிறார்களோ இல்லையோ, தாங்கள் அனாதை இல்லை என்ற நினைப்பே அவர்களுக்கு வாழ்க்கையில் சிறு உற்சாகமும், வாழ வேண்டும் என்ற உந்துதலும் கொடுக்கும். நாம் எல்லோருமே இது போன்ற உண்மையான அன்புக்குத் தானே ஏங்குகிறோம். அவர்கள் வலி போகாது. ஆனால் நீங்கள் ஒத்தடம் கொடுக்கும்போது, வலியை தாங்கும் சக்தி கிடைக்கும்.

வாழ்த்துக்கள்

சித்ரா வைதீஸ்வரன்

© TamilOnline.com